வெளிநாடு

பாஸ்போர்ட் விசா எல்லாம் கிடைத்துவிட்டது
வெளிநாடு செல்கிறேன்
எல்லாரையும் போல
திரவியம் தேடத்தான்
இன்னும் ஒரு வாரமே உள்ளது
அட ஏழு நாள் இருக்கிறதே
அலட்டிக்கொண்டது மனம்....
விமானத்தில் பறக்கப் போகிறோம்
செல்லும் நாடு அப்படி இருக்குமோ
இப்படி இருக்குமோ சிந்திக்கையில்
மனம் சிறகடித்தது..
வேண்டிய பொருட்களெல்லாம்
மூட்டைக் கட்டியாயிற்று
சொந்தங்களிடம் நண்பர்களிடம் சொல்லி
பெற்றோரிடம் ஆசி பெற்று
ஆனந்தமாய்ப் பயணப்பட்டேன்..
விமானப்பயணம் நன்றாகத்தான் இருந்தது
இறங்கியதும் ஒரு அறையில் பலர்
என்னுடன் தங்க வைக்கப் பட்டனர்
உணவு உறைவிடம் சுற்றிலும் உள்ளோர்
இப்படி ஒவ்வொன்றாய் என்னைத் தனிமைப்படுத்தியது
அலைபேசியில் பேசிக்கொண்டோம்
புள்ளைக்கு துட்டு அதிகமாயிடும்
என்று அவர்களே விரைவாய்
பேச்சை முடிக்கதொடங்கினர்
நாட்கள் நகர்ந்தன....
தனிமைக்குப் பஞ்சமில்லை
விட்டு ஓடி விடலாம் போலிருந்தது
ஆனால் பணம் வந்து சேந்துருச்சு
கேட்கையில் மனம் அமைதி கொண்டது
அலைபேசியிலேயே
சகோதரிகளின் திருமணம் பார்த்தேன்
இன்னும் கால்கள் கட்டிப் போட்டது போலாயிற்று
மீண்டும் நாட்கள் நகர்ந்தன
வீடும் கட்டி முடிக்கப்பட்டது
ஒரு மன நிறைவு
ஒரு வழியாய் விடுமுறையில்
வீடு நோக்கிப் புறப்பட்டேன்
விமானப் பயணம்
மாட்டுவண்டி பயணம் போலிருந்தது
என் மனம் வேகமாய் பயணித்தது
வீடு வந்து சேர்ந்து விட்டேன்
கிரகப்ரவேசத்தோடு உறவினர்களையும்
சந்தித்து விட்டேன்
அன்றே திருமணமும் பேசி முடித்தனர்
இரவு நிம்மதியான உறக்கம்
கட்டில் முழுக்க உருண்டு உருண்டு .....
சிறு இடைவெளியில் திருமணமும்
முடிந்து விட்டது
எல்லையில்லா ஆனந்தம் ......
விடுமுறை முடியப்போகிறது
மனம் பட்ட பாடு சொல்லி முடியாது
போக வேண்டாம் என்று
ஆணை இட மாட்டார்களா
ஏங்கியது மனம் ...
மீண்டும் பயணப் படுகிறேன்
முதல் பயணம் போலில்லை இப்போது
புது மனைவியை விட்டு செல்ல
வலிக்கிறது மனது ..
மீண்டும் அதே அறைவாசம்
வனவாசம் போல
அலைபேசியில் சந்தித்துக்கொண்டோம்
ஒவ்வொரு நாளும் பேரழகியாய்
அலைபேசி திரையில் தோன்றுவாள்
அவள் கருவுற்ற நேரம் கூட
துணை இருக்க முடியவில்லை
முடவன் கொம்புத்தேன்
இப்போது புரிந்தது ...
மகனும் வந்து விட்டான்
எல்லோரும் தூக்கி மகிழ்ந்தனர்
என்னால் மட்டும் தொட கூட முடியவில்லை
இப்போது முடிவெடுத்தேன்
யாரும் ஆணை இட வேண்டாம்
நானே செல்கிறேன்
நான் திரட்டிய செல்வம் போதும்
காத்திருந்தேன் ஒப்பந்தம் முடிவதற்காய் ....