புரிந்துணர்வு

#குடும்பத்தில் மகிழ்ச்சி பெருக.. - பிரதான தலைப்பு
#புரிந்துணர்வு... - உப தலைப்பு

மழலை அழுகை வித விதமாய்..
சீற்றமாய் ஒரு அழுகை...
சிணுங்கலாய் ஒரு அழுகை...
விக்கி விக்கி ஒரு அழுகை..
வீறிட்டு ஒரு அழுகை..!

அழுகை படிக்கும் அகராதி அம்மா..
சீற்றமான அழுகை கோபமாம்
சிணுங்கலாய் அழுகை உறக்கமாம்
விக்கி விக்கி ஒரு அழுகை பசியாம்
வீறிட்டு ஒரு அழுகை பிணியாம்...!

கோபம் போக்கியும்
தாலாட்டி உறங்க வைத்தும்
பாலூட்டி பசி போக்கியும்
பிணிக்கு மருந்தளிப்பதுமான
செயல்பாடுகளில்
மழலை காக்கிறாள் அன்னை
குறிப்பால் தன்மையறிந்தவளாய்..!

எறும்பு கடியும் அறிவாள்
எந்த வலியும் அறிவாள்
சூட்சுமம் அறிந்த புரிதலில்
சுகப்படுகிறது எவையும்..!

சூட்சுமமான குறிப்பறிதலில்
மழலைகள் மட்டும்
விதி விலக்கா என்ன..?

பாதங்களில் ஓசை படிப்பவள்
கணவன் நடந்தால் இன்ன ஒலி
மகள் நடந்தால் இன்ன ஒலி
மகன் நடந்தால் இன்ன ஒலி

அடிகளை அடி அடியாய்
அளந்து கணக்கிடுபவள்
புரிந்துணர்தலில்
பெண்ணுக்கினை யாரை சொல்வீர்..?

அடி எடுத்து வைக்கையில்
எழும் ஓசையில்
கண்டறிவாள் ஆரோக்கியமும்..!

துவளும் நடை ஓசையில்
மனம் துவண்டு போவாள்
செயலில் துவளுவதில்லை
கேளாது துன்பம் களைவாள்
நடையிலும் சொல் படிக்கும்
அகராதி இல்லத்தரசியாவாள்...!

முகத்தின் உணர்வுகளை
உள்ளத்தில் குறிப்பெடுங்கள்
ஆவண செய்தலில்
அமைச்சுப்பணி தோற்றுப்போகும்..!

"சுகமில்லை"
எவரும் சொல்லத்தேவையில்லை
அத்தையோ.. நாத்தியோ
சுகவீனப்பட்ட அனற்றலை
அன்புமனம் ஆற்றுப்படுத்தட்டும்
ஆங்கில மருந்து அவசியமில்லை
ஆச்சாரமான
தமிழ் கஷாயம் போதுமானது..!

சுகப்பட்டோர்
நா போற்றாவிடிடும்
மனம் போற்றக்கூடும்..!

குறிப்பறிந்து நடத்தலில்
குணவதி என்றும்
குணவான் என்றும்
புகழாரம் தேவையில்லை
பதில் பாசம் பொழிகையில்..!

கடன் கேட்டு வருவோரின்
விழி படித்து அறிந்து
எடுக்கப்படும் முடிவுகளில்
ஊசிப்போவதில்லை
உழைப்பால் ஈட்டிய பணம்..
குறிப்பெடுங்கள் எவரையும்
உருப்படும் குடும்பமும்..!

ஆணோ... பெண்ணோ..
கணவனோ... மனைவியோ
முகத்தின் குறிப்புகளுக்கு
நேர்மறை செயலாக்கம்
சுகந்தம் வீசி செல்லும் வாழ்வில்..!
இன்ப பூக்கள் பூத்துக்குலுங்கும்
கொத்து கொத்தாய்..!

குலுங்கும் மலரில்
சிதறும் மகிழ்ச்சித் தேனை
அள்ளி பருகுங்கள் ஆனந்தமாய்..!

#சொ.சாந்தி

எழுதியவர் : சொ.சாந்தி (23-Oct-18, 9:57 am)
பார்வை : 997

மேலே