புள்ளி

#புள்ளி

சிறு சிறு புள்ளிகள்
போதுமானதாக இருக்கிறது
அழகிய கோலம் தீட்டுவதற்கு .!

கூடுதலாய் ஒரே ஒரு புள்ளி
போதுமானதாக இருக்கிறது
பந்தயங்களில் எல்லாம்
வாகை சூடுவதற்கு .!

கூர்மையான சிறு புள்ளி
போதுமானதாக இருக்கிறது
ஆழ புதயவிருக்கும்
ஏதோ ஒன்றை
நெம்பி மேலெழுப்புவதற்கு..!

அகண்ட நெற்றிக்கு
வண்ணமாய் சிறு புள்ளி
போதுமானதாய் இருக்கிறது
மங்களமாய் பவனி வருவதற்கு..!

சுகமான கதையோ
சோகமான கவிதையோ
சிறு புள்ளி போதுமானதாய் இருக்கிறது
முடித்து வைப்பதற்கு..!

கறுத்த புள்ளி கன்னத்திலோ
அல்லது உதட்டிலோ
போதுமானதாய் இருக்கிறது
வசீகர தோற்றத்திற்கு..!

எண்களின் ஊடே
முன்னும் பின்னுமாக புள்ளிகள்
போதுமானதாக இருக்கிறது
அளவினை கூட்டுதற்கு.. குறைப்பதற்கு..!

எழுத்தோ, எண்ணோ
எழுதப்படுகையில்
புள்ளியில் ஆரம்பித்து
புள்ளியில்தான் முடிவடைகிறது..!

பெரும்புள்ளிகள்.. சிறு புள்ளிகள்..
என்று
எவ்வளவோ புள்ளிகள்
கரும்புள்ளிகள் ஆகாதவரை
சிறப்புதான்
எல்லா புள்ளிகளும்..!

#சொ. சாந்தி

எழுதியவர் : சொ.சாந்தி (23-Oct-18, 9:53 am)
Tanglish : pulli
பார்வை : 115

மேலே