சிட்டுகுருவி கானம்
வானம் மேவிய மலைச்சாரல்.
கானமொன்றை பாடச் செய்தென்ன?
சிட்டுகுருவியொன்று பெரும் சிகரம் தொடும் ஆசை கொண்டு,
தன் சிறகை விரித்து மெல்ல மெல்ல பறந்தென்ன?
பெரும் பறவைகளும் சர்வ சாதாரணமாக பறக்க சிட்டுகுருவி சிறகுகள் வலிக்க நிலை தடுமாறி மலைச்சரிவில் விழுந்ததென்ன?
விழந்ததும் சிறு இளைப்பாறிக் கொண்டு மீண்டும் உயரே பறந்ததென்ன?
சிட்டுகுருவியதும் தன் சக்தி மீறிய ஆசை கொண்டு தன்னைத் தானே வருத்திக் கொள்வதென்ன?
சிறுகுருவியும் பெரும்சிகரம் தொடுமோ?
சிறு சிறகுகளும் வலிமை பெறுமோ?
கீழே விழுந்து தன்னுயிரை விடுமோ?
மௌன நிலை கொண்டு மனச்சிறகை விரித்து நானும் சிட்டுகுருவியோடு பறக்க சிரமத்தில் தவித்தென்ன?
காற்று தன் வீரியம் ஏற வீறு வீறு வேகமாக வீசியதென்ன?
காற்றின் வேகத்தில் நானே தடுமாறியதென்ன?
சிட்டுகுருவியும் என்னைக் கண்டு சினேக பார்வை கொண்டு சின்ன சிறு சிரிப்பில் உயரே பறக்கும் சக்தி தந்ததென்ன?
சர்சரென்று சாரல்மழை தூவ மேகங்கள் மேவிய மலை மேல் ஏறிவிட்டோம்.
சிகரமோ எங்கோ எட்டாத உயரத்தில் இருந்தென்ன?
சிறுதூரலில் நனைந்தாலே சிட்டுகுருவியும் விரையலெடுத்து நடுங்கியதென்ன?
அதற்குமேலே செல்ல வேண்டாம் என்று கீழே திரும்பி வந்ததென்ன?