ஊர் என்று ஒன்று

என் சந்ததியினரோடு
எல்லாப் பொழுதுகளினுடே
சிரித்துக் கொண்டிருந்த மண்நிலம் என
ஊர் என்று ஒன்று அன்று இருந்தது ;

வயற்காட்டிலும்
ஓணான்கொடி 'ரோதையிலும் "
களாக்காய் புதர்களிலும் ..
மண்மணம் விதவிதமாய்
மந்தகாசமாய்
அன்று மடங்கி வெளியேறாமல்
மூக்கினுள் முங்கிக்கிடந்தது....

பசுமைப் போர்வைப் போர்த்தி
படுத்துக்க கிடந்தது அந்த ஊர்
எக்காலத்திலும் ;

தெருக்களால் நிரம்பி இருந்த
அந்த ஊரில்
திண்ணைகள் இருந்தன ;

அன்பு நிழலாடிய திண்ணைகளில்
'தாப்பு ' கிடந்தனர் பக்கத்து ஊர்க்காரர்கள்
பசியாறி ;

ஒரு வீட்டு தீக்கங்கு
தெருவின் பசிதீர்த்துக் கனிந்திருந்தது ;

கிணற்றடியில் பல விரல்கள்
பாத்திரங்களை பரிமாறி 'துலக்கி '
நீர் மொண்டு சென்றன ;

ஆற்றங்கரையில்
கம்மாக்கரையில்
காதல் கண்ணியமாய் செழித்திருந்தது ;

மார்கழி மாத கோலத்திற்கு
(மஃன்சல்) பூக்கள்
சாணி உருண்டைகளோடு
ஊர்ப் பொதுமையாகிக்கிடந்தன ;

இராப்பாடிகள்
பெளர்ணமிகளாகி கிடந்தனர்
பெளர்ணமிகள் வயசாளிகளின்
கூத்துப்பட்டரைகளாகி கிடந்தன ;
கூத்துகளில் இளமை இடைவெளிவிட்டு
அமர்ந்திருந்தது ;

எவரின்
கார்த்திகை தீபத்திற்கும்
எண்ணெய் வார்த்திட
எல்லோரிடமும் ஈரம் இருந்தது ;

பொங்கல் குழம்பு
ஊர்க் குழம்பு என
உருவாகி இருந்தது ;

சொடலை மாடன் கிடா
எவரின் கொல்லையிலும்
மேய்ந்து கொழுத்திருந்தது ;

ஜல்லிக் கட்டு காளைகள்
தலைக்கட்டு பங்காளி கணக்கா
மருவாதையோடு வளர்ந்து வந்தது ;

இளவட்டக்கல் தேய்ந்து போய்
கும்பல் கும்பலாய் கிடந்தன ;

பனங்காய்கள் வண்டிகளாகியாகி கிடந்தன
பூவரச இலைகள் நாதசுரங்களாகி இருந்தன
கோவணங்களால் சிறை பிடிக்கப்பட்ட பிடிக்குள்
பொன்வண்டுகளும் தட்டான்களும்
புன்னகைத்து கிடந்தன ;

எவரும் வேண்டாமலே
மழையாகி இருந்தன மேகங்கள் ;

எவருக்கும் தாகம் தீர்க்க
தாழ்வார சொம்புகள்
;நீர்த்ததண்ணியாகி' கிடந்தன ;

(பஸ்ஸிலைகளும்) பாட்டி வைத்தியமும்
பல்நோக்கு மருத்துவ மனைகளாகி இருந்தன ;
இழிவுகள் அரிதாகவும்
பிரசவங்கள் எப்போதும் அதிகமாகவும் இருந்தன ;

மாரியாத்தா கோயில் மாவிளக்கு
மஸ்தான் சாகிபு மருமகளுக்கும்
சூசையம்மாள் வீட்டு கோழிக்குருமா
செக்கப்பி தேவர் சம்மந்தக்காரர் விருந்துக்கும்
ராவுத்தர் ருசியும் உழைப்பும்
பல வீட்டு செங்கற்களிலும் வாழ்ந்து இருந்தன ;

பருத்திக்கொல்லைகள்
கண்டாங்கி தாவணி பாவாடை என
காய்த்து கிடந்தன ;

ஊருணிகளிலும் களத்துமேடுகளிலும்
அப்பாத்தாக்களும் மதனிகளும்
ஓற்றுமையாய் உசாவிக் கிடந்தனர் ;

ஒரு மரத்துக்கு கள் மட்டும் சிலர்
ஒளியாமல் குடித்து இருந்தனர் ;

( தொடரும் )

எழுதியவர் : அகன் (12-Nov-18, 11:59 am)
சேர்த்தது : agan
பார்வை : 50

மேலே