யார் கடவுள்
கதிரவன் காட்சியளிக்கும்
காலை வேளையில் ,
கதவை தட்டும் சத்தம் கேட்க,
கண் விழித்து கதவை திறக்க,
காக்க வேண்டிய பிள்ளைகள்,
கல்நெஞ்சாகி கைவிட்டதால் ,
கால் வயிற்றை நிரப்ப,
கைத்தடி காலத்திலும் உழைத்ததால்,
கால் வலியில் துடித்த கணவனுக்காய்,
கடன் கேட்க வந்த ,
கடைசி வீட்டு குசேலம் பாட்டிக்கு .
காசு கொடுக்க ,
கஜானா காலி என்றதால்,
கண்ணனின் உண்டியலில்
காசு எடுக்க கை முயற்சிக்க,
காதில் ஒலி கேட்டதால்,
கண் விழித்த கண்ணன்.
கைபேசி வாங்குவதற்காய்,
காலை மாலை உழைத்த காசை,
கைவிட மனதில்லாமல்,
கத்தினான் அம்மாவிடம்,
காரியம் அறியாமல்.
கடவுளுக்கு கடன் கொடுப்பது,
கடையவனுக்கு கொடுப்பதே,
காணிக்கையாக்கு உன் காசை,
கைபேசியை கடவுள் தருவார்,
காதில் ஒலித்த அம்மாவின்,
கருத்துக்களால் , காணிக்கையானது,
கண்ணனின் கைபேசி.
கடலில் மூழ்கி சிப்பி எடுப்பதும்,
கடலோரத்திலே காசுக்காய் விற்பதும் ,
கைவந்த கலையே , அவன் பணியே,
கல்வியும் விலையானதால்,
கற்க வேண்டிய வயதிலே , கடல் பணி,
கடற்கரையிலே கடலையிலே ,
கால் வயிற்றை நிரப்பி திருப்தியாவான்
காலை பணிக்கு வந்தவன்,
கைபேசி எதிர்பார்த்து,
கடினப்பட்டதை , காத்திருந்ததை,
கனவு போல் மறந்து விட்டு,
கால் ஊன்றி கடலுக்குள் பாய்ந்தான்,
கண்களால் சிப்பிகளை தேடினான்,
கிடைத்ததை தவற விடாமல்,
காற்றைத் தேடி மேலே வந்தவன்,
கையில் சிக்கிய கவர்ச்சி பொருளை,
கண் எடுக்காமல் பார்த்தான்,
கனவா ? நிஜமா? அறியாதவனாய்,
கடையவனுக்கு கொடுத்ததை,
கடவுள் திரும்ப தந்துவிட்டார் என்று,
காரை விட வேகமாக சாலையில்,
காரின் வேகத்திற்கு தடையாய்,
குறுக்கே நின்ற கூட்டத்தை,
கண்ணோக்கி காது கொடுத்தான்,
கடலில் குளித்தவளின் ,
கழுத்து மாலையை காணவில்லை.
கணவனின் கடின உழைப்பால்,
கிடைத்ததை இழக்கவா வந்தேன்,
கண்ணீரால் கதை சொல்கிறாள்,
கவனமிழந்து மாலை தொலைத்தவள்.
கடவுளின் பரிசு என எண்ணவா?
கொள்ளைகாரன் ஆகவா?,
கேள்வி ? பதில்? தேடியவன்,
கையிலெடுத்து நீட்டினான்.
கண்ணீர் மகிழ்வாய் மாற,
கடவுளென நினைத்து இரு
கையெடுத்து கும்பிட்டு அவள்
கரத்தில் வாங்கின நேரத்தில்,
கரவொலிகள் கண்ணனுக்காய்.
கதிரவன் காட்சியளிக்கும்
காலை வேளையில் ,
கதவை தட்டும் சத்தம் கேட்க,
கண் விழித்து கதவை திறக்க,
காவல் துறை ஆய்வாளர் ,
கைது செய்ய அல்ல
காவல் துறையின் பாராட்டும்
கண்ணனுக்கு வெகுமதியும்.
கலர் போட்டோ பத்திரிகையிலும்
காகித உறையை பிரித்தான்
கண்களால் நம்ப முடியவில்லை
கைபேசி வாங்குமளவுக்கு பணம்
கடையவனுக்கு கொடுங்கள்
காலதாமதமானாலும்
கடவுள் திரும்ப தருவார்
கைபேசி பலரிடம் பேசியது
கண்ணனின் உதவியால்
அன்புடன்
S மெர்லின் @ நல்ல நிலமாகு நண்பா
பிடித்திருந்தால் பகிருங்கள்