அலைபேசியின் ஆட்சி

அலைபேசியின் ஆட்சி:--
-----------------------------------------
அன்று மூவேந்தர்கள் ஆட்சிக்குள் வாழ்ந்தார்கள் நம் முன்னோர்கள்.
*
இன்று நாம் வாழ்கின்றோம் அலைபேசியின் ஆட்சிக்குள்!
*
காண்கின்ற யாவருமே அலைபேசியைக் கையில் வைத்திருக்கும் காட்சி!
*
அலைபேசி ஒன்றேதான் வாழ்வின் மாட்சி என்பதே இங்கு யாவரின் மனசாட்சி!
*
தொடர்வண்டிப் பயணத்தில் என்றேனும் சென்றதுண்டா?
*
சென்றவர்கள் அலைபேசி இல்லாத பயணியை ஆங்கே கண்டதுண்டா?
*
சுற்றிலும் என்ன நடக்கிறது எனத் தெரியாமல் அலைபேசியில் பேசுவோர்கள்!
*
ஒலிவாங்கியை செவியிரண்டில் பொருத்திக்கொண்டு,
அலைபேசியில் இசைகேட்டு உலகையே மறப்போர்கள்!
*
ஒலிவாங்கிப் பொருத்தாமல் தனக்குப் பிடித்ததுதான், பிறருக்கும் பிடிக்குமென, தப்பான முடிவெடுத்து,
டப்பாங்குத்துப் பாடல்களை செவிடாகும் வண்ணம் இலவசமாய் கேட்கவைக்கும், முரட்டுத்தனமாய் அலைபேசியைப் பயன்படுத்துவோர்கள்!
*
எதிரில் இல்லை என்ற தைரியத்தில், மனைவியுடன் அலைபேசி வழியே சண்டை போடுவோர்கள்!
*
எதிரில் நிற்பதாய்
கருதிக் கொண்டு,
மேலாளர்களுடன் பணிந்து அலைபேசியில் பேசுவோர்கள்!
*
உப்பு சப்பில்லாத தகவல்களை அரட்டை அடிக்க அலைபேசியைப் பயன்படுத்துவோர்கள்!
*
வயது வித்தியாசம் இல்லாமல்,
அலைபேசி விளையாட்டுலகில்
தம்மை இழந்து,
இறங்குமிடம் தவறி
அடுத்தநிலையத்தில்
இறங்குவோர்கள்!
*
மகளிர்களைக் கவனித்தால்,
அலைபேசி இல்லாத பெண்ணென்று யாருமில்லை!
*
அங்கே உதடுகள் அசையும்! ஆனால் சத்தமே வராது! இப்படிப் பேசுவோரெல்லாம்,
காதல் வயப்பட்ட பெண்கள்!
*
பஸ்/ரயிலில் ஏறியதிலிருந்து இறங்கிய பின்னரும் கூட
நடந்துக்கொண்டே பேசுவார்கள் இவர்கள்!
*
ஊரே கேட்பது போல
உரக்கப் பேசுவோர்கள் திருமணமான பெண்கள்!
*
நாணம்வழிந்தோடப்
பேசுவோர்கள்,புதிதாய் மணம்புரிந்த பெண்கள்!
*
அலைபேசி வழியே குழந்தைகளுக்கும்,
கணவருக்கும் கட்டளையிடுபவர்கள்,
பணிக்குச் செல்கின்ற பெண்கள்!
*
அலைபேசி வாயிலாக தினம்தினம் நடைபெறும் சண்டைகள் எத்தனை?சம்பந்தங்கள் எத்தனை?பிரியாவிடைகள் எத்தனை?தகவல் பரிமாற்றங்கள் எத்தனை?வாழ்த்துகள் எத்தனை?
*
முடிவாக,வியப்பான ஒருசேதி!
தகவலால் அனைவரையும் எளிதில் இணைக்கும் அலைபேசிதான்,
*
மனிதர்கள் யாவரையும், தனித்தனி தீவுகளாகப் பிரித்து விடுகிறது என்பதையும்,மறந்து விடாதீர்கள்!

எழுதியவர் : உமாபாரதி (29-Nov-18, 10:33 pm)
சேர்த்தது : உமாமகேஸ்வரி ச க
பார்வை : 1188

மேலே