கொஞ்சம் நேரம் ஒதுக்குங்க

" ஏங்க சாப்பாடு ரெடியா இருக்கு. நான் ஆபிஸ் கிளம்புறேன். வந்து சாப்பிட்டுக்கோங்க. ",என்று தன் கணவருக்கு வாட்சாப்பில் மெசேஜ் அனுப்பிவிட்டு ஆபிஷுக்கு கிளம்பினார் வசந்தா.

சிறிது நேரத்தில் வாட்சாப் சேதியை பார்த்துவிட்டு ஒரு ஸ்மைலியை அனுப்பிவிட்டு தன் அறையைவிட்டு வெளியே வந்தார் விமல்.

சாப்பாட்டு மேசையில் சாப்பாடு தயாராக இருந்தது.
உணவை எடுத்து வைத்து சாப்பிட்ட விமல் தன் மனைவிக்கு, " சாப்பாடு நல்லா இருந்தது. கொஞ்சம் உப்பு குறைச்சு போடு. ",என்று வாட்சாப்பில் சேதி அனுப்பிவிட்டு கல்லூரிக்கு கிளம்பினார்.

விமல் ஒரு கல்லூரியில் பேராசியராக பணியாற்றுகிறார்.
வீட்டில் அதிகமான நேரத்தை தன் மாணவர்களுக்காக நோட்ஸ் எடுப்பதிலே செலவிடுவார்.
அவர் மனைவி வசந்தா ஒரு அலுலகத்தில் மார்க்கெட்டிங் மேனேஜராக பணியாற்றுகிறார்.
கணவன் மனைவி இருவரும் அதிகமாக பேசிக் கொண்டது வாட்சாப்பில் தான்.

இருவரும் முகத்தைப் பார்த்துப் பேசிக் கொண்டது கல்யாண புதுசில்.
இருவரும் வேலைக்குச் செல்வதால் இப்போதெல்லாம் அவர்கள் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்து பேசக் கூட நேரமில்லை.
வசந்தா எந்த நேரமும் வாட்சாப்பில் தான் இருப்பார்.
விமல் கல்லூரி பாடவேளைகள் தவிர மற்ற நேரங்களில் வாட்சாப் வந்துவிடுவார்.

இருவருக்கும் ஒரு மகன் இருக்கான்.
அவன் பெயர் மகேஷ்.
அவனுக்கு பத்து வயது ஆகி இருந்தது.
அப்பா, அம்மா அன்பிற்காக ஏங்கும் சபல பிள்ளையாக இருந்தான்.
அவன் வீட்டில் இருந்தால் தங்களால் கவனிக்க முடியாது என்று ஹாஸ்டலுக்கு அனுப்பிவிட்டார்கள்.

ஐந்தாம் வகுப்பு படிக்கும் மகேஷ் நன்றாக படிக்கக்கூடிய பையன்.
ஆனால், எப்போதும் எதையோ பறிகொடுத்தாற் போல் இருப்பான்.

கூட படிக்கிற பசங்களோட அம்மா தன் பசங்களுக்கு மதிய உணவு இடைவேளையில் உணவு ஊட்டிவிடுவதை பார்த்தால் அவனுக்கும் ஏக்கம் அதிகரிக்கும்.

இப்படியா நாட்கள் நகர ஐந்தாம் வகுப்பு முடிந்து விடுமுறை நாட்களில் விட்டிற்கு செல்ல விரும்பினான்.
அதனால் ஹாஸ்டலில் இருந்த அழைபேசியில் தன் அம்மாவுக்கு கால் செய்தான்.

" ஹலோ "

" ஹலோ அம்மா! எனக்கு லீவ் விட்டாங்க.
இந்த விடுமுறைக்காவது என்னை வீட்டுக்கு கூட்டிட்டு போங்கம்மா, ப்ளீஸ். "

" சாரிடா அம்மாவுக்கு நிறைய வேலை இருக்கு. என்னால வர முடியாது. சும்மா சும்மா அம்மாவை தொந்தரவு செய்யாத ",
அழைப்பு துண்டிக்கப்பட்டது.

சிறுவனின் இதயம் உடைந்து போனது.
தன் கடைசி நம்பிக்கையாக தன் அப்பாவை அழைத்தான்.
அவர் மாணவர்களுக்கு ஸ்பெஷல் கிளாஷ் எடுத்துக் கொண்டிருந்ததால் போனை எடுத்து பேசாமல் கட் பண்ணிவிட்டார்.

சிறுவனுக்கு மிகவும் கஷ்டமாயிடுச்சு,
விம்மி விம்மி அழ ஆரம்பித்தான்.
அருகில் இருந்த வார்டன் கந்தசாமி, " ஏன்பா அழுவுற? ", என்றார்.

தன் அழுகையை நிறுத்திவிட்டு, கண்களை துடைத்துக் கொண்டு, " அப்பா அம்மாவைப் பார்ககனும். ஸ்கூல் லீவ் விட்டாங்க. வீட்டுக்கு வாரேன், கூட்டிட்டு போங்கனா அம்மா தொந்தரவு பண்ணாதனு சொல்லுறாங்க. அப்பா போனை கட் பண்ணிட்டாங்க. ", என்றான் மகேஷ்.

" தம்பி, நீ கவலைப்படாத.
உங்க அப்பா எதாவது வேலை இருந்திருப்பாங்க.
ஈவ்வினிங் நான் கால் பண்ணி உங்க அப்பாகிட்ட பேசிறேன்.
நாளைக்கே வந்து கூட்டிட்டு போவாங்க. ", என்றார் ஆறுதலாக.

உடனே மகேஷ், " ரொம்ப நன்றி அங்கிள். ",என்று கூறிவிட்டு சந்தோஷமாக போனான்.

சிறிது நேரம் கழித்து ஸ்பெஷல் கிளாஷ் முடிந்துவிட்டதால், விமல் தன் கைபேசியை எடுத்து ஹாஸ்டல் நம்பருக்கு போன் செய்தார்.

போனை எடுத்த கந்தசாமி, " வணக்கம் சார், ஹாஸ்டல் வார்டன் கந்தசாமி பேசுறேன். ", என்றிட, " நான் விமல் பேசுறேன். மகேஷோட அப்பா. ",என்று மறுமொழி கூற,
" உங்க பையன் மகேஷுக்கு ஸ்கூல் மே மாத விடுமுறை விட்டிருக்காங்க.
இந்த விடுமுறை அவன் தன் அப்பா, அம்மாவோட கழிக்க விரும்புறான். ",என்றார்.

" ஓ! அப்படியா சார்!.
என்னால் வந்து கூட்டிட்டு வர முடியாத சூழல்ல இருக்கேன்.
என் வேலை அப்படி! ", என்று விமல் கூட, " மகேஷோட அம்மாவை வந்து கூட்டிட்டு போக சொல்ல முடியுமா?
ஏனென்றால் பையன் அழுகிறான். ",என்று கந்தசாமி கூற,
" சாரி சார். அவங்களும் வேலைக்கு போறாங்க. அதுனால் வர முடியும்னும் எனக்குத் தோணல. ",என்று விமல் கூறினார்.

அதைக்கேட்ட கந்தசாமிக்கு, " பெத்த பிள்ளையைவிட பணம் தான் முக்கியம் என்று நினைக்கிறார்கள் ",என்று சிந்தனையில் பொறித்தட்டியது.

வந்த கோபத்தை அடக்கிக் கொண்டு, " ஒகே சார். ", என்று அழைப்பைத் துண்டித்துவிட்டு அமர்ந்த கந்தசாமிக்கு சிறுவன் மகேஷின் அழுத முகம் கண்முன் வந்தது.

மகேஷிற்கு தான் வாக்கு கொடுத்திருப்பதும் ஞாபகம் வர என்ன செய்வதென்று சிந்தித்தார்.

மறுநாள் காலை கந்தசாமியிடம் ஓடி வந்த சிறுவன் மகேஷ், " அப்பா வராங்களா? ", என்றான் உற்சாகமாக.
" இல்லப்பா. உங்க அப்பாவுக்கு வேலை இருக்குனு சொல்லிட்டாரு. ",என்றார் கந்தசாமி.

சிறுவனி முகம் சுருங்கியது.
அப்பா, அம்மாவின் மீது வெறுப்பாக வந்தது.

" தம்பி, உங்க வீட்டு அட்டரஸ் தெரியுமா? நான் கொண்டி விடுறேன். ",என்றார்.

உடனே மகேஷ் தனது டைரியில் இருப்பதாகக் கூறி டைரியை எடுத்துட்டு வந்து காட்டினான்.
கந்தசாமி தனது வேலையை மற்றொரு வார்டனிடம் ஒப்படைத்துவிட்டு, தனது இருசக்கர வாகனத்தில் மகேஷைக் கூட்டிக் கொண்டு அந்த டைரியில் இருந்த முகவரிக்குச் சென்றார்.

காலை வேளையாதலால் வசந்தா வேலைக்குக் கிளம்பிக் கொண்டிருந்தார்.
பைக்கில் இருந்து இறங்கிய மகேஷ் வேகமாக ஒடிச் சென்று அம்மா என்றபடி கால்களைக் கட்டிக் கொண்டான்.

மகனைக் கண்ட தாய், சந்தோஷம் பொங்கிட,
" தனியாவா வந்த? ", என்றிட, மகேஷ் கந்தசாமியை கை காட்டினான்.
" உள்ளே வாங்க. ", என்று கூறிவிட்டு, வசந்தா மகனோடு உள்ளே செல்ல,
விமல் தன் அறையிலிருந்து வெளியே வந்தார்.
அம்மாவின் கையை விட்டு ஓடிப்போய் அப்பா என்று கட்டிக் கொண்டான் மகேஷ்.
விமலும் ஆச்சர்யப்பட்டார்.
பிறகு கந்தசாமிக்கு நன்றி சொல்ல, அவர் நன்றியை மறுத்து, "
காசு, பணத்தைவிட நம்ம குழந்தைங்க தான் முக்கியம்.
குழந்தைகளுக்காக நேரம் ஒதுக்குங்க. ",என்றார்.
அன்போடு வாழ்க.

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (5-Oct-18, 6:13 pm)
பார்வை : 466

மேலே