மரணம்

மரணம்
————
பேரூந்தொன்று;
பெரியவர் முதல்
குழந்தைகள் வரை
இதில் பயணம்;

ஓட்டுநர்
எல்லாம் அறிந்தவர்;
நடத்துநர்
எல்லாரையும் ஆட்டிவைப்பவர்;

முடிவில் இப்பேரூந்து
எங்கே தரிக்கும்?
ஓட்டுநருக்கே
அது நிதர்சனம்;

இங்கு பயணிகள்
பலரோ
இறங்குமிடம் அறியார்;
சிலரோ
அதிர்ஷ்டம் செய்தோர்;
இடைவழியிலேனும்
இறங்குமிடம் அறிவார்;

ஆனாலும்...
அந்தோ!
இறங்குமிடம்
மெல்ல... மெல்ல...
அருகமைய...
அச்சிலர் சித்தத்தைச்
சொல்லொணாப் பயம்
சூழ்ந்திங்கு வாட்டும்...!
காரணமறிய முன்பே
சேரிடம் வந்துவிடும்...!
பிறகென்ன?
சென்றிடுவர் சிலர்;
சென்றவரை எண்ணிக்
கன்றிடும் கண்ணிமைகள் பல,
கலங்கி வழிவிழிநீரால்...!

இறங்கியவர் பாடென்னாச்சு?
மயங்கல்... புலம்பல்...
ஐயகோ! “அச்சத்தில் வீண்
பொழுதோட்டிடுங்காலை,
மிச்சம் விட்ட கடமை
முடிக்கிலேன் பாவி!
என்னெச்சம் இன்றென் செயும்?
எனையெச்சமாய்க் கொண்டவர்தாம்
எவ்வண்ணம் துயருவர்?
ஏதேது! வாய்வயிறுதட்டியங்கு வருந்துவது
எனைத்துணையாய் ஏற்றவளோ(னோ)?”;

நித்தியமானது
இத்தரை மீதினில்
மரணம் ஒன்றே!
நிமிடமிது கூட
நிரந்தரம் அன்றே!

கர்வம், கசடு, காழ்ப்பு
கோபம், பேராசை தவிர்!
கடமையே கண்ணாகக்
களிப்போடு வாழ்ந்திடு!

நாடி நரம்பு எல்லாம்
ஓடித் தளருகையில்;
விருந்தாளியாய், அழையாமலே
நோய் வந்து சேருகையில்;
மனங்கவர் ஒருவர்
மனச்சாட்சியின்றிப் பிரிகையில்;
மரணங் கூட ஓர்
வரமே இங்கு....!
~தமிழ்க்கிழவி (2018)

எழுதியவர் : தமிழ்க்கிழவி (22-Oct-18, 6:18 pm)
சேர்த்தது : தமிழ்க்கிழவி
பார்வை : 3903

மேலே