யுத்தத்தின் தாக்கமும் மனிதத்தின் ஏக்கமும்
காலை புலர்வது
விடியலுக்காகவா?
இல்லை
வெடிகளுக்காகவா..!
என்ற
கேள்வியுடன்தான் - எங்கள்
காலை பொழுது - தினமும்
கண் விழிக்குது...
சிரிக்கும் குழந்தையின்
செல்ல மொழிகளால்
சித்தம் குளிர்ந்தது இல்லை,
ஆனால்
அழுத குழந்தையின்
கண்ணீர் துளிகளால்
நித்தம் கொதித்தது நெஞ்சம்...
வானம்பாடியாய்
ஆடிப்பாடி
ஓடி விளையாடி
உடல் களைத்து
உள்ளம் களித்து
அன்னை மடி தேடி
அழகு முகம் சாய்த்து
சிரிக்கும் பிள்ளையின்
ஆசை விழி பார்த்து
அனைத்து முத்தமிட்டது இல்லை,
நொடிக்கொருமுறை
வெடிக்கின்ற குண்டுகளின்
திடிக்கிடும் சத்தத்தில்
உடல் நடுங்கி
உள்ளம் நடுங்கி
தாயின் மடி தேடி
தங்க முகம் புதைத்து
தேம்பியழும் பிள்ளையின்
தவித்த விழி பார்த்து
அனைத்து அழுதது உண்மை...
மஞ்சல் முகம்தனில்
மங்கள பொட்டிட்டு
மல்லிகை பூச்சூடி
மருதாணி கையிலிட்டு
பாவாடை தாவணியில்
பம்பரமாய் சுற்றிவந்து
பார்த்தவிழி ரசித்திருக்க
காணாமல் நாணுகின்ற
கன்னியரை கண்டதில்லை,
காம அரக்கர்கள் - எச்
சாமமும் வரலாமென
கற்ப்பினை காக்க
நித்திரை தொலைத்து
ஆணாய் உடை தரித்து
ஆயுதம் கையில் ஏந்தி
கண்ணி வெடிகள் அல்ல - அக்
கன்னிகளே வெடிகளாக
கண்கள் கண்டதுண்டு...
காலை வேலை
மாலை வீடு
நிலா சோறு
துணை சேறு - என
இல்லர இன்பம் கண்டு
பிள்ளை பாசத்தில்
பத்தினி நேசத்தில்
பெற்றேன் சுகமென்று
நெஞ்சடைக்க பெருமை கொண்டு
நிறைவான வாழ்வை வென்ற
ஆடவரை அறிந்ததில்லை,
வெடிகுண்டு சத்தத்தில்
நித்தமும் நடுங்கி
மனைவியை காக்க - பெற்ற
பிள்ளையை காக்க
புகலிடம் தேடி - மண்ணில்
புதைகுழி தோண்டி
புதையலை காப்பதுபோல் - மனைவி
மக்களை காத்திட்டு
காடு மேடு ஏறி - குடும்பம்
காக்க ஓடி ஓடி
போராட்டமே வாழ்க்கையென
போராளியாய் ஆகிப்போன
ஆடவரை அறிந்ததுண்டு...
பேரக்குழந்தையின்
பிஞ்சு விரல் பிடித்து
கொஞ்சி பேசிடும்
குழந்தை மொழி கேட்டு
செல்ல சினுங்களும்
சின்ன கோபமும்
மெல்ல புன்னகைத்து
மனதார ரசித்திரிந்து
பெற்ற பிள்ளையின்
புகழ்வாழ்வு நலம் பார்த்து
காலம் வந்ததென்று
கண்மூடும் நிறைவாழ்வை
காலத்தின் கையில் பெற்று
காண்மூடிய முதுமையை
எக்காலமும் கண்டதில்லை,
பெற்ற பிள்ளையும்
பிஞ்சு மழலையும்
பாயும் குண்டுக்கு
நாளும் இறையாகி
கைகள் இழந்து
கால்கள் இழந்து
துள்ளியோடும் வயதில்
முற்றும் முடமாகி
புதைகுழியில் பிணமாகி
மலராத மொட்டுக்கள்
கையில் ஆயுதமாய்
காணும் நிலை கண்டு - எனை
எமண் கொண்டு போகாதா'யென
ஏக்கத்தோடு கண்விழித்து
காத்திருக்கும் முதுமையை
காலனும் கண்டதுண்டு...
இப்படி,
புதிதாய் பிறந்த பிஞ்சு முதல்
முழுதாய் வாழ்ந்த முதுமை வரை
நிம்மதியின் நிழல் கூட கண்டதுமில்லை
நிறைவான நித்திரையை கொண்டதுமில்லை
எங்கள் வாழ்வு என்று வளம் பெறும்?
அந்த வானம் என்று வசப்படும்?
போர்கள் கண்ட பூமி - என்று
புன்னகையின் வாசம் காணும்?
குண்டுகளின் சத்தம் ஓய்ந்து - என்று
குயில்களி கீதம் கேட்கும்?
என்று
ஏக்கத்தோடு பார்க்கின்றோம்...
எங்கும்
மனிதன் இறந்து போனாலும்
மனிதம் நிலைத்து வாழட்டும்...
என்று
வேண்டி வேண்டி கேட்கின்றோம்...