தேடலும் சற்று நிலைபெறும்

உன் விழிகள் சந்தித்த நொடிப்பொழுதில்
நிசப்த நிமிடங்களாய் மாறும் என் அத்தனை இரவுகளும்
என்னுள் வார்த்தை பிரளயத்தை ஓடச்செய்கிறது.

மனிதஜீவிதத்தில் இதுவரை கண்டிராத மந்திரப் பார்வை
என் நிதர்சன தருணம் அனைத்தையும் மறக்கச்செய்ததேனோ

பெண்ணாகிப் பிறந்த இவளுள் , அந்த பிரம்மன் தானோ
இயற்கையின் அத்தனை அழகையும் ஒளித்துவைத்தான்.

இதழ் தளத்தின் புன்னகை நடனம் ...!
விழி தளத்தின் சங்கேத பார்வை ...!
விரல் தளத்தில் பூக்களின் மென்மை...!
மெய்யுடல் முழுதும் நிலவின் மேன்மை...!
இவை அத்தனையும்
என் உயிரின் கடைசித்தளம் வரை சப்தமிட்டு செல்வதேனோ ...!

நுந்தன் கடைக்கண் பார்வையால் இங்கே
கவிதைகள் ஜனிக்கத் துவங்கிவிட்டன.
தேவமங்கை தானோ என்ற ஐயப்பாடும்
சிந்தையுள் வலுக்கத் துவங்கிவிட்டன.

என் மொழியியல் கூட உன் விழியியலை
வர்ணிக்க வேண்டி வார்த்தை தேடலைத் துவங்கியது.
உன் பார்வை அலைகள் ஓயுமென்றால்
இந்தத் தேடலும் சற்று நிலைபெறும்...

எழுதியவர் : வேத்தகன் (26-Nov-18, 2:34 pm)
சேர்த்தது : வ.கார்த்திக்
பார்வை : 313

மேலே