விஜயதசமி

~~*~~~~விஜய தசமி~~~~~*~
📒📒📒📒📒📒📒📒📒

ஐந்து வயது குழந்தைகள் எல்லாம்
ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு
பள்ளிச் சிறையில்
பனிரெண்டு ஆண்டு
படிக்கச் சொல்லி
அடைக்கும் நாள்

அல்லும் பகலும்
ஐந்து ஆண்டுகள்
வீட்டுக் காவலில்
வைத்த அம்மா
இனி
இரண்டு மணி நேர போருக்குப் பின்னே
ஏழு மணி நேரம் ஓய்வு கொள்வாள்..

பாசத் தந்தையின் பாக்கெட் சம்பளம்
ஓட்டை விழுந்து
ஒவ்வொரு காசாய்
கான்வெண்ட் நாளில்
கரையத் துவங்கும்
கஷ்டத்துக்கான முதல்நாள்

மஞ்சள் நிறத்து வாகனமெல்லாம்
மல மலவென்று ஏழுமணிக்கே பிள்ளை கூட்டம் ஓடி ஓடி
பிடிக்கத் துவங்கும் முதல்நாள்

அப்பன் சொத்தை கறப்பதற்க்கு
அரிசியில் அவன் பிள்ளை ஒப்பமிட்டு
பள்ளிக்கூட முதல்வருக்கு பணிவாய் வழங்கும் திருநாள்

மும்மொழிப் புத்தகம்
மூட்டை கட்டி
முதுகில் தூக்கி மாட்டி விட்டு
ஐந்திலேயே அவனை வளைக்க
அடி எடுத்து வைக்கும் முதல்நாள்

மாயச்சோறை வாயில் திணித்து
மறுநொடி நீரில் முக்கி எடுத்து
கையில் காலில் துணியைக் கட்டி
பயண மூட்டையாய்
குழந்தை மாறும் திருநாள்


இரண்டு வயதுச் சிறுமி வந்து--அம்மா
இடுப்பில் ஏறி அமர்ந்த படி
வீதியில் நின்று
டா டா சொல்லி
வீட்டிற்கு திரும்பும் திருநாள்

மம்மி டாடி சொல்வான் என்று
மாலை நேரம் காத்திருந்து
என்ன கற்று வந்தானென்று
ஏங்கத் துவங்கும் முதல்நாள்

எழுத்தறிவில்லா அம்மா கூட
இரவில் படிப்பால் வீட்டுப்பாடம்
மகனுக்காக மாறத்துவங்கி
மறுபிறப்பெடுக்கும் திருநாள்

வல்லரசாக நாடு மாற
அல்லல் பலவுக்கும் ஆட்பட்டு தானே
வருங்கால இளைஞனை வார்த்தெடுக்கும்
சரியான முயற்சி துவங்கும் நாளோ ?

க.செல்வராசு..

🏃‍♂🏃‍♂🏃‍♂🏃‍♂🏃‍♂🏃‍♂🏃‍♂🏃‍♂🏃‍♂

எழுதியவர் : க.செல்வராசு (20-Oct-18, 6:23 am)
சேர்த்தது : கசெல்வராசு
பார்வை : 169

மேலே