ஜாதி

யானைக்குப் பிடித்தால்
மனிதனைக் கொல்லும்
மனிதனுக்குப் பிடித்தால்
யானையையே கொல்வான்
அதுதான் மதம்

போதி மரம் கூட
இன்று ஜாதிமரமாய்
மரங்களில் கூட ஜாதி
வன்னி மரம்

குழந்தைக்கு ஜாதிக்காய்
கொடுத்து நோயைத் தனிக்கின்றனர்
ஜாதியை திணிக்கின்றனர்

உடையார் முதலியார்
கண்டு வெற்றி வருவதில்லை
முயற்சி உடையார் கண்டே
முதலில் வருகின்றது

தாழ்த்தப்பட்டோர்
வாழும் மண்ணில்
மண்ணின் விலையும்
தாழ்த்தப்பட்டே கிடக்கிறது

தீண்டாமை ஒரு
பாவச்செயல் என்று
புத்தகத்தில் உள்ளது
நம் அகத்தில் உள்ளதா?

தோளில் பிறந்தவன்
கோயில் கருவறையில்
காலில் பிறந்தவன்
கோயில் தெருவரையில்

இவன் கூட்டிப்படித்த பட்டமோ
இவனை ஆட்டிப்படைக்கும்
ஜாதிக்குப் பின்னால்
பத்திரிக்கையில்

காரணம் பள்ளி விண்ணப்பத்தில்
எந்த ஜாதி என்று ஒரு பத்தி இருக்கையில்

ஜாதி வேண்டாம் என்போம்
இட ஒதுக்கீடு வேண்டும் என்போம்

ஜாதி ஒழிப்பு நாயகர்
பெரியாரையே சமூகம்
நாயக்கராகத்தான் பார்த்தது

கண்தானம் பெறும்போது
பார்க்காத ஜாதியை
கன்னிகா தானம் செய்யும்போது
பார்க்கிறோம்

சமூகம் எனும் அகலில்
பட்டப்பகலில்
ரத்தத் துகளில் எரிந்து
இருள் கொடுக்கும் ஜோதி
இந்த ஜாதி

பாரதி ஜாதி இல்லை
என்று பாப்பாவிற்கு பதில்
ஜாதி பார்க்கும் அப்பாவிற்கு
சொல்லியிருக்கவேண்டும்

ஓடிவிளையாடு பாப்பா
ஏனென்றால்
கலவரத்திலும் கலைக்க வருவோரிடத்திலும் ஓடவேண்டும்மல்லவா?

மக்களே
கொல்வோம் என்று ஜாதிக்குச்
சொல்லுங்கள்
வெல்வோம் என்று சாதிக்கச்
சொல்லுங்கள்

எழுதியவர் : குமார் (20-Oct-18, 4:56 pm)
சேர்த்தது : புதுவைக் குமார்
Tanglish : jathi
பார்வை : 86

மேலே