அழியாத சொந்தம் ===================

உன்னிடம் பேசுவதற்கு எதுவும்
இல்லாமல் நானும்
என்னிடம் பேசுவதற்கு எதுவும்
இல்லாமல் நீயும்
நடந்து செல்கின்ற சாலையில்
எவ்வளவு அழகாய் பேசிக்கொண்டே
வந்தது நம்முடைய மௌனம்.
**
நீ என்னுடன் கோபித்துக்கொண்டு
முகத்தைத் திருப்பிப் போகும்
நாட்களிலும்
நான் உன்னுடன் கோபித்துக்கொண்டு
முகத்தைத் திருப்பிப் போகும்
நாட்களிலும்
மிகவும் மகிழ்ச்சியாகவே
இருந்தது நம்முடைய மௌனம்
**
நீ சலசலக்கும் நீரோடையில்
குளிப்பதற்காக நீராய் நான்
பாய்ந்து வந்த போது
சிலுசிலுப்பாகவும்
நான் மலர்களை தரிசித்த
நந்தவனத்தில் நீ
தென்றலாய் வந்தபோது
நறுமணமாகவும் இருந்தது
நம்முடைய மௌனம்
**
நான் கால்நடையாக
வசந்தத்தின் வருகையைப்
பார்க்கச் சென்றிருந்த நாளொன்றில்
விமானமேறி வார்த்தைகளின்
படுகுழியில் உன் மௌனத்தை நீ
தள்ளிவிட்டுச் சென்ற நாளிலிருந்து
இன்னும் தனிமையாகவே
இருக்கிறது என் மௌனம்
**
இன்னும் நிலவைப்போல
அழகாய் சிரிக்கின்ற
களங்கமற்ற என் மௌனத்தில்
ஓசை என்னும் கற்களை வீசிக்
நீ காயப்படுத்திப் போனாலும்
ஒரு ஊன்றுகோலைப் போன்று
காலங்கள் தோறும் கூடவே வரும்
அழியாத சொந்தமல்லவா அது.
**
மெய்யன் நடராஜ்