நட்பு
நடிப்பிற்கோர் நண்பன் என்றிருந்த
அரியதோர் நண்பனை ஏனோ
விட்டுப்பிரிந்தேன் , தீயோர் வைத்த
'நட்பென்ற வஞ்சக வலையில்' வீழ்ந்தேன்
என்னையும் அறியாமல் ஏதேதோ
வேண்டாத காரியங்களில் ஈடுபட்டேன்
என்வயம் இழந்து தீய நட்பின் தூண்டுதலால்
இறுதியில் எல்லாம் இழந்து துன்பமெனும்
பெரும்குளத்தில்,தீயநட்பாம் முதலையின்
பிடியில் சிக்கி தவித்தேன் பெரும் வேதனையில்,
அப்போதுதான் பாவி என் மனதில்
நட்பின் மாணிக்கம் என் நண்பன் நினைவுக்கு வந்தான்
என்னை அறியாமலே என் நாவு 'நண்பனே காப்பாற்று'
என்று கூவி அழைக்க , அதைக்கேட்டது போல்
அன்று முதலையின் பிடியில் சிக்கிய கஜேந்திரனைப்போல்
நான் கத்த, கருடன்மேல் வந்து கொடிய முதலையின்
வாயிலிருந்து யானையை மீட்டிய திருமாலன்ன
என் ஆருயிர் நண்பன் என் முன்னே தோன்றினான்
நான் அவனை பிரிந்து மறந்ததையும் சற்றும்
பொருட்படுத்தாது , ;நண்பனே என்று அழைத்து
என்னை அணைத்துக்கொண்டான்
'நானிருக்க உனக்கேன் இனி இந்த கதி என்றான்
கூனி, குறுகி ஒன்றும் சொல்ல நா எழாமல்
வெட்கி நின்றேன் நான்
இப்போது என் நண்பன் என் கண்முன்னே
நான் வணங்கும் தெய்வமாய் காட்சி தந்தான்
'காக்கும் தெய்வமாய்' என் சொல்வேன்
உயர் நண்பனின் நட்பின் பாங்கை.

