மாறுமோ இந்நிலை
ஆணுக்குப் பெண் நிகரா நின்று
பூணும் வென்றிகள் எண்ணில எண்ணில
காணும் துறையெலாம் தகவுறும் அவர்தமைப்
பேணும் மரபுகள் தீதில தீதில
பாரதி கண்ட கனவதை நனவாக்கப்
பட்டங்கள் ஆளவில்லையா?
பாரதில் தம் மழலைகள் நலம் பெறத்
திட்டங்கள் தீட்டவில்லையா?
போரது முதலாய்ப் பூணும் இல்லறம் வரை
சட்டங்கள் காக்கவில்லையா?
வேரதோ டறுத்து மடைமைகள் களைந்து
வாட்டங்கள் நீக்கவில்லையா?
புதுமைப் பெண்பற்றிப் புறத்திலே பேசுகிறீர்!
பதுமை போலகத்துள் பதுக்கிவைக்க எண்ணுவதேன்?
ஏதேது? பெண்ணுமோ ருணர்வுள்ள பதுமையெனப்
போதம தகன்றுநீவிர் புரியுநாள் எந்நாளோ?
மலர்ச்சியாய் மங்கையவள்
எவருடனும் பேசிவிட்டால்
மகிமையிலாப் பெண்ணென்பீர்!
பேச விருப்பின்றி ஒதுங்கினால்
“பெருமை பிடித்தவள்” என்பீர்!
வாழவும் வழிசொல்லீர்!
மாண்டாலும் பழித்துரைப்பீர்!
சக்திக்குமட்டும் நீவீர்
“சகலகலாவல்லி”யென
விழா எடுப்பீர்!
மணமாலை சூடி மகிழ்ந்திடல் வேண்டுமென்றால்
“பணமாக எவளவு தருவீர்கள்?” என்கின்றீர்! - கற்பொழுக்கம்
கணமேனும் பிறழாத குணமான துணைவியிலும்
பணமொன்றும் பெரிதன்று - ஏனுமக்குப் புரியவில்லை?
கண்ணே! மணியே! எனக் காதல் புரிகின்றீர்!
“எண்ணமதி லென்றும் நீயே
வாழ்வில்லை நீயின்றி”யென்பீர்! - பின்
“அண்ணன் நான்; தங்கையுளாள்;
ஆதலாலெனக்கு ஒரு பன்னிரு லட்சங்கள்
பணமாக வேண்டு”மென்பீர்!
தங்கைக்குத் தானே கேட்கிறீர்
சங்கையுற வேண்டாமே!
எங்கள் அண்ணனில் தங்கையர்
எங்கையா போவது?
உங்கள் பிடிவாதம்விட்டு
இங்ஙனம் சற்றெண்ணிப் பாரும்!
சங்கத் தமிழ் மரபில்
எங்கேனும் இஃதுண்டோ?
பேசாத பெண்ணைப் பேசவைத்து
நேசமதாலவளைப் பேதலிக்க வைத்து பின்
“காசு தான் வேண்டுமென்றில்லை
காசும் வேண்டும்” என்பீர்!
சின்னதாய் ஒருவீடும் பொன்னகை முப்பதும்
இன்னுமோர் இருபது மிருந்தாலும்...
கண்ணாடிப் பெண் வேண்டாம்
கறுப்பியா அவள் வேண்டாம்
தெத்துப்பல் வேண்டாம்
தெரியாத ஜாதி வேண்டாம்
குண்டான பெண் வேண்டாம்
குட்டையா அவள் வேண்டாம்...
எத்தனை எத்தனை
எத்தனையோ நிபந்தனை
அத்தனையும் தாண்டிவென்றால்
இத்தரையில் இல்லறமாம்...
கண்ணிலே கருணையுடன்
எண்ணத்தில் தூய்மையுடன்
பெண்ணையும் பாருங்கள்
எண்ணிலாத் திறம் தெரியும்
பெண்ணியம் பேசாதீர்
திண்ணமாய்க் கடைப்பிடிப்பீர்
விண்ணவர் வந்திறங்கி
மண்ணிலே யருளோம்பார்
வெண்மனங் கொண்டநல்
வண்மையரே இங்கு தேவர்
சீதனத் தீயிலே
சீதைகள் குளித்திடப்
பேதைமை யிருளினுள்
“மேதகு” இராமர்கள்!
ஆறுமோ?
அவர்தம் ரணம்??
மாறுமோ?
இவர்தம் மனம்??
வேறுபல விடயங்களி லெல்லாம்
மாறுபடப் புதுக்கும் நாம்
சீர்தூக்கிப் பார்த்திட்டால்
சீரியதீர்வொன் றிதற்கும் தெரிந்திடலாம்
இனியேனும்...
நேரிய மாற்றம் நிகழ்ந்திடுமோ?
பாரியராவரோ நம்புதல்வர்?
பாரியாராவரோ நம்செல்விகள்?
மாறுமோ இந்நிலை? ~தமிழ்க்கிழவி(2006)