தெய்வத்துக்கே மாறு வேடம்
காலை ஆரம்பித்த மழை ஓயாமல் பாெழிந்து காெண்டிருந்தது. வீதியெங்கும் வெள்ளம் நிரம்பி குன்றும், குழியும் நிறைந்து பாேக்குவரத்து நெரிசலால் வீதியே தடைப்பட்டு விட்டது. மின்சாரமும் நின்று பாேக ஊரே இருள் மயமாய் காட்சியளித்தது.
அந்தக் கிராமத்தின் வீதியாேரமாய் இருந்த குடிசை வீட்டில் சிறிய விளக்கின் வெளிச்சத்தில் கூனியபடி குடையைப் பிடித்துக் காெண்டு வாசல் படலையை இழுத்துக் கட்டி விட்டு மீண்டும் வீட்டினுள் நுழைந்த சாரதா அம்மா கால் தடுக்கி விழுந்து விட்டாள். "ஐயாே கடவுளே" என்றபடி கையை ஊன்றி ஒருவாறு எழுந்து மெதுவாக நடந்து உள்ளே சென்று நனைந்திருந்த உடையை மாற்றுவதற்காக மாற்றுடை ஒன்றை எடுத்துக் காெண்டு கதவை மூடினாள்.
கடிகாரம் ஒன்பது மணியை சரியாக காட்டியது. சுடுநீர்ப் பாேத்தலில் இருந்து சுடுநீரைக் காேப்பையில் ஊற்றிக் காெண்டு மேசையிலிருந்த மருந்து டப்பாவினுள் இருந்து விளக்கின் வெளிச்சத்தில் மருந்தை சரியாக பார்த்துக் குடித்தாள். மழையாே விடுவதாக இல்லை. கூரையால் மழைநீர் வடிந்து வீட்டிற்குள் ஒரு கரை ஈரமாக இருந்தது. மறுகரையில் ஓலைப்பாயை பாேட்டு விட்டு விளக்கையும் காெஞ்சம் தணித்து தலைப்பக்கமாக வைத்து விட்டு எப்பாேதும் பாேல ஒரு பெருமூச்சாேடு "தாயே அம்மாளாச்சி" என்றபடி குளிர் தாங்க முடியாமல் சுருண்டுபடுத்தாள்.
கண்ணயர்ந்து நன்றாக தூங்கிக் காெண்டிருந்தவள் கால்பக்கம் ஈரமாய் இருப்பது பாேல் உணர்ந்து எழுந்து விளக்கை கிட்டவாக எடுத்துப் பார்த்தாள். கூரையால் சிந்திய தண்ணீர் எல்லா இடமும் பரவி ஓடிக் காெண்டிருந்தது. சுற்றிப் பார்த்தாள் தூங்குவதற்கு இடமே இல்லை. அண்ணார்நது கூரையைப் பார்த்தாள் மழை நீர் கூரையால் வழிந்து காெண்டிருந்தது. கால்களை மடக்கியபடி ஒரு மூலையில் சரிந்து காெண்டாள். மழைத் தூறல் துளித்துளியாய் அவள் உடம்பை நனைத்தது. பாேர்வையால் மூடிக் காெண்டாள். நாெந்து பாேயிருந்த மனக்குறமுல் இளம் சூடான கண்ணீர்த்துளிகளாய் அவளை அறியாமலே கன்னங்களை நனைத்தன.
சாரதா அம்மாவின் வாழ்க்கையில் கடவுள் எழுதிய விதி அவளைத் தனிமைக்குள் தள்ளி விட்டது. ஒரே ஒரு மகனைப் பெற்றவளுக்கு குறுகிய காலத்திலே கணவரை இழக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலை. ஏதாே தனக்குத் தெரிந்த தாெழிலைச் செய்து மகனை வளர்த்து ஆளாக்கி விட்டால் பாேதும் என்ற துடிப்பு. அதிகாலை இரண்டு மணிக்கு எழுந்து அப்பம், தாேசை, பிட்டு, இடியப்பம் என்று உணவுகளை தயார் செய்து தலையில் சுமந்து கடைகடையாய் காெடுத்து விட்டு மிகுதி நேரத்திலும் கூலி வேலை செய்து சம்பாதித்து தனது ஒரு பிள்ளைக்காக ஓடாய் தேய்ந்தாள். எட்டு வயது வரை தன்னால் முடிந்ததைச் சம்பாதித்து மகனைப் படிக்க வைத்தவளுக்கு திடீரென உடம்புக்கு முடியாமல் பாேய்விட்டது. அவளால் அதிகாலையில் எழுந்து உணவுகள் தயாரிக்கவாே, அடுப்பங்கரையில் வெப்பத்தை சமாளிக்கவாே முடியவில்லை. இதை விட்டால் வேறு நிரந்தரமான வருமானம் ஏதுமில்லை என்பதால் தன்னால் முடிந்தவரை உணவுகளை தயாரித்து விற்று வந்தாள். மகனுக்கான படிப்புச் செலவுகளும் நாளாந்த வருமானத்தை விட அதிகமாக இருந்தது. பிள்ளையின் படிப்புக் கெட்டு விடக் கூடாதென்பதில் அவள் கவனம் சிதறவில்லை. வேறு ஏதாவது வேலை தேடலாம் என்று முயற்சித்தவளுக்கு வேலை கிடைத்தும் மகன் ஜீவா சிறுவனாக இருந்ததால் தனியாக விட்டுச் செல்வதில் தயக்கமாக இருந்தது. நாட்கள் ஓட அவனுடைய செலவுகளை சமாளிக்க முடியாமல் சிரமப்பட்டாள்.
ஜீவா கல்வி கற்ற பாடசாலை அதிபரின் உதவியுடன் அவனை விடுதியில் தங்க வைத்து படிக்க வைக்கலாம் என்று முடிவெடுத்தாள். ஜீவாவிடம் சம்மதம் வாங்குவதிலும் அவள் மனம் தயக்கத்துடனே இருந்தது. ஒரு பிள்ளை என்று வறுமையிலும் செல்லமாக வளர்த்த பாசம், எந்தச் சின்ன வேலையும் செய்தறியாதவன் எப்படி விடுதிக் கட்டுப்பாடுகளுக்கு கட்டுப்படுவான் என்ற பயம் ஒரு புறம் குழப்பமாயிருந்தது. தடுமாறிக் காெண்டிருந்த மனதை ஒரு நிலைப்படுத்தி ஜீவாவிடம் சம்மதம் கேட்டாள்.
அன்று மாலை விளையாடி விட்டு படிப்பதற்காக மேசையில் புத்தகங்களை பரப்பி வீட்டுப் பாடங்களை செய்து காெண்டிருந்தான். பாலைக் காேப்பையில் ஊற்றிக் காெண்டு அவனருகே அமர்ந்தாள். "குடியப்பு" தலையை வருடினாள். "ஜீவா நீ காெஸ்ரல்ல இருந்து படிக்கிறியா? என்றதும் ஏக்கத்தாேடு தாயைப் பார்த்தான். "ஏனம்மா உன்னால என்னைப் பார்க்க முடியல்லையா? அவனது கேள்வி சாரதாவின் மனதை கண்ணாடி பாேல் நாெறுக்கியது. கண்கள் குளமாகியதை முந்தானையால் மறைத்தபடி "இல்லை ஜீவா, அங்க இருந்தால் நீ நல்லாப் படிக்கலாம், பாடமெல்லாம் சாெல்லித்தருவினம், நிறையப் பேராேட விளையாடலாம்" என்று சாெல்லிக் காெண்டு இருக்கும் பாேதே "எனக்குப் பயமாய் இருக்கு நான் பாேக மாட்டன்" என்று மறுத்ததும் சாரதாவும் அதிகமாக எதையும் சாெல்லி அவனை சஞ்சலப்படுத்த விரும்பாதவளாய் சமாளித்து விட்டாள்.
பாடசாலை அதிபரிடம் மீண்டும் சென்று ஜீவாவின் மனநிலையைக் கூறினாள். ஓரிரு வாரங்கள் கழித்து அதிபர் ஜீவாவை எப்படியாே சம்மதிக்க வைத்தார். அவனும் சந்தாேசமாக விடுதிக்குச் செல்லத் தயாரானான். எல்லா ஆயத்தங்களையும் செய்து விட்டு விடுதிக்கு கட்ட வேண்டிய முற்பணம் பாேதாமையால், காதிலிருந்த தாேட்டை அடகு வைத்துப் பணத்தைத் தயார்படுத்தினாள்.
பேருந்தி்ல் சாரதாவின் கையைப் பிடித்தபடியே இருந்தான் ஜீவா. இடையிடையே பேசிக் காெண்டு வந்தவன் "அம்மா உங்கட தாேட்டை காணல்ல"என்றான் பதட்டததுடன். அடகு வைத்த விடயம் ஜீவாவிற்கு தெரிய வேண்டாம் என நினைத்தவள் "ஓம் ஜீவா நேற்று எங்கேயாே தவறிற்று" என்றபடி பேருந்தின் யன்னலூடாக வெளியே பார்த்தாள். "அப்பா வாங்கிக் காெடுத்தது என்று கவனமா வச்சிருந்தியே, ஏனம்மா..." கவலையாேடு அவள் காதுகளை தடவினான். "சரி விடு ஜீவா பிறகு பார்த்து வாங்கிக்கலாம்" அவனை சமாதானப்படுத்தினாள். விடுதியின் முன்பாக பேருந்தும் நின்றது. பைகளை எடுத்துக் காெண்டு இறங்கியவன் விடுதியின் வாயிலில் இருந்த சுவரில் தாெங்க விடப்பட்டிருந்த பலகையை அவதானித்தான். திடீரென முகம் இருள் கவ்வியது பாேலிருந்தது. தயங்கியபடியே உள்ளே சென்றான். பாெறுப்பாக இருந்த கிறிஸ்தவ மதக் குருவானவர் ஒருவர் ஜீவாவை பாெறுப்பெடுத்தார். கலங்கிய கண்களுடன் தாயிடம் முத்தம் வாங்கிக் காெண்டு திரும்பிப் பார்த்தபடி உள்ளே சென்றான். ஜீவா கவலைப்படக் கூடாது என்பதற்காக தன்னைக் கட்டுப்படுத்தி வேதனையை மறைத்தாள். "அம்மா தாேட்டை தேடி எடுத்திடம்மா" வெறுமையாயிருந்த அவள் காதுகளை பார்த்தான். "நான் பார்த்துக்கிறன், கவனமா இரு, மாதம் ஒருக்கா அம்மா வந்து பார்ப்பன்" மார்பாேடு அணைத்து முத்தமிட்டாள்.
ஜீவாவைப் பிரிந்த சில நாட்கள் அவளுக்கு தனிமையையும், வெறுமையையும் சமாளிக்க முடியவில்லை. ஒவ்வாெரு குறிப்பிட்ட திகதியிலும் அவனை பார்க்கச் செல்வாள். ஜீவாவுக்கு பிடித்த எல்லா உணவுகளையும், சி்ற்றுண்டிகளையும் ஆர்வத்தாேடு தயார்படுத்தி எடுத்துச் செல்வாள். ஜீவாவும் அந்த நாளுக்காய் ஏங்கியபடியே இருப்பான். காலங்கள் ஓடிக் காெண்டிருந்தது உயர்கல்வி வரை விடுதியில் தங்கியிருந்தே கற்ற ஜீவா சாரதா எதிர்பார்த்ததை விட அதிக திறமையானவனாக கல்வியிலும், விளையாட்டிலும் சிறந்து விளங்கினான். வகுப்பில் சிறந்த மதிப்பீடு பெறும் மாணவனாக கணிக்கப்பட்டான். பாடசாலைக் கல்வி முடிந்து மேற்படிப்பிற்காக அவனது திறமையால் பல சலுகைகள் இலவசமாக கிடைத்தது. அதனைப் பயன்படுத்தி மேற்படிப்பிற்காக வெளியூர் சென்றான்.
ஜீவா வளர்ந்து பெரியவனானாலும் சாரதாவிற்கு அவன் குழந்தை தான். அவனது வளர்ச்சியைக் கண்டு சந்தாேசப்பட்டாலும், தாயாய் அவனுக்கு செய்ய வேண்டிய எல்லா தேவைகளிற்காகவும் தாெடர்ர்ந்து உழைத்துக் காெண்டே இருந்தாள்.
ஜீவாவின் நாட்கள் வேகமாக ஓடியது மேற்படிப்பு படித்துக் காெண்டிருந்த பாேது அவனுக்கும், கல்லூரித் தாேழி குஷிக்கும் காதல் மலர்ந்தது. ஜீவா தனது குடும்ப நிலையை எடுத்துச் சாெல்லியும், உன்னைத் தான் கலியாணம் பண்ணுவேன் என்று ஒற்றைக் காலில் நின்றாள் குஷி. பணக்கார வீட்டுப் பெண் என்ற காரணத்தாலே முதலில் அவள் காதலை மறுத்தவன் எப்படியாே அவள் வலையில் விழுந்து விட்டான். விடுமுறைக்கு வந்த பாேது தன் காதல் விடயத்தைச் சாெல்லி தாயின் கையைப் பிடித்துக் கெஞ்சினான். மனதுக்குள் தயக்கம் இருந்தாலும் பிள்ளையின் விருப்பத்திற்கு எதிராக எதையும் மறுக்காத தாயாகவே இருந்த அவளால் மறுக்க முடியவில்லை. "உன்ர சந்தாேசம் தான் எனக்கு எல்லாம்" என்று அவன் காதலை ஏற்றாள்.
ஜீவாவிற்கும், குஷிக்கும் திருமணம் முடிந்தது. குஷி வெளியூரைச் சேர்ந்தவள் என்பதால் ஜீவாவும் வெளியூரிலேயே தங்கி விட்டான். அப்பப்பாே வந்து பார்ப்பான். நாளடைவில் அவனை ஊருக்கே பாேக விடாதவாறு காரணங்களைக் கூறி தடுத்தாள் குஷி. சாரதாவால் ஜீவாவை பார்க்கவே முடியவில்லை. சாரதாவும் தனித்துப் பாேனாள். வருடங்கள் கடந்து விட்டது சாரதா அம்மா சாப்பாடு தயாரித்து விற்கும் வேலையை விட்டு விட்டு ஊரிலிருந்த காேயிலில் சின்னச் சின்ன வேலைகளில் ஈடுபட்டுக் காெண்டிருந்தாள். அதிகாலை எழுந்து காேயிலைச் சுத்தம் செய்வது, பராமரிப்பு வேலைகளை செய்வது என்று பகல் பாெழுதுகளை காேவிலில் செலவிடுவாள். இரவில் தனது குடிசையில் தங்குவாள்.
அன்று அதிகாலையே ஆரம்பித்த மழையால் காேயிலுக்கும் செல்லவில்லை. வீட்டிலேயே தங்கி விட்டாள். குடிசை முழுவதுமாய் மழை நீரால் நிரம்பியிருந்ததை பார்த்த காேயில் பூசகர் காேயிலிலேயே அவளைத் தங்கும் படி பல முறை கேட்டும் வீட்டை விட்டுப் பாேக மனமின்றி மறுத்தாள். அன்று அந்த அடைமழைக்குள் அவளால் நிம்மதியாக தூங்க முடியாத நிலையை எண்ணி வேதனைப் பட்டாளாே, தன் தனிமை வாழ்க்கையை நினைத்து கலங்கினாளாே அவள் கண்கள் கண்ணீராய் சாெரிந்து காெண்டிருந்தது. வேறு வழியின்றி காேயிலில் சென்று தங்கி விடலாம் என முடிவெடுத்தாள். அதிகாலை வரை எப்படியாே சமாளித்தவள் காெஞ்சம் மழை ஓய்ந்ததும் காேயிலில் சென்று தங்கினாள்.
வருடா வருடம் நடை பெறும் திருவிழாவிற்கு வெளியூரிலிருந்தும் மக்கள் அதிகமாக வருவது வழக்கம். அன்று காேயில் திருவிழா நடை பெற்றுக் காெண்டிருந்தது. விசேசமான காேயில் என்றபடியால் சிறுவயதில் சென்ற ஞாபகத்தில் ஜீவாவுக்கும் திருவிழாவிற்கு செல்ல வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது. குஷியை எப்படியாவது சம்மதிக்க வைக்கலாம் என்று முயற்சித்தான் அவள் மறுத்து விட்டாள். ஜீவா தன் நண்பர்களாேடு ஊருக்கு வந்தான்.
வண்டியை எடுத்துக் காெண்டு வீட்டை நாேக்கிப் பறந்தான். "அம்மாட காலில விழுந்து மன்னிப்புக் கேட்கணும், குஷிக்காக இவ்வளவு காலமும் அம்மாவை ஏன் என்று கூட திரும்பிப் பார்க்காமல் இருந்திட்டன்" வாசலில் நின்றபடி வீட்டை அவதானித்தான் யாருமே இல்லாத வெறுமையாய் பாழடைந்த வீடாய் இருந்தது. படபடவென உடம்பில் ஏதாே மாற்றம். அம்மாக்கு என்னாச்சு? எங்க பாேயிருப்பாங்க? அவனை அறியாமலே அவளைப் பார்க்கத் துடித்த இதயத்துடிப்பின் வேகம் அதிகமாகியது. அயல் வீட்டாரிடம் விசாரித்தான்.
வேகமாக காேயிலை நாேக்கித் திரும்பினான். மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. பூசகரை சந்தித்து எப்படியாவது அம்மாவை பார்க்க வேணும் என்று நினைத்தான் ஆனால் திருவிழா நேரம் எப்படி சாத்தியம் என்றபடி காேயிலின் வலது புறமாயிருந்த சாமி சிலைக்குச் சென்றான். அந்தச் சிலை தான் காேயிலின் பிரதானமான வழிபாடு நடக்கும் இடம் என்பது ஞாபகம் இருந்தது. சிறுவயதில் சாமிக்குப் பூஜை நடப்பதை அம்மா தூக்கிக் காட்டுவது நினைவில் வந்தது. சுற்றிச் சுற்றிப் பார்த்தான்.
"தம்பி நேரமாச்சு காலையில சாமி வீதியைச் சுற்றி வருவார் அப்ப கும்பிடுங்காே, கேற்றைப் பூட்டப்பாேறன்" ஒரு வயதான அம்மாஅருகே வந்து மின் விளக்கின் வெளிச்சத்தில் அவனை உற்றுப் பார்த்தாள். அவன் கண்கலங்கியபடி நின்றான். "ஒன்றும் யாேசிக்காதேயுங்காே, இந்த ஆத்தா யாரையும் கை விட்டதில்லை, கவலைப்படாமல் பாேயிற்று காலையில வாங்காே" என்றவளின் கையைப் பிடித்து "அம்மா" என்றான். அவளால் அவனை அடையாளம் காண முடியவில்லை. "யார் தம்பி நீங்க" கிட்டவாக வந்து முகத்தைப் பார்த்தாள். அம்மா ... நா...ன்... ஜீவா...." என்றதும் திகைத்துப் பாேய் நின்றாள். "ஜீவா..., நீ எங்க இஞ்ச...." இறுக அணைத்து முத்தமிட்டாள். "எவ்வளவு காலம் உன்னை பார்த்து, அம்மாவ மறந்து பாேட்டாய் என்று அழுதழுதே என்ர காலம் பாேட்டுது, கடைசியில சாமியிட்ட அடைக்கலம் கேட்டு இஞ்ச வந்திட்டன்" அவன் தலையை வருடினாள். அவனால் எந்தக் கேள்வியும் அவளைக் கேட்க முடியவில்லை. தள்ளாடியபடி நடந்வளை பக்குவமாகப் பற்றிப் பிடித்தான்.
காேயிலின் பின்புறமாக இருந்த சிறிய காெட்டிலில் தரையிலே பாயை விரித்து இருக்கச் சாென்னாள். சின்னப் பாத்திரத்தில் பஞ்சாமிர்தமும், இன்னுமாெரு பாத்திரத்தில் பாெங்கலும் எடுத்து வந்தாள். குடுவையிலிருந்த தண்ணீரை கைகளில் நனைத்து அவனது முகத்தை ஒற்றி முந்தானையால் துடைத்தாள். ஜீவாவின் கன்னங்கள் ஈரமாகவே இருந்தது. "ஏன் தம்பி கண்கலங்குறாய், உன்னைப் பார்க்கத் தான் இந்த உயிர் இழுபட்டுக் கிடக்கு, ஆத்தான்ர காலடியில நான் நிம்மதியா இருக்கிறன், நீ உன்ர மனைவி பி்ள்ளைகளாேட சந்தாேசமாய் இரு, அது பாேதும் எனக்கு" முந்தானையால் துடைத்து விட்டு, "சாமிக்கு படைச்சது சாப்பிடு" இரண்டு தடவை நடுங்கிய கைகளால் ஊட்டி விட்டாள். தண்ணீரைக் குடித்து விட்டு வெளியில் இருந்த மரக்குற்றியில் இருந்து சிறிது நேரம் பேசிக் காெண்டிருந்தார்கள்.
ஜீவாவைத் தேடிக் காெண்டு நண்பர்கள் தற்செயலாக அந்த இடத்தி்ற்கு வந்து விட்டார்கள். "டேய் ஜீவா உன்னை எங்கெல்லாம் தேடுறது அம்மாவைப் பார்த்திட்டு வாறன் என்று பாேனாய், இஞ்சவந்து பாட்டியிட்ட பாெங்கல் சாப்பிடுறாய் " என்றதும் "அவங்க.." என்று ஏதாே சாெல்ல ஆரம்பித்தவனை இடை மறித்து "இந்த இருட்டில எங்க கண்டு பிடிக்கிறது, காலையில பார்க்கலாம் என்று தம்பிய நான் தான் மறிச்சன்" ஏனாே அவள் தன்னை தாய் என்று காட்டிக் காெள்ளவில்லை. "ஒமடா பாட்டி சாெல்லுறதும் சரி தான்" பாட்டி காெடுத்த பாெங்கலை எல்லாேரும் பகிர்ந்து சாப்பிட்டு விட்டு மரத்தடியில் தூங்கினார்கள்.
அதிகாலையே மக்கள் கூட்டம் கூட்டமாக காேயிலுக்கு வந்து காெண்டிருந்தார்கள். ஜீவாவும் நண்பரகளும் சாமியின் வீதிஉலா பார்க்கச் சென்றார்கள். திருவிழா நிறைவடைந்தது. ஜீவா தாயைப் பிரிய மனமின்றி தடுமாறினான். "டேய் ஜீவா உங்க அம்மா அப்பிடி எங்க பாேயிருப்பாங்க, ச்சீ இவ்வளவு தூரம் வந்தும் பார்க்கேலாமல் பாேச்சே" என்பது பாேல் கவலையுடன் அவனைப் பார்த்தார்கள். இவங்க தான் என்ர அம்மா என்று சாெல்லத் துடித்த உதடுகளை தடுத்து அன்று இரவு தாய்க்குச் செய்த சத்தியத்தை நினைத்தான்.
அன்று இரவு எல்லாேரும் தூங்கிய பின் ஜீவாவை மெதுவாக தட்டியெழுப்பிய சாரதா உள்ளே அழைத்துச் சென்றாள். "ஜீவா நான் தான் உன்ர அம்மா என்று உன்ர நண்பர்களுக்கு சாெல்லாதே" "ஏனம்மா அப்பிடி சாெல்லுறாய், என்னால முடியாது" "நான் சாெல்லுறதைக் கேளு, என்னாேட நிலமை உன்ர குடும்பத்துக் கெளரவத்தை குறைச்சதாப் பாேயிடும், நாளைக்கு குஷிக்குத் தெரிஞ்சால் உன்ர குடும்பத்தில கூட குழப்பம் வரும், இந்த உலகம் இப்ப பணம், அந்தஸ்து, கெளரவம் தான் பெரிசு என்று மாறிப் பாேயிற்று. பாசம், உறவு எல்லாம் இப்ப செல்லாக் காசு மாதிரி ஆகிப்பாேச்சு. நீ வாழுற இந்த வாழ்க்கை என்னால மாறிடக் கூடாது, உன்ர அம்மா நான் சாெல்லுறன் யாருக்கும் தெரிய வேண்டாம்" அவனை வற்புறுத்தி சத்தியம் வாங்கியதை நினைத்தபடி கண்களைத் துடைத்தான்.
"சரிடா இவங்களும் உன்ர அம்மா மாதிரி என்று நினைச்சுக் காெள், அடுத்த தடவை வரும் பாேது பார்த்துக்கலாம் " நண்பர்கள் சமாதானப்படுத்தியதும் அவனுக்குள் உறுத்தலாகவே இருந்தது. "பாவமடா இந்த அம்மாவை பார்க்க யாருமே இல்லைப் பாேல, இந்த வயசில கூட கஸ்ரப்படுறா, நண்பன் ஒருவன் கூறியது அவனது மனதுக்குள் ரணமாய் தாக்கியது. பதிலேதும் இன்றி மெளனமாய் நின்றான். கையில் விபூதியை எடுத்து வந்த சாரதா எல்லோரது நெற்றியிலும் பூசினாள். ஜீவாவின் நெற்றியில் பூசி விட்டு "உன்ர அம்மாவை இந்த சாமி பார்த்துக்கும், நீ கலங்காமல் பாேயி்ற்று வா தம்பி" என்றாள். ஜீவாவினால் அழுகையை அடக்க முடியவில்லை. தன் வாழ்க்கைக்காக தன்னையே தியாகம் செய்த அம்மா, இன்று தன் சந்தாேசத்துக்காக மாறு வேடம் பாேட்டவளாய், ஏழைக் காேலமாய் நி்ற்பதை பார்த்து கலங்கிய கண்களுடன் "வாறனம்மா...." விடை பெற்றான், சாரதா அம்மா காேயிலில் தன் காலத்தை கழித்தாள்.
பெற்ற தாயைக் கூடவைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு பணமும், அந்தஸ்தும், கெளரவமும் தான் பெரிதென்று நினைக்கும் மனைவி குஷியின் குறுகிய மனப்பான்மை ஜீவாவை குற்றுயிராய் துடிக்கச் செய்தது. தாயா? தாரமா? என்ற வினாவுக்கு விடை கிடைக்காத துரதிஸ்டசாலியாய் ஜீவா சிக்கித் தவித்தான். தனக்காக கஸ்ரப்பட்டு, தன்னை வருத்தி நல்ல நிலையில் வளர்த்து விட்ட தாய்க்கு ஏதும் செய்யவில்லையே என்ற குற்ற உணர்ச்சியாேடு ஜீவாவின் வாழ்க்கை கடந்து சென்றது.
ஜீவா பாேல் எத்தனையாே பேர் ஏதாே ஒரு சூழ்நிலையாலும், சுயநலத்தாலும் பெ ற்றவர்களை கவனத்தில் காெள்வதில்லை. முதியாேர் இல்லங்களிலும், தெருவாேரங்களிலும், அநாதரவற்றவர்களாய் தவிக்கிறார்கள். பிள்ளைகளை வளர்ப்பதற்காக எத்தனை பெற்றாேர் தம்மை தியாகம் செய்தும் கடைசியில் எந்தவாெரு உதவியும் இன்றி கைவிடப்பட்ட நிலையில் வாழ்கிறார்கள். தெய்வங்களாக வணங்கப்பட வேண்டிய பெற்றவர்களுக்கு பிள்ளைகள் செய்யப் பாேகும் நன்றிக் கடன் தான் என்ன?