பணம்
பேட்டை முழுக்க பரபரக்கும்
ஓட்டுக்கு பணமென்ற செய்திக்கு
பிட்டம் குலுங்க குலுங்க
இளித்துக்கொண்டோடும்
அக்கூட்டம் தாண்டி ஓடுது
அந்த வடை கடையை...
அக்கடையின் கீழேதான்
பீழையும் சொறியுமாய் அவளும்
குற்றுயிராய் அவள் குழந்தையும்.
எலும்பு புடைக்க ஜீவனற்று
மிச்சத்தை யாசிக்கும் பசிக்கு.
குப்பையை தாண்டித்தாண்டி
மந்திரியின் சாணி திங்க ஓடும்
ஜன்னல் ஜாக்கெட்டுக்காரி
காறி உமிழ்ந்த எச்சிலொன்று
அவள் குழந்தையின் மீது...
அந்த பராசக்தி...காளி...
ஐயோ...அம்மே...வென்று
மின்னல் பட்டதாய்
அலறி அலறி துடிக்கும்
குரலையும் பசி கொன்றுபோக...
மண்ணையும் நிலத்தையும்
மலடாக்கி உன்னை மலமாக்கி
பிள்ளைக்கறிக்கு அலையவிட்ட
பொறுக்கியை வாழ்த்தப்போகும்
கண்ணாடி ரவிக்கைக்காரிக்கு
தெரியவேயில்லை அவளது
சாதியும் மதமும்
சீழும் சிரங்குமாய் போகுதென்று.