ரயிலில்…

ரயில் ஐந்து நிமிடம் நிற்கும் அந்த ஸ்டேஷனில் ஒரு பெட்டியில் பதினைந்து பேருக்குமேல் ஏறி பார்த்ததே இல்லை. ஒழுங்காக நிதானமாக ஏறினால் அத்தனை பேரும் அவரவர் இருக்கைக்கு சென்று சேர்ந்தபிறகும் இரண்டு மூன்று நிமிடம் மிச்சமிருக்கும். ஆனால் அத்தனை பேரும் பெட்டிகளும் மூட்டைகளும் வைத்திருப்பார்கள். சிலர் கைக்குழந்தைகள் இடுக்கியிருப்பார்கள் சின்னப்பிள்ளைகள் கிறீச்சிட்டு துள்ளிக்கொண்டிருக்கும். உள்ளிருந்து தேவையில்லாமல் இறங்குபவர்கள் ஒன்றிரண்டு பேர் இருப்பார்கள்.ஆனால் எல்லாவற்றையும் விட ஏறுபவர்களின் பதற்றமும், ஒவ்வொருவரும் முதலில் ஏறிவிடுவதற்காக முண்டியடிப்பதும் இரண்டு வாசல்களிலும் ஒரு சின்ன சுழிப்பை உருவாக்கும். மனிதர்களாலான ஒரு கார்க்கை வைத்து வாசலை அடைத்துவிட்டது போலிருக்கும்.

அவ்வளவுக்குப்பிறகும் பெரும்பாலும் அத்தனை பேரும் ஏறிவிடுவதுதான் ஆச்சரியமானது. படிகளில் தயங்கி நிற்பார்கள். உள்ளே ஏறிய பிறகு வெளியே நின்றிருக்கும் எவரிடமேனும் பைகளையோ மூட்டைகளையோ கைநீட்டி வாங்குவார்கள். அந்த சந்தடிக்குள்ளேயே விடைபெறலும் கட்டிப்பிடித்தலும் நிகழும். உள்ளே ஏறியவர்கள் எதையோ நினைத்துக்கொண்டு இறங்க முயற்சி செய்வார்கள். ஏறியதுமே பெட்டிக்குள் நுழையாமல் அந்த சிறு பகுதிக்குள் நிற்பவர்களிடம் கைநீட்டி கடைசி நேர வார்த்தைகளை பரிமாறிக்கொள்வார்கள். ஐந்து நிமிடம்தான். அந்தச் சிறிய பொழுதுக்குள் மனிதர்களைப்பற்றி வரக்கூடிய எரிச்சலும் அவநம்பிக்கையும் எப்போதும் சாமிநாதனை மெல்லிய உடல் நடுக்கத்தை அடையுமளவுக்கு சீண்டுவதுண்டு.

பெட்டியை இழுத்துக்கொண்டு தன் இருக்கையை கண்டுபிடித்து அதை உள்ளே தள்ளி இருக்கையில் அமர்ந்து மூச்சை இழுத்துவிட்டு கண்ணாடிச் சன்னலுக்கு அப்பால் தெரியும் முருகேசனின் முகத்தை பார்த்து கையசைத்து விடைபெறும் வரை அந்நடுக்கமும் உடலிறுக்கமும் நீடித்தது தன் முகம் அப்போது எப்படியிருக்கும் என்ற எண்ணம் வந்தது. முகத்தை புன்னகையாக்கிக்கொண்டார். கைகால்களை தளரவிட்டு சாய்ந்து அமர்ந்தார். மூச்சு அப்போது சற்று உரக்கவே ஓடியது.

ரயில் கிளம்பத்தொடங்கியது கூச்சல்கள் அப்போதும் நீடித்தன. இருக்கைகளை அடையாளம் காண்பது, பெட்டிகளை வைப்பதற்கு இடம் தேடுவது,ஒருவரை ஒருவர் அழைத்து ஒன்று சேர்ந்து கொள்வது. இன்னும் ஐந்து நிமிடங்களுக்கு ரயில் நினைத்துப்பார்க்க முடியாத சிடுக்குகள் நிறைந்ததாகவே இருக்கும். மேலும் பத்து நிமிடங்கள் கழிந்தால் மெதுவாக எழுந்து கழிப்பறைக்குச் சென்று வரமுடியும். அப்போது நுரை உடைந்து படிவதுபோலஒவ்வொன்றும் முழுமையாக ஒழுங்கமைந்து அத்தனை முகங்களிலும் நட்பும் சிரிப்பும் இருக்கும். ஒருவரயொருவர் பார்த்து முகமன் சொற்களை பரிமாறிக்கொள்வார்கள்.

“எங்க இருக்கீங்க? ஓ, வடக்கு வாத்திமார் தெருவிலயா? அங்கே குமரேசன்ன்னு ஒருத்தர் இருப்பாரே? ஆமா, செயிண்ட் மேரீஸில வாத்தியார். கருப்பா குள்ளமா கண்ணாடி போட்டிருப்பாரு.நம்ம மச்சான்தான் இவளுக்கு தம்பிமுறை” என்று பேச்சு தொடங்கியிருக்கும். “சுகருக்கு ஊசியெல்லாம் வேஸ்டுசார். நீங்க ஒண்ணுமே பண்ணவேண்டாம், வெந்தயம் இருக்குலா, நல்ல நயம் வெந்தயம்…”.கழிப்பறையிலிருந்து திரும்பி வரும்போது ஆயிரம் வருடங்களாக சீராக இயங்கிக்கொண்டிருக்கும் ஒரு சிறிய கிராமத்தின் சாவடி போலிருக்கும் ரயில்பெட்டி. மாமன் மச்சான்கள். அண்டை அசல்கள் எல்லாரும் ஒரே சாதி ஒரே இனம் என்று சொன்னால் ஒரு வெள்ளைக்காரன் நம்பிவிடுவான்.

எதிரில் இருந்தவர் தன்னையே பார்த்துக் கொண்டிருப்பதைப் பார்த்து சாமிநாதன் அறிமுகமாகப் புன்னகைத்தார். அவர் திருப்பிப் புன்னகைக்கவில்லை. கண்களில் அறிய முடியாத ஒன்று இருந்தது. யார் இவர்? வேறு யாரையோ நினைத்துக்கொண்டிருக்கிறாரா ? கண்களைத் திருப்பிக்கொண்டு கீழிருந்து சிறிய பையைத்திறந்து அதற்குள்ளிருந்து பழைய கண்ணாடிக்கூடை எடுத்து முகத்திலிருந்த கண்ணாடியை எடுத்து அதில் வைத்துவிட்டு அதிலிருந்த பழைய கண்ணடியை அணிந்துகொண்டபோது நினைவில் அனைத்தும் தெளிந்தன. நிமிர்ந்து அவரைப்பார்த்தார். அவர் அடையாளம் கண்டுவிட்டது தெரிந்து அவரும் ஒருகணம் பார்த்து விட்டு பார்வையை விலக்கிக்கொண்டார். முத்துசாமி. ஆளே மாறிவிட்டிருந்தார். முகம் தீயில் வாட்டியதுபோல வற்றி கருமைகொண்டு தலையும் நன்றாக நரைத்திருந்தது.

இப்போது என்ன செய்ய வேண்டும்? ரயில் இப்படி சில இக்கட்டுகளை அளித்துவிடுகிறது. ஒரு சிறிய சதுரத்திற்குள் பிறவிப்பகைவர்களை ஓர் இரவு முழுக்க அடைத்து வைத்துவிடுகிறது இந்த தருணத்தை எப்படி கடப்பது? இப்போது என்ன செய்யவேண்டுமென்ற வார்த்தையே அவருக்குள் ஓடிக்கொண்டிருந்தது. பின்னர் சிலமுறை மூச்சை இழுத்துவிட்டு முத்துசாமியிடம் தணிவான குரலில் “நல்லாயிருக்கேளா?” என்றார். முத்துசாமி அதைக்கேட்கவில்லை என்று பட்டது. மீண்டும் சற்றுக் குரலை உயர்த்தி “முத்துசாமிதானே? நல்லாயிருக்கேளா ?”என்றார்.

முத்துசாமியின் உடலில் ஓர் அதிர்வு உருவாவதைக் காணமுடிந்தது. “ஆமா” என்றார். “மொதல்ல ஆளக்கண்டுபிடிக்கமுடியல. பாத்து ஒரு எட்டு வருஷம் இருக்குமில்ல?” என்றார் “ஆமா, ஏழு வருஷம் தாண்டியாச்சு” என்று முத்துசாமி சொன்னார். மேற்கொண்டு என்ன பேசுவது என்றே தெரியவில்லை. சுற்றியிருந்தவர்க்ள் தங்களைக் கவனிக்கிறார்களா என்ற எண்ணம் வந்து அவர் அவர்களை ஒவ்வொருவராக பார்த்தார். ஒரு மார்வாடிக்குடும்பம் சூழ்ந்திருந்தது. அவர்களுக்கு பிறர் உலகத்திலிருப்பதே கண்ணுக்குத் தெரிவதில்லை .தங்களுக்குள் ஹிந்தியில் மிக வேகமாக உரையாடியபடி பெட்டிக்குள்ளிருந்து தின்பண்டங்களை எடுத்து பரப்பிக் கொண்டிருந்தார்கள். ஓர் இளைஞன் மேல்படுக்கையில் அங்கிருந்த கம்பளிகளையும் தலையணைகளையும் மறுபக்க படுக்கையில் வைத்தபின் தன் கம்பளியை விரித்து தலையணை அணை வைத்து படுத்து பாட்டு கேட்க ஆரம்பித்திருந்தான். அவனுக்கும் பிறர் என்பதே உலகத்திலில்லை.

ஆறுதலுடன் சாமிநாதன் சொன்னார் “அப்பப்ப நெனச்சு பாக்கறதுண்டு. பெரிய தப்பு பண்ணிட்டமோன்னு தோணும். ஆனா அப்ப வேற வழி தெரியல. அவரவருக்கு தெரிஞ்ச வழியில போயிட்டிருக்கோம். இதுல யாரையும் கொறை சொல்றதுக்கென்ன?” மேலும் சொல்லத் தோன்றியது “தப்பு செஞ்சிருக்கலாம். ஆனா தெரிஞ்சு செய்யறதில்ல” என்றார்.

முத்துசாமியின் முகம் காட்டும் உணர்வென்ன என்று அவரால் புரிந்துகொள்ள முடியவில்லை. கண்களைத் தாழ்த்தி “ஆமா.. நானும் அப்போ ரொம்ப ஆங்காரமா குலதெய்வக்கோயில்ல போய் குருதிகுடுத்து காசுவெட்டிப்போட்டு சாபம்லாம் விட்டேன். இப்ப நெனச்சுப்பாத்தா எல்லாம் என்னத்துக்குன்னு இருக்கு. பழய கதை ,ஆனா வெளிய வாறது சாமான்யமில்ல பாத்துக்கிடுங்க” என்றார் .”ஆமாம்” என்று சாமிநாதன் சொன்னார்.

பேசப் பேச அந்த தருணம் எளிதாகி பழகும் என்று தோன்றியது. ஆனால் பேசுந்தோறும் நிறைய நினைவுகள்தான் எழுந்து வந்தன. பெருமூச்சுடன் தலைகுனிந்து அமர்ந்திருந்தார். முத்துசாமி “சில சமயம் அந்த பில்டிங் இருக்கிற ஏரியா வழியாட்டு போவேன் .இப்ப பாத்தா எல்லாம் இடிச்சு ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் கட்டிட்டான்” என்றார். “ஆமா” என்று சாமிநாதன் சொன்னார். “இன்னிக்கு அதோட மதிப்பு பலகோடி இருக்கும்” என்றார் முத்துசாமி. சாமிநாதன் தலையசைத்தார். “உங்களுக்கு அவன் குடுத்த தொகையை விட நூறு மடங்கு இன்னிக்கு அதுக்கு மதிப்பிருக்கும்” என்றார் முத்துசாமி.

“அது பின்ன அப்படித்தானே? அவன்தான ஏரியாவ டெவலப் பண்ணிருக்கான்” என்றார் சாமிநாதன். “ஆமா, அவன் தொழிலே அதுதான் .இருந்தாலும் இவ்வளவு டெவலப் ஆகும்னு நினைக்கவேயில்ல”என்று சொல்லி முத்துசாமி காலைத்தூக்கி பெஞ்சில் வைத்தார். “வளியில போற சொத்துன்னுல்லா வாரி திங்குதான்… காட்டுப்பய.சாமி உண்டும்னா அவன் நல்லா இருக்கமாட்டான்” என்றார்

சாமிநாதனுக்கு முள்குத்தியது போல கோபம் வந்தது. “அதத்தான் நான் வந்து படிச்சுப்படிச்சு சொன்னேன். உங்கப்பா கிட்ட அஞ்சாறு தடவ நேரடியா உக்காந்து பேசிருக்கேன்” என்றார். “தவளையும் பாம்பும் மாறி துப்பவும் முடியாம முழுங்கவும் முடியாம இப்படியே இருந்திருட்டிருந்தா ரெண்டு பேருக்கும் நஷ்டம். சுமுகமா முடிக்கலாம்னு சொன்னேன். அவர் கேக்கல. ஒருவாட்டி உங்க அண்ணன்கிட்ட பேசினேன் .உங்ககிட்ட பேசினேனான்னு ஞாபகம் இல்ல”.

முத்துசாமி “ஆமா, அப்ப அண்ணாவும் இருந்தார் நானும் இருந்தேன்” என்றார். “அப்பவே ஒரு பிளானுக்கு வந்திருக்கலாம். ஆனா அப்ப அப்படி தோணல. நேரா வக்கீல் கிட்ட போய் கேட்டோம். முழுசா வந்துரும்வே, எதுக்கு பங்கு போட்டுக்கிட்டுன்னு அவர் சொன்னார். அந்தால நின்னுட்டோம்” என்றார். சாமிநாதான் சீற்றத்துடன் “வக்கீலுங்க அப்படித்தான் சொல்லுவானுங்க. கேஸு முடியறது எந்த வக்கீலுக்கு புடிக்கும்?” என்றார் “என் வக்கீலும் கேசு நடக்கட்டும்னுதான் சொன்னாரு. அத மீறித்தான் உங்கள்ட்ட பேச வந்தேன்.

முத்துசாமி “எங்க வக்கீல் ரொம்ப நல்ல ஆளு. ஒத்த சாதிவேற. அவனே தேடி பேச்சுக்கு வர்ரான்னா கேஸ் ஜெயிக்காதுன்னு அவன் வக்கீல் சொல்லிட்டார்னு அர்த்தம் ,விட்றாதிக, மூச்சுப்பிடியுங்க, மறுகர வந்திட்டோம்னு சொன்னாரு. அதனால மேற்கொண்டு பேசல” என்றார்.

அவருக்குள் நினைக்க நினைக்க ஆங்காரம் பொங்கிவந்தது. “அவன் சொன்னான் சரி ,உங்களுக்கு தோணணும் இல்ல? சொத்து மேலே உங்களுக்கு என்ன உரிமை இருக்கு? எங்கப்பாவுக்கு தாத்தா வழியில வந்தது அந்த நெலம். எங்க தாத்தா கட்டின கட்டிடம். அந்த காலத்துல லிப்டன் டீ ஏஜென்சி எடுத்திருந்தார். கீழ நாலுகடை, மேல அவரோட ஆபீஸ். அன்னிக்கு இந்த ஊர்லயே பெரிய மனுஷன் அவரு. நாலு பொண்ணுக்கு கல்யாணம் பண்ணினாரு. ரெண்டு கோர்ட்டு கேஸு. அப்டியே நொடிச்சுப்போயிட்டாரு. அப்பாக்கு மிஞ்சினது அது ஒண்ணுதான். எதோ கிராமின் பேங்க்ல வேல இருந்ததுனால நாங்கல்லாம் சாப்ட்டு படிச்சோம். தாத்தா காலத்துலயே உங்களுக்கு வாடகைக்கு விட்டுட்டார். வாடகைய நிப்பாட்டி பதினேழு வருஷம். காலிபண்ணமாட்டேன்னு கோர்ட்டுக்கு போயி மறுபடி ஒரு இருபத்தேழு வருஷம்….” என்றார்

முத்துசாமி “உள்ளதுதான்” என்றார். மேலும் தாழ்ந்த குரலில் “பன்னெண்டு வருஷம் குடியிருந்தா இருப்புரிமை இருக்குன்னு ஒரு சட்டம் இருக்குல்ல?” என்றார். சாமிநாதன் உரக்க “எந்த சட்டம்? வேற வீடோ குடியோ இல்லாதவங்க ஒரு நெலத்துல இருந்தாங்கன்னாக்க, பன்னெண்டு வருஷம் வரியும் கட்டியிருந்தாங்கன்னாக்க, அவங்க குடியிருக்கற அளவுக்கு அவங்களுக்கு எடம் குடுக்கணும், அவ்வளவுதான் சட்டம். வாடகைக்கு இருக்கிற வீட்டில பன்னெண்டு வருஷம் இருந்தா அந்த வீடு சொந்தம்னு சட்டம்கெடயாது” என்றார். முத்துசாமி “அப்படி சொன்னானுங்க” என்றார்

“அவனாச் சொல்லல, நீங்க நெனச்சிங்க, அத அவன் சொன்னான். இன்னொருத்தன் சொத்து, ஜங்ஷன்ல நாப்பத்திரெண்டு செண்ட் மண்ணும் மூணு மாடிக்கட்டிடமும் அப்படியே சும்மா கெடச்சிரும்னு நெனச்சிங்க. எங்கப்பா எத்தனவாட்டி வந்து நின்னு அழுதிருப்பார். வாடகையாவது குடுங்க நயினாரேன்னு உங்கப்பாகிட்ட எத்தன வாட்டி கேட்டிருப்பார். மொதல்ல மரியாதயா உக்காரவச்சு லட்டு மாறி பேசிட்டிருந்தார் உங்கப்பா. அப்பறம் கொஞ்சம் கொஞ்சமா அவரு மேல போக இவரு கீழ வந்தபோது பிச்சக்காரனை அடிச்சு தொரத்துன மாதிரி அடிச்சு தொரத்தினாரு. ஒரு வாட்டி வேலக்காரன விட்டு பிடிச்சு வெளிய தள்ளிருக்கீங்க. ரோட்ல விழுந்து அழுக்குத் துணியோட அழுதுகிட்டே வீட்டுக்கு வந்தார். தூக்குப்போட்டுக்குவேன் தூக்குப்போட்டுக்குவேன்னு அழுதுட்டிருந்தார். எங்கம்மா சொன்னா, மூணு பிள்ளைங்க இருக்கு. நீங்க தூக்கு போட்டா மறுநாளக்கி நானும் பிள்ளகளும் வெஷத்த குடிச்சு செத்துருதோம் .மனசிருந்தா போய் சாவுங்கன்னா”

சாமிநாதனுக்கு மூச்சிரைத்தது. “பக்கத்துவீட்டு பெரியவர் வந்து சொன்னார், ஏலே சொத்துக்கால சாவுதேன்னு சொல்ற? உங்கப்பா அத குடுக்கலேன்னு நெனச்சுக்கோடேன்னு. இல்லியே மாமா கண்ணெதிர்ல மலை மாதிரி நிக்குதே. இவ்ளோ பெரிய சொத்த துப்புக்கெட்டதனமா எழந்துட்டோம்னு நெனக்கிறப்ப கும்பி எரியுதே. இல்லேன்னா அது வேற. இருக்கிறது இல்லாம போச்சுன்னா அந்த வெறுமைய தாள முடியல்லியே. நெனச்சு நெனச்சு ஆறலயே. ராத்திரி எப்ப முழிப்பு வந்தாலும் மொத நெனப்பு அதானே வருது. அந்த ரோடு வழியாப்போறதில்ல. ஊரச்சுத்திதான் ஆபீசுக்கு போறது. ஆனா இந்த ஊருன்னாலே அந்த கெட்டிடம்தானே நெனப்பு வருதுன்னு கதறினாரு. கண்ணில நிக்குது அந்த அளுகை…. ”

“ஏலே, இன்னிய தேதியில அந்தச் சொத்து ஒரு கோடி ரூவாக்கு போகுமே. கேசெல்லாம் நடத்த ஒன்கிட்ட காசில்ல. ஏதாவது தன்மையா பேசி வாங்கப்பாருன்னாரு பெரியவரு. அதையும் பேசிப்பாத்துட்டேன் மாமா. அவன் குடியிருந்ததுக்கு ஒரு தொகைய எடுத்துக்கிட்டு மிச்சத்த குடு நயினாரேன்னு கேட்டேன். செலவுக்கு வேணா காசு வாங்கிட்டு போவும்வே, சும்மா சட்டம் பேசாதேன்னு சொல்றாரு. நாய துரத்துத மாதிரி கையத்தூக்கி த்தா அந்தால போன்னு சொல்லுதாருன்னு அப்பா அழுதாரு. சட்டுன்னு கைய திருணையிலே ஓங்கி அடிச்சு, ஆவுமட்டும் பாப்பேன். இல்லேன்னா அவன் சங்க அறுத்துட்டு செயிலுக்கும்போவேன்….ஆமான்னு சத்தம்போட்டாரு”

“அன்னிக்கு எங்கப்பா முகத்தில வந்த ஆங்காரம் எனக்கு இப்ப நினைச்சாலும் சிலுக்குது. அப்பா ரொம்ப சாது. ஆபீஸ்ல அவரோட மேனேஜர் வாயில வந்தத சொல்லுவார். நானே சாப்பாடுகொண்டு போற சமயத்துல பலவாட்டி பாத்திருக்கேன். செத்த சவம் மாறி நிப்பாரு. ஒடுங்கிப்போன மூஞ்சி .எப்பவுமே கும்பிட்டுட்டு நிக்கற மாதிரி ஒரு ஒடம்பு . வாயி என்னமோ சொல்ல ஆரம்பிச்சு பாதில நிப்பாட்டினமாதிரி இருக்கும். என்னென்னமோ சொல்ல நெனச்சிருக்கார் கடசீ வரைக்கு யார்க்கிட்டயும் எதயும் சொல்லல. அப்பேர்க்கொத்தவர் முகத்துல வீரபத்ர சாமி மாதிரி ஒரு வெறி அன்னிக்கு வந்ததைப் பாத்தேன்”

“அவரு போனதுக்கப்புறம் கேச நான் நடத்த ஆரம்பிச்சேன். அப்பதான் அந்த வெறி என்னன்னு எனக்குத் தெரிஞ்சது. சொத்து போனதில்ல பெரிசு. வே, ஒரு இடி விழுந்து போயிருச்சுன்னா போட்டும்னு நினைப்போம். நம்ம தப்புன்னாலே போயிருச்சுன்னா நாலுநாள் அழுதிட்டு ஆறிருவோம்.நம்மகிட்ட ஒருத்தன் அடிச்சுப்பிடுங்கும்போது, அந்த அநீதியப்பாத்து ஒண்ணுமே செய்யமுடியாம நிக்குறது இருக்கு பாத்தியளா அதுதான் நரகம். அங்க மனுஷன் செத்திருதான். தான் வெறும் ஒடம்புதான், நாறிட்டிருக்கிற சவம்தான் அப்படின்னு தானே நெனச்சுக்குற ஒரு எடம் இருக்கே…. நான் கேசு நடத்தினது சொத்துக்காக இல்ல. அப்படி விட்டுறப்படாது, அதுக்கப்புறம் நான் மனுஷனே இல்லன்னுதான் நெனச்சுக்குவேன்.”

“என் பொஞ்சாதி ஆயிரம் வாட்டி சொன்னா .உங்கப்பா நின்னு நடத்துன கேசு .அவர் சம்பாரிச்சது அவ்வளவும் வக்கீலுக்கு கொடுத்தாரு. ஏதோ ஆண்டவன் புண்ணியத்துல உங்களுக்கு ஒரு வேல இருக்கு. நம்ம பிள்ளயளுக்கு திங்க சோறும் இருக்க எடமும் இருக்கு. சனியனை தல முழுகுங்க, நம்ம தலமொறைக்கு வந்த சாபம்னு நெனச்சுக்குங்க, இது வேண்டாம்னா. இல்லடி, அத விட்டுட்டு போனா என்னால வாழ முடியாது. மூஞ்சில ஒருத்தன் காறித்துப்பறான், தொடச்சிட்டு வார மாதிரி அது. அதவிட ஒன்னய ஒருத்தன் வீடுபுகுந்து தூக்கிட்டு போறான். செரீன்னு விட்டுட்டு வந்துருவனா ?சங்கறுத்து சாகமாட்டேன்? அதுமாதிரிதான் இதுவும்னேன்”

“அவளுக்கு ஆறல்ல. நாம வெளியூர் போயிடுவோம். இந்த பேயி நம்மள வாழ விடாது. வேண்டாம்னு சொல்லி அளுதா. நீ பொண்ணாப்பொற்ந்தவ, இதெல்லாம் ஒனக்கு புரியாது. இது ஆம்பள விஷயம். தன்மானம்தான் ஆம்பிளைக்கு பெரிசு .ஒருத்தன் அடிச்சு பிடுங்கிட்டு போறப்ப சுருண்டு திரும்பி போனாண்ணா அப்புறம் மனுஷனா வாழ முடியாதுன்னேன். அதுக்குமேலே திங்கிற சோறு பீயா ஆயிடும். எங்கப்பா காஞ்ச கருவாடுமாதிரி இருந்தார். ஆனா அவர் மனுஷன். கடசி வரைக்கு விட்டுக்குடுக்கல்ல. அவரைவிட மூணு மடங்கு வருமானம் எனக்கிருக்கு. நான் விட்டுக்குடுத்தன்னா பிறவு நான் என்ன மனுஷனா ?பாத்திருதேன்ன்னு சொன்னேன்”

முத்துசாமி சற்றுநேரம் ஒன்றும் சொல்லவில்லை. சாமிநாதன் மூச்சிரைத்து இருமுறை இருமி கீழிருந்து தண்ணீர்புட்டியை எடுத்து குடித்தார். அவருக்கு விக்கியது. துவாலையை எடுத்து துடைத்துக்கொண்டார். முத்துசாமி விழிகளைத் தாழ்த்தியபடி “எங்கப்பாட்ட நானும் பேசிருக்கேன். இல்லடா, அவுங்க எப்படி சம்பாரிச்சாங்க அந்தகாலத்துல? பாம்பேல இருந்து ஒரு அஞ்ஞூறு கிலோ டீ வரும். இங்க பக்கத்துல சேர்மாதேவில கலப்படத் டீத்தூள் வச்சிருந்தான் ஒருத்தன். கண்ட எலையெல்லாம் உலத்தி பொடிச்சு வச்சிருப்பான். அவங்கிட்ட ரெண்டாயிரம் கிலோ வாங்கி ரெண்டுத்தயும் போட்டு கலந்து ஊரெல்லாம் வித்து சம்பாரிச்சது அது. நாம் ஒண்ணும் யோக்கியனோட காசைத் திருடல. கோயில்லயோ சத்திரத்துலயோ கொள்ள அடிக்கல. அயோக்கியன் காசு இப்படித்தான் போணுமின்னு சாஸ்திரம் இருக்கு. நம்ம கையில வந்திருக்குன்னா நமக்கு லட்சுமி அருளிருக்குன்னு அர்த்தம். நம்ம பிள்ளயளுக்கு நல்லது பண்ணுவோம். நாலு கோயில் குளத்துக்கு குடுப்போம் .நல்லநாள் கெட்டநாள்னா பத்து ஏழைகளுக்கு சோறு போடுவோம். நம்ம சாமிட்ட நாம சொல்லிக்கலாம்னு சொன்னார்”என்றார்

“எப்படியோ சொல்லிச்சொல்லி அவருக்கும் அதுல நல்ல நம்பிக்கை இருந்தது .அப்புறம் இது கேஸு பாத்தேளா? வழக்குன்னு வரும்போது அதுக்கு வெளையாட்டிலே இருக்கப்பட்ட வீரமும் வெறியும் வந்துருதுல்ல? ஒண்ணுக்கொண்ணு பாத்துருவோங்கற வீம்புதான் அவர்ட்ட இருந்தது. எப்பவோ ஒருநாளைக்கு அம்மா என்ன இருந்தாலும் அவங்களுக்குள்ளதுதானே, பாதியாவது குடுத்துருவோமே ,இப்படியே மொத்தமா நாம கொண்டு போனா நல்லா இருக்கான்னு சொன்னா. திருணையில இருந்தவர் சீ சவத்துமூதீன்னு கத்திக்கிட்டு கையஓங்கி அடிக்க வந்திட்டாரு. எரணம்கெட்ட மூதி, உள்ள போடி .பொட்டப்புள்ள பேச்ச கேட்டு எவன் உருப்பட்டிருக்கான்?. இந்த வாசலுக்கு வந்து நின்னு பேசற பேச்செல்லாம் உங்க ஊர்ல வெச்சுக்கோ. இங்க பேசுன வெட்டிப் பொதச்சிருவேன்னு கத்தினார். அம்மா எதிர்ப்பேச்சு பேசி வழக்கம் இல்ல. அப்படியே உள்ள வந்துட்டா”

“அப்பா திண்ணையிலே இருந்து கூச்சல்போட்டார். ஆமாடி, தொழில்னா அதுதான். இப்ப துணிக்காரன் அம்பது ரூவா துணிய நூத்தம்பது ரூவாய்க்கு விக்கான். சாமர்த்தியத்த காட்டி பணத்த சம்பாரிக்கிறதுக்கு பேருதான் தொழிலு. நியாயம் பேசிட்டு உக்காந்திருந்தா நீயும் ஒம்பிள்ளயளும் சோத்துக்கு ரோட்லதான் உக்காந்திருப்பீக. நீ ஆட்டி ஆட்டி உடுத்திட்டுப்போறல்லா , அந்த பட்டும் நகையும் இப்டி சம்பாரிச்சதுதாண்டி நாயே. எனக்கு இது தொழிலு. தொழில்ல இப்படித்தான். நாம ஒண்ணும் வீட்டுக்கு வந்தவன் சங்க அறுத்து பணத்த ஆட்டய போடல. இது தொழில்னு அவனுக்கும் தெரியும், நமக்குந்தெரியும். அவனால முடிஞ்சா பாத்துக்கிட்டும்னார்”

“அப்பா ஆரம்பிச்சா நிப்பாட்டமாட்டார். நாம என்ன ஆளு வச்சு அவன அடிச்சமா ?மிரட்டினமா” கோர்ட்ல தானே போனோம். கோர்ட்டு நமக்கு குடுக்குதுன்னா என்ன அர்த்தம்? சர்க்காரு குடுக்குதுன்னு அர்த்தம். நம்ம தப்பு பண்ணினா கோர்ட்டு அன்னிக்கே நம்மள இறக்கிவிட்டிருக்குமேன்னார். அம்மா உள்ள நின்னுட்டு கோர்ட்ல கேஸே நடக்கல்லயே, இருவது வருஷமா வாய்தால்ல வாங்கிட்டு கெடக்குன்னா. ஆமாடி வாய்தாதான் வாங்கறோம். அதுவும் சட்டம்தான் .பின்ன கறுப்பு கோட்ட போட்டுட்டு மேல ஏறி உக்காந்திருக்கவன் என்ன கேணையனா ?சும்மாவா அவனுக்கு சர்க்கார் சம்பளம் குடுக்குது? அந்தாளுக்கு அந்தக் கட்டிடம் சொந்தம்னு யாரு சொன்னா? சர்க்காருதானே இப்ப நம்ம கையில கட்டிடத்த குடுத்திருக்கு?-சொன்னது யாரு? சொல்லுடி. சர்க்காருதானே? சர்க்காரு சொன்னதுதான் நியாயம். எங்கியும் அப்படித்தான் .சர்க்காரு சொல்லட்டும் அவனிட்ட குடுடான்னுட்டு. அப்டியே குடுத்துட்டு வந்திருதோம்னு சொன்னார். ஆமா, குடுத்திருவாருன்னு சொல்லி அம்மா அடுக்களையிலே ஏனத்த டங்குன்னு வச்சா”என்றார் முத்துசாமி

சாமிநாதன் “அவங்கவங்களுக்கு அவங்கவங்க நியாயம்” என்றார். இம்முறை முத்துசாமியின் முகம் சீற்றம் கொண்டு சுருங்கியது. “ஆமாம் எங்கப்பாரு சொன்னதுதான் தொழிலுதான். நாங்க சட்டத்த நம்பினோம். சர்க்கார நம்பினோம். ஆனா எல்லாத்துக்கும் அப்புறம் ஒரு மனுசநியாயம் இருக்குல்ல? அந்த நியாயத்த நீங்க பாத்தேளா? உங்க மனசாட்சிக்கு செரின்னு தோணுதா?” என்றார்.

சாமிநாதன் உடல்நடுங்க எழுந்து நின்றார். அந்த ஆவேசத்துடன் அமர்ந்திருக்க முடியவில்லை. “ஆமா இத நீங்க சொல்லிக்கேப்பேன்னுதான் நான் நெனச்சிட்டே இருந்தேன். உங்கப்பா சொன்னாருல்ல, அது தொழில்னா இதுவும் தொழிலுதான். அதே நியாயம்தான்வே. கீழ்கோர்ட்ல கட்டிடம் எங்கப்பாக்குள்ளதுன்னு தீர்ப்பு வந்திச்சு. உங்கப்பா அப்பீலுக்கு போனார். நெலமும் கட்டிடமும் எங்களுக்குதான்னு அங்கேயும் தீர்ப்பு. அதுக்கும் அப்பீலுக்கு போனார் உங்கப்பா. ஹைகோர்ட்ல ஏழுவருஷம் கேஸ் ஃபைல ஒருத்தனும் தொட்டுக்கூட பாக்கல்ல. இருபத்திஏழு வருஷம் முன்னாடி கோர்டுல முடிவுபண்ணி வச்ச வாடகை நூத்தியெழுபது ரூபா. அத கோர்ட்ல கட்டிகிட்டு உங்கப்பா கட்டிடத்த கையில வச்சிருந்தார். ஒம்பது போர்ஷனா பிரிச்சு வாடகைக்கு விட்டார் .வாடகை மட்டும் மாசம் ஒண்ணரை லட்சம் வந்திட்டிருந்தது. அதுக்கு மேல உங்கப்பாவுக்கு தொழில் நடக்க எடம். துணி மொத்த யாவாரம். பின்னால் தகரக்கொட்டாயப்போட்டு குடோனு. உங்க சம்பாத்தியம் எல்லாமே அந்த கட்டிடத்தவச்சுத்தான்”

“எத்தன வாட்டி அந்தக்கட்டிடத்து முன்னாடி வந்து நின்னு ஏங்கியிருக்கேன். என் சொத்து, அதில ஒக்காந்திருக்கான் ஒம்பது பேரு. ஒரு நாளக்கு இருநூறு பேரு வந்துட்டு போறான். காருல வாரான், பைக்குல வாரான் .ஓட்ட சைக்கிள்ல நான் முன்னாடி வந்து நின்னு பாக்கறேன் . என்ன விதீடா சாமீன்னு நினைச்சு நினைச்சு கண்ணீர்விட்டேன். ஹைகோர்ட்ல தீர்ப்பு வந்திச்சு. சொத்து எனக்குன்னு . உங்கப்பாகிட்ட வந்து கேட்டா ஒனக்கு துணிச்சல் இருந்தா காலி பண்ணிக்கோ போடான்னாரு. நான் அவரு காலிலே விளுந்துட்டேன். சர்க்காரு சொல்லியாச்சு. இதுக்குமேலே சோதிக்காதீங்கன்னு அழுதேன். அப்ப என்ன சொன்னார் உங்கப்பா? சொல்லும்வே. நீரு சொல்லமாட்டீரு, நான் சொல்லுதேன், இது தொழிலு. இதிலே பெரிசு பெரிசுதான். பெலம் பெலம்தான். நீ உன்னால ஆனதப் பார்த்துக்கோன்னார்”

“நான் போலீஸ் ஸ்டேஷன்ல போய்ச் சொன்னேன். அவங்க வந்து பார்த்து உங்கப்பாகிட்ட ரெண்டாயிரம் ரூவா வாங்கிட்டு போய்ட்டானுக. இல்ல பிள்ளைவாள், அவன் காலி பண்ண முடியாதுன்னு சொல்லுதான். அடிதடிக்கு வாரான். சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஆயிடப்போகுது. நீங்களே தன்மையாட்டு பேசி முடிச்சுக்குங்கன்னு அந்த எஸ்ஸை சொல்லுதான். என்னத்தப் பேச? பேசி ஒண்ணுமே இல்லன்னுதானே இருபதேளு வருஷம் கோர்ட்ல கேஸ் நடத்தினோம்? மெட்ராஸ் ஹைகோர்ட்ல தீர்ப்பு வந்தபிறகும் மறுபடியும் பேசணும்னா எங்க போயி பேசறது ? கண்ணீரோட கேட்டா போலீஸுகாரன் சிரிக்குதான்”

“அப்பறமும் வந்தேன், பேசுறதுக்கு. இத்தனைநாள் நீங்க சொத்த வெச்சிருந்ததுக்கு உண்டான நஷ்டக்காச நான் எப்படியாவது பொரட்டி குடுத்துர்ரேன், சொத்தக் குடுத்திருங்கன்னேன். உங்கப்பா என்ன சொன்னாரு? போய் நாத்துக்கள புடுங்கும்வே, உம்மால ஆனத புடுங்கும்.இப்ப காலிபண்ணமுடியாமதானே வந்து நிக்கேரு? மறுபடியும் போவும் கோர்ட்டுக்கு. கோர்ட்ல பாத்துக்கிடுவோம்னாரு. மறுபடியும் வக்கீல போய் கேட்டேன். கோர்ட் அலட்சியத்துக்கு ஒரு கேசு போடுவோம்னாரு. அந்தக் கேசுக்கு ஒரு தீர்ப்பு வரும். அந்த தீர்ப்ப எடுத்துக்கிட்டு மறுபடியும் போலீஸ் ஸ்டேஷனுக்கே போவோம்னாரு. அப்ப தெரிஞ்சுது இந்தாளுக்கு கேஸ் நடத்தறது தவிர வேறெந்த அக்கறையும் கெடயாதுன்னு. பதினாலு வருஷமா என்னுடைய மொத்த சம்பாத்தியத்தையும் இந்த வக்கீலுக்கு குடுத்திருக்கேன். இதுக்கு மேல முடியாது. வேற வழியில்லன்னு அந்தாலே வீட்டுக்கு வந்தேன். வாழ்க்கையிலே அன்னிக்குதான் முதல்முதலா குடிச்சேன். நாலுநாள் குடிச்சிட்டே இருந்தேன். காலு மண்ணில இல்ல. அழுகையும் சிரிப்புமா கிறுக்கன மாதிரி இருந்தேன்”

“அப்பதான் இவனுக வந்தானுக. கோர்ட் தீர்ப்பு வந்திருக்கு, நகலைப் பாத்துக்கிட்டு வந்தானுக. அதுல ஒரு புரோக்கர் இருந்தான். அவன்தான் சொன்னான், மொத்த அமௌண்டையும் லம்பா குடுத்துருவானுங்க, பேசாம சொத்த எழுதிக்குடுத்துட்டு வெலகிருங்கன்னு. காலி பண்ண வைக்கதோ கைமாத்தறதோ அவன் பாத்துக்குவான்னான். ரொம்ப பெரிய ஆளுங்க அவங்க. எனக்கு என்ன பண்ணன்னு தெரியல. புரோக்கரு சொன்னான், சின்னமீனை பெரிய மீனு விழுங்கும். அந்த பெரிய மீன அதவிட பெரிய மீனு விழுங்கணும், அதுதான் நியாயம். பேராசப் பட்டேருன்னா உம்ம ஜென்மகாலத்துல மறுபடி பிடிக்க முடியாது. அறுபது லட்ச ரூபா லம்பா குடுப்பான். பதினஞ்சு வெள்ளை, மிச்சம் கருப்பு. ஒரு வீட்ட வாங்கிப்போடும். தோட்டம் தொரவு ஏதாவது வாங்கிப்போடும். உமக்கும் ரெண்டு பொண்ணு இருக்கு. ஒரு நூறுபவுன் தங்கம் வாங்கி வையும் .மகாலட்சுமி தேடி வாரத வேண்டான்னு சொல்ல வேண்டாம்னான்”

“சரின்னு அந்தாலே வித்துப்போட்டேன். அறுபது லெச்ச ரூவா ஒண்ணும் சின்னத் தொகையில்ல. கையில பில்டிங் வந்திருந்தா ரெண்டு கோடிக்கோ மூணு கோடிக்கோ வித்திருக்கும் போகட்டும், அறுபது லெச்சம்லா? வித்துட்டேன். சும்மா சொல்லக்கூடாது அறுபது லெச்சரூவா வந்தப்பெறவு சந்தோஷமாத்தான் இருந்தது. வாடக வீட்டில இருந்து சொந்த வீட்டுக்கு போனோம் ரெண்டு பிள்ளயள படிக்கவெச்சு மானமா கெட்டிக்குடுத்தேன். எல்லாம் அந்தப்பணத்துலதான் .இன்னிக்கு மானமா சந்தோசமா வாழறேன்னா அந்தப்பைசாலதான் .என் பிள்ள இன்னிக்கு பெங்களூர்ல ப்ளாட் வாங்கிருக்கா. இன்னொருத்தி மெட்ராஸ்ல பிளாட் வாங்கிருக்கா. அன்னிக்கு இங்க வாங்கிப்போட்ட பிளாட்ட வித்துதான் எல்லாம் வாங்கினாளுவ. நான் ஒண்ணும் வேற யாரோட பணத்தையும் திருடிச் சம்பாரிக்கல்லயே. எங்க தாத்தன் பணம்.எங்கப்பா எனக்கு குடுத்த சொத்து. நான் போராடி சம்பாதிச்சது…” என்றார் சாமிநாதன்

முத்துசாமி அவரை உறுத்துப் பார்த்தபோது கண்கள் சிவந்திருந்தன. மூச்சில் மார்பு ஏறியிறங்கியது. “அவன் எப்படி எங்களை அந்தா சொத்திலே இருந்து வெரட்டினான்னு தெரியும்ல?” என்றார். சாமிநாதன் வெறுமே தலையசைத்தார். முத்துசாமி “அப்பவும் அப்பா இருந்தாரு. அப்போ நடுவு தளர்ந்து படுக்கையில கெடந்தாரு. சட்டுன்னு வீட்டுக்குள்ள வந்து நொழஞ்சிட்டான்னுங்க ஒரு பத்துப் பேரு. என் பொண்ணுங்க ரெண்டுபேர பிடிச்சு இழுத்து தூக்கி வேன்ல ஏத்தி கொண்டு போனானுங்க. அதுக கதறிட்டே போனத இப்பா நினைச்சாலும் சங்கு பதறுது…” என்றார். அவர் இருகைகளையும் முட்டியாக பிடித்து இறுக்கினார். கழுத்தில் தசைகள் அசைந்தன. முகம் இழுபட்டு வலிப்பு கொண்டதுபோல் இருந்தது

“என் பொண்டாட்டி நடுவுல தடுக்கப்போயி அடிவாங்கி விழுந்தா. நான் ஓடி பின்னாலே போனேன். என் மண்டையிலே கட்டையால அடிச்சு போட்டான். அக்கம் பக்கம் ஆளிருந்தாங்க. ஆனா முத்தின கேடிகள். என்ன செய்ய முடியும்? போலீஸ் ஸ்டேஷனுக்கு போனா பிராது எழுதிக்குடுங்க, மொள்ளமா பாக்கறோம்ன்னு சொன்னாங்க. அய்யா என் பொண்ணுய்யா ,என் பொண்ணுய்யான்னு கதறினேன். இரும்வே , தேடணும்லன்னு எஸ்ஸை சொன்னாரு. ஆளத்தெரியும்யா, அவன் இருக்கிற எடமும் தெரியும்யான்னேன். தெரியும்ல, அப்ப போய் நீயெ பேசிக்கோன்னாரு. அன்னிக்கு ஒருபகல் முழுக்க நான் பட்ட பாடு இருக்கே, நரகம்யா. சாயங்காலம் போன் வந்திச்சு .செந்தாரடி பிள்ளையார் கோயில் வாசலுக்கு வரச்சொன்னான். அங்க போனா அவனுகள்ல ரெண்டு பேரு வந்து பேரம் பேசினானுங்க. வீட்டைக் காலிபண்ணி வெள்ளயடிச்சு குடுத்திட்டு போயிச்சொன்னா பொண்ணுகள கூட்டிட்டு போலாம்னு சொன்னானுக”

“ஐயா காலிபண்ணிக்குடுத்திருதேன் சாமிகளா. என் பொண்ணுகள விடுங்கய்யான்னு அலறி அழுதேன். செல்லப்பொம்மையா செப்புப்பொம்மையா வளத்தேன்யா, என் கிளிகளுக்கு ஒண்ணும் ஆயிடப்பிடாதுய்யா, குலதெய்வம் மேலே கைதொட்டு சத்தியம் பண்ணுதேன்யா, என் பொண்ணுகள விட்டிருங்கய்யான்னு தலைதலையா அறைஞ்சு கதறினேன். நீ நாள்பட்ட திருடன்லா, உன்னைய நம்புவோமான்னாங்க. போலீசுக்கோ பட்டாளத்துக்கோ எங்கவேணுமானாலும் போ, என்ன வேணுமானாலும் செய், வீடு இருந்த இருப்புக்கு மொத்தமா கையில் வந்த பிறகுதான் நீ பொண்ணுக மூஞ்சிய பாப்பேன்னான் அதில மூத்தவன்”

“என்ன செய்வேன்? பொறத்தால குடோன் எல்லாம் பழய சரக்கு. அப்பா படுத்ததோட வியாபாரம் படுத்தாச்சு .குடுக்கதுக்கு வாங்குறதுக்கும் ஆயிரம் இருக்கு .அந்தக்கணக்கு முடிக்கிதுக்கு ஆறு மாசம் ஆகும். மாத்து வாடகைக்கு விட்டவனுங்க அவனுங்க பிள்ளகுட்டியோட அங்க இருக்கானுக. ஒவ்வொருத்தன் கால்லயும் போய் விழுந்தேன். அவனுக ஆயிரம் நொட்ட நொள்ள சொன்னானுங்க. குடோன்ல இருக்க அவ்வளவு சரக்கையும் அள்ளிட்டு போயி வீட்டுக்கு பொறமுத்தத்துல குமிச்சு போட்டேன் .மூணாம் நாள் மழையில மொத்த சரக்கும் அழிஞ்சு போச்சு. மாத்து வாடகைக்கு இருந்தவனுங்க போக மாட்டேன்னு சொன்னானுங்க .நீரு சட்டம் பேசுனேருல்ல, அதே சட்டத்த நாம பேசுவோம். உனக்கும் எனக்கும் என்னவே ?கட்டிடம் ஆருக்குள்ளதோ அவன் வந்து சொல்லட்டும்னாரு பெரிய நாடாரு. இன்னொருத்தரு நீர் ஆருவே அப்படிங்கறாரு”

“நான் சொன்னா காலிபண்ணமாட்டேன்னு சொல்லுதானுங்கன்னு இவனுகள்ட்ட வந்து சொன்னேன். என் பொண்ணுகள விடலேன்னா நாண்டுகிட்டு சாவேன்னு கதறினா செரி சாவு, அதுவும் நல்லதுதான்னு சொல்லுதான் தடியன். ஆனா அம்பது பேரு தடியோட உள்ள புகுந்து உள்ள இருக்க அத்தன பேரயும் அடிச்சு நொறுக்குனானுவ. சரக்கு சாமானெல்லாம் எடுத்து வெளிய போட்டானுக. ஒம்பதாம் நாளும் வீட்ட காலிபண்ணி வெள்ளை அடிச்சு வச்சுட்டு சாவியோட போய் புள்ளையார் கோயில் முன்னாடி நின்னேன். சாமி நிறைஞ்சிருக்கு கோயிலிலே. கல்லாப்போன சாமி. மனுசன கிறுக்கனாக்கி சிரிச்சுட்டு ஒக்காந்திருக்கிற பாழாப்போன சாமி”

முத்துசாமி குரல் உடைய பிச்சை எடுப்பது போல இரு கைகளையும் நீட்டி “ஒம்பது நாளுய்யா. ஒம்பது நாளு என் பொண்ணுக அவனுக கைல இருந்தாளுவ. மொத்தத்தையும் காலி பண்ணி ஒரு பழைய பர்னிச்சர் கூட இல்லாம ஆக்கி அவனுக எடுத்துக்கிட்டானுக. அதுக்கப்புறம் எனக்க பிள்ளைய கூட்டிட்டு வந்து வீட்டில விட்டாங்க. காந்திமதி கோயில்ல விட்டிருக்கோம். போய் கூட்டிட்டுப் போன்னு போன் வந்தது. ஆவி துடிக்க ஓடினேன். போய் பாத்தா பிச்சக்காரங்க வரிசையில ரெண்டும் இருக்கு. ஒருத்தி வெட்டிப்போட்டதுமாதிரி படுத்து கெடக்கா. நான் பெத்த செல்லமே, என் ராசாத்தின்னு ஓடிப்போய் எம் பொண்டாட்டி கெட்டிப்பிடிச்சா. எனக்கு வாய் வரல்லே. ஒரு அப்பனுக்கும் வரக்கூடாது அந்த நெலம. பெத்த பிள்ளைய அப்படி விட்டுட்டு பொணம் மாதிரி பாத்துட்டு நிக்கிது இருக்கே… அவன் முன்னாடி போய் சங்கறுத்து செத்து விழுந்திருக்கணும் .பத்து பேரை வெட்டிச் சாச்சுட்டு செத்திருக்கணும். இல்ல உங்க வீட்டு முன்னாடி வந்து நின்னு தீயவச்சு எரிஞ்சு செத்திருக்கணும்… முடியல்ல. ஏன்னா பாழாப்போன உடம்பு… இது உடம்பில்ல. உப்பிருந்த பாண்டம்யா”

சாமிநாதன் “நான் அப்டி நடக்கும்னு நினைக்கல்ல” என்றார். “முத்துசாமி “இல்ல, உமக்கு தெரியும். உம்ம மனசாட்சியத் தொட்டுச் சொல்லும். நாடறிஞ்ச பெருங்கேடிக்கு சொத்த விக்கும்போது அவன் எங்கள அடிச்சு குடியெறக்குவான்னு ஒமக்கு தெரியாதா? என் குடும்பத்துமேலே கைய வைப்பான்னு நீரு சத்தியமாட்டு நினைக்கலையா?” என்று கூச்சலிட்டார். சாமிநாதன் “ஆமா, அப்படிதான் செய்வான் .ஒங்களுக்கு தெரிஞ்ச ஒரே பாடம் அதுதானே ?கோர்டு கேஸு நியாயம் சட்டம்னு சொல்லி நான் என்னத்த கண்டேன்?” என்று திரும்பக் கூச்சலிட்டார்

“அதுக்காக பிள்ள குட்டியோட வாழுறவன் குடும்பத்த அழிச்சிட்டேரே வே! குடும்பத்த அழிச்சிட்டேரே! ஒம்பது நாள் தூத்துக்குடில கப்பல்ல கொண்டு வெச்சிருந்தான் என்பொண்ணுகள. எஞ்செல்லங்கள நாப்பது கூறுகெட்ட நாயிங்க…. வே, நாப்பது கூறுகெட்ட நாயிங்க வே.. முருகா! செந்திவேலா! நாப்பது நாயிங்கவே!”கூவியபடி எழுந்த முத்துசாமி அப்படியே பின்னால் சரிந்து தலை பலகையில் அறைபட விழுந்தார்.

சாமிநாதனுருக்கு கைகால்கள் கடுங்குளிரில் நடுங்குவது போல் இழுத்துக்கொண்டன. பற்கள் கிட்டித்துக்கொண்டு தாடை இறுகியிருக்க “ம்” என்று முனகினார்.சுற்றிலும் இருந்தவர்கள் திகைத்துப்போய் இருவரையும் பார்த்தனர். சாமிநாதன் காந்திக்குல்லாய் போட்டிருந்த மார்வாடி முதியவரைப் பார்த்து புன்னகைத்தார். அவரும் சங்கடமாக புன்னகைத்தார்

முத்துசாமி விசும்பிக்கொண்டிருந்தார். சாமிநாதன் எழுந்து கழிப்பறை செல்ல விரும்பினார். முத்துசாமி தொண்டையைக் கமறியபடி “போனவருசத்துக்கு முந்தின வருசம் ஒருத்தி செத்துப்போனா .ஒருத்தி இருக்கா. எம்புள்ளய ரெண்டும் அதிலிருந்து வெளிய வரவேயில்ல. யாரைப்பாத்தாலும் நடுங்குவாளுக. நாம் பக்கத்துல போனாலே எந்திரிச்சு நின்னு கைய நீட்டி ஐயோ ஐயோ வேண்டாம்ன்னு கத்துவா. படிச்சிட்டிருந்த பிள்ளைங்கய்யா. ஒருத்தி பி.ஏ தேர்ட் இயர். ஒருத்தி பி.எஸ்ஸி ஒண்ணாம் வருஷம். அதுக்கப்புறம் வீட்டுக்குள்ள நாலு செவுருக்குள்ளேருந்து வெளிய போனது கெடயாது. கதவத்தெறந்து கொஞ்சூண்டு வெளிச்சம் மேலே பட்டா எந்திரிச்சு நின்னு கத்துவாளுக” என்றார்

“பாக்காத டாக்டரில்ல .எல்லாக்கோயிலுக்கும் போய் மந்திரிச்சாச்சு. ஜெபிச்சுக்கெட்டியாச்சு. பூசை கொடை, பலி. கையிலிருந்த ரொக்கத்த முழுக்க செலவழிச்சு பிள்ளயள தேத்தி எடுக்கப்பாத்தேன். காலம் போனா சரியாவும் ,கொஞ்ச நாளு போனா செரியாயிடும்னு நெனச்சேன் ஆவல்ல. மூத்தவ கொஞ்சநாள்ல துணிய கிழிச்சு தூர எறிய ஆரம்பிச்சா. கதவத் தொறந்து ரோட்ல போறவனை எல்லாம் பாத்து பச்சப்பச்ச கெட்ட வார்த்தயாச் சொல்லுகது .துணிகள அவுத்துப்போட்டுட்டு நிக்கிறது. ஒரு வாட்டி ரோட்ல போய் முண்டக்கட்டா நின்னு துள்ளுறதக் கண்டு ஆங்காரம் தாங்க முடியாம ஓடிப்போயி முடியப்பிடிச்சு இழுத்து வீட்டுக்குள்ள கொண்டு வந்து திருவலக்கட்டைய எடுத்துப்போட்டு காட்டு அடி அடிச்சேன். எம் பொண்டாட்டி பின்னாடி வந்து வாரியலால என்ன அடிச்சா. பெத்த பொண்ணயாயா அடிக்கே? போடா, தூத்துக்குடிக்கு போய் நாண்டுக்கிட்டு போய் சாவுடா, மனுசன்னா அவன் முன்னால் போய் நின்னு சாவுடான்னு சத்தம்போட்டா.அப்படியே வெளிய வந்து உக்காந்து தலையைல அடிச்சுகிட்டு அழ ஆரம்பிச்சேன் நான்லாம் எப்பவோ செத்துப்போன மனுசன்யா” என்றார் முத்துசாமி

“எல்லாம் சொத்துக்காகத்தானே?” என்று சாமிநாதன் சொன்னார். ஏன் அப்படிச் சொன்னோம் என்று அவரே திகைத்தார். முத்துசாமி நெஞ்சில் அறைந்துகொண்டு “ஆமாய்யா, எல்லாம் சொத்துக்காகத்தான். சொத்துக்காகதான்வே. அந்தச் சொத்த வெச்சு தின்னேனா குடிச்சேனா? அந்தச் சொத்து இருந்தா என் பொண்ணுகள ராசாத்தி மாதிரி கட்டிக்குடுக்கலாம்னு நெனச்சேன். அதுக நல்லாருக்கணும்னு நெனச்சேன்…” என்றார். சாமிநாதன் “சொந்தச் சொத்தில வேணும் அதெல்லாம். அடுத்தவன் சொத்தில இல்ல” என்றார். அதைச் சொல்லவும் அவர் எண்ணவில்லை. அவருக்குள் பேய் போல வேறு எவரோ கூடி அதைச் சொல்வதுபோலிருந்தது.

“எல்லாச் சொத்தும் அடுத்தவன் சொத்துதான்யா.ஆண்டவன் யாருக்கு குடுத்தான்னு யாருக்குத் தெரியும்? என் பொண்ணு ஒரு மூணு மாசம் உயிரோட இருந்தா .சேர்மாதேவியிலே ஒரு செண்டர் இருக்கு. அங்க கொண்டு விட்டேன். ஆனா ஒரு நல்ல காரியம் பண்ணுவான், ஆறுமாசத்துக்குள்ள சோலிய முடிச்சுக்குடுப்பான். பாத்து எடுத்து அடக்கம் பண்ணிட்டு வரவேண்டியதுதான். அதைச் செஞ்சேன். பெரிசா கெடந்து நாறாம போய் சேந்தா” முத்துசாமி மேலாடையால் முகத்தை அழுத்தி துடைத்தார். திரும்ப கண்ணாடியை போட்டுக்கொண்டபோது கண்ணீர் கண்களை நிறைத்தது மீண்டும் கண்ணாடியை கழற்றி துடைத்துக்கொண்டார்.

அவர்கள் பேசிக்கொள்வதை மார்வாடிக்கும்பல் வேடிக்கை பார்த்தது . குல்லாக்காரர் “சொந்தமா சார்?” என்றார் . “ஆமாம்” என்றார் சாமிநாதன். “சாவுக்குப் போறீங்ளா?”என்றார். “ஆமா, அவருக்கு வேண்டியவங்க” என்றார். குல்லாவுக்கு தமிழ் பெரிதாகத் தெரியாததனால் என்ன பேசிக்கொண்டிருக்கிறார்கள் என்பது புரியவில்லை என்று தெரிந்தது. “ஒண்ணும் கவலைப்படாதிங்க சார். ஆண்டவன் நினைக்கிறது நடக்கும்”என்றார். “சரிங்க” என்றார் சாமிநாதன்

அந்தப்பேச்சை அதோடு முடித்துக்கொள்ளலாம் என்று தோன்றியது அதற்கு மேல் பேசுவதற்கு என்ன இருக்கிறது? முத்துசாமி கண்களைத் துடைத்து கழிப்பறைக்குச் சென்று வந்தார். வரும்போது முகம் கழுவி கொஞ்சம் தெளிந்திருந்தார். “எல்லாம் விதி சார். இங்க உக்காந்து மாறி மாறி பேசி என்ன பிரயோஜனம்? நீங்க ஒரு முனையிலே இருக்கிங்க. நான் இன்னொரு முனையிலே இருக்கேன். எங்கப்பா சொல்லுவாரு ஆடு ஒரு முனையிலே இருக்கு, புலி இன்னொரு முனையிலே இருக்கு, நடுவுல இருக்கதுதான் சாமின்னு.” என்றார். “சரி விடுங்க” என்றார் சாமிநாதன். “விடவேண்டியதுதான்… விதி நம்மள விடணும்” என்றார் முத்துசாமி

சாமிநாதன் பைக்குள்ளிருந்து இட்லிப்பொட்டலத்தை பிரித்து சாப்பிடுவதைப்பற்றி எண்ணினார். கிளம்பும்போதுதான் மீனாட்சி கையில் கொடுத்தாள். “அங்க ரயிலிலேயே விப்பாண்டி” என்றபோது “அவன் கண்ட பச்சமொளகாய அரச்சு வெச்சிருப்பான். வயித்துப்புண்ணுக்கு கெடுதல். மொளகா கம்மியா தக்காளிச் சட்னி வெச்சிருக்கேன். இத சாப்டுங்க” என்றாள். சர்க்கரை நோய் இருப்பதனால் ஏழுமணிக்கெல்லாம் சாப்பிட்டுவிடவேண்டும். இன்று இத்தனை கொந்தளிப்பு வேறு. உடல் கிடுகிடுவென நடுங்கியது. குளிரடிப்பதுபோல இருந்தது. ஒருமுறை அப்படியே நினைவுதவறி மடெரென்று நடுச்சாலையில் விழுந்தது உண்டு

ஆனால் அப்போது இந்த பொட்டலத்தை எடுத்து பிரிப்பது மிகக்கொடூரமான ஒரு செயலாக தோன்றியது. அதற்கென்ன, எப்படியும் சாப்பிடத்தான் போகிறோம்? சாப்பிடுவதில் என்ன இருக்கிறது? ஆனால் அதில் தவறாக ஒன்று தெரிந்துகொண்டே இருந்தது. அதற்குள் முத்துசாமி குனிந்து கீழிருந்து ஒரு தோல் பையை எடுத்து திறந்து உள்ளிருந்து ஒரு பொட்டலத்தை எடுத்தார். தொடைமேல் துண்டை விரித்து அதைப் பிரித்து வைத்தார். வாட்டிய வாழைஇலைக்குள் சுருட்டப்பட்ட சப்பாத்தி. உள்ளே சிக்கன் கறி. “சாப்பிடலியா?” என்றார் முத்துசாமி. “சாப்பிடணும்” என்றபடி சாமிநாதன் இட்டிலி பொட்டலத்தை எடுத்துக்கொண்டார்.

ஆனால் அவர் சாப்பிடுவதை பார்த்துக்கொண்டிருந்தபோதுகூட சாப்பிடத் தோன்றவில்லை. பொட்டலத்தைப் பிரிக்காமலேயே கையில் வைத்துக்கொண்டிருந்தார். அவ்வழியாக சென்ற ஒருவர் நின்று முத்துசாமியைப்ப் பார்த்து “என்ன மெட்ராஸுக்கா ?”என்றார் . “ஆமாமா” என்றார் முத்துசாமி. “நெல்சன் சார்ல? என்ன ரிட்டயர் ஆயிட்டீங்க போல?” . நெல்சன் “அதாச்சுல்லா நாலு வருசம். பையன் ஃபாரீன்ல இருக்கான். ஒரு மக இருக்கா அவனுக்கு… நானும் கிளவியும் இங்க” என்றார். முத்துசாமி “கடவுள் அருளாலே சௌக்கியமா இருக்கட்டும்” என்றார். நெல்சன் “இப்ப அங்க செட்டிலியாட்டிங்க போல ?இங்க வந்து பாக்குதே இல்லயே?” என்றார்

முத்துசாமி “ஆமாம் அங்கயே வீடு ஒண்ணு வாங்கி அங்கயே செட்டிலாயிட்டோம். இங்க நம்ம வாகையடில ஒரு சின்ன சொத்து கெடந்ததுல்ல, அத வித்துட்டு போலான்னு வந்தேன். நேத்திக்கி பதிவாச்சு” என்றார். “இங்க ஆரு இருக்கா?” என்றார் நெல்சன்.முத்துசாமி “முறையிலே ஒரு தங்கச்சிகாரி இருக்கா. அவ புருசன் இங்கதான் மில்லுல வேல பாக்கான் .மூத்த பையன் ஜங்சன்ல கடை வைச்சிருக்கான்” என்றார். நெல்சன் “நம்ம மாரிமுத்துல்ல, தெரியும் தெரியும்” என்றார். முத்துசாமி “அந்தால கெளம்பியாச்சு… சாப்பிட்டாச்சா?” என்றார். நெல்சன் “ஆச்சு, அவன் சொன்னானே ,பொண்ணுக்குத் தரம் பாக்கிறீகபோல?” என்றார்

முத்துசாமி அவரை ஒருகணம் பார்த்துவிட்டு “ஆமா கல்யாணம் நிச்சயம் பண்ணியாச்சு. வார ஆவணியில .அதுக்குதான் கொஞ்சம் பணம் வேணுமின்னு வந்தேன்” என்றார் நெல்சன் “பொண்ணு என்ன செய்யுதா?” என்றார். “அவோ படிச்சு முடிக்கல்ல. மெட்ராஸ்ல இருக்கா. பையன் பட்டாளத்துலே சிஆர்பிஃப்ல வேல பாக்கான்” என்றார் முத்துசாமி. “அப்ப கெட்டிக் குடுத்தா கூட்டிட்டு போயிடுவான் போல?” என்றார் நெல்சன். முத்துசாமி “ஆமாமா வடக்க எங்கயாம் கூட்டிடு போவான்னு நெனக்கேன். அவன் குடும்பமே அங்கதான். பாட்டியாலாலே அவன் அப்பா ஒரு டீக்கடை நடத்துகாரு” என்றார். “செரி, பாப்போம்” என்று சொல்லி நெல்சன் நகர்ந்தார்

சாமிநாதனின் கண்கள் முத்துசாமியின் கண்களுடன் முட்டிக்கொண்டன. சிலகணங்களுக்குப்பிறகு “ரெண்டாமத்தவளா?” என்றார் “ஆமா” என்றார் முத்துசாமி. “குணமாயிட்டாளா?” என்றார் சாமிநாதன். “இல்ல,அவளுக்கு நெறைய பிரச்னை .படிப்ப முடிக்க முடியல்ல. ஆஸ்பத்திரில வெச்சிருந்தோம். அங்க மெட்ராஸுக்கு போயி கொஞ்ச நாளு ட்ரீட்மெண்ட்லாம் எடுத்தோம். அப்பப்ப அப்படியே அமைதியாயிடுவா .மாசக்கணக்குல ஒண்ணும் பேசமாட்டா. சில சமயம் நல்லா திம்பா. சிலசமயம் ஒண்ணுமே சாப்பிடமாட்டா. சிலசமயம் நிப்பாட்டாம பேசிட்டே இருப்பா. மூஞ்சிபாத்து பேச்செடுத்து பேச்சுக்குடுக்கது இல்ல”

சாமிநாதன் வெறுமே பார்த்தார். முத்துசாமி “நமக்கு வயசாச்சு. இன்னிக்கோ நாளைக்கோ. எவன் கையிலயாவது ஒப்படைச்சா நம்ம வண்டி போவுமேன்னு நெனச்சேன். இவுக வந்தாக. பையன் இந்த ஊரு இல்ல. பொண்ணப் பாத்தான், பிடிச்சிருந்தது. அமைதியான பொண்ணுன்னு சொன்னப்போ செரின்னு சொன்னாங்க .நம்ம ஜாதில பட்டாளம் சிஆர்பிஃப் லாம் பொண்ணு கிட்டுகது கொஞ்சம் கஷ்டம்ல? சரின்னு ஒத்துகிட்டாங்க” என்றார்

சாமிநாதன் “பொண்ணு இப்படின்னு அவங்களுக்கு தெரியுமா?” என்றார். முத்துசாமி “அதுதெரிஞ்சா இந்தக்காலத்திலே எவனாவது கட்டுவானா?” என்றார். “அப்ப?” என்றார் சாமிநாதன். “நாம என்ன செய்யுறது?” என்று முத்துசாமி சொன்னார். “இருந்தாலும் சொல்லணும்ல?. ஒரு நல்ல பையன்… அவன் வாழ்க்கை…” என்றார் சாமிநாதன். “அதுக்கு நாம என்ன செய்றது? கல்யாணம்னா விசாரிச்சு செய்றது அவங்க வேல. நாமளா விசாரிக்கவேண்டாம்னு சொன்னோம்?” என்றார் முத்துடாமி. சாமிநாதன் “சொல்லியிருக்கலாம்” என்றார். கண்களைத் திருப்பிக்கொண்டு “நான் செத்துப்போய்ட்டேன்னா அவ கெதி? என் பொஞ்சாதிக்கு தெக்கு வடக்க தெரியாது .பொண்ண வெச்சுட்டு என்ன செய்வா? சொத்து குடுக்கோம்ல? போலீஸுக்காரனுக்கும் பட்டாளக்காரனுக்கு நூறுபவுன் எவன் குடுப்பான்?” என்றார் முத்துசாமி.

சாமிநாதன் ஒன்றும் சொல்லவில்லை. “இதிலே நியாய அநியாயம் பாத்தா முடியுமா? நம்ம பொண்ணுக்கு ஒரு நல்லது நடக்கணும். நாம அதைத்தானே பாக்க முடியும்?” என்று முத்துசாமி கேட்டார். சாமிநாதன் “உண்மைதான்” என்றார் பின்னர் இட்லியை எடுத்து மடிமேல் வைத்து பிரித்துச் சாப்பிட ஆரம்பித்தார்.




ஜெ மின்னஞ்சல்

எழுதியவர் : (11-Nov-18, 12:56 pm)
பார்வை : 146

மேலே