தேர்ந்தவர்க்கு ஆகம் உறாமை அணி – அணியறுபது 53

நேரிசை வெண்பா

யோகிக்குச் சாந்தம் உயரணி; ஓயாத
போகிக்(கு) அணிபொன் பொறிநுகர்வே; - தேகிக்குத்
தேக நிலையைத் தெரிதலணி; தேர்ந்தவர்க்(கு)
ஆகம் உறாமை அணி. 53

- அணியறுபது,
- கவிராஜ பண்டிதர் செகவீர பாண்டியனார்

பொருளுரை:

சாந்தம் யோகிக்கு அழகு; பொறி நுகர்வுகள் போகிக்கு அழகு; தேக நிலைமையைத் தெளிதல் தேகிக்கு அழகு உள்ளம் தெளிந்தவர்க்கு மீண்டும் உடல் உறாத தலைமையே அழகு.

யோகம் என்னும் சொல் கூடுதல், சேர்தல் என்னும் பொருள்களையுடையது. யோகத்தை யுடையவன் யோகி. எவரோடும் கூடாமல் ஏகாந்தமாய்த் தனியே அமர்ந்து இறைவனையே கருதி யுருகியிருப்பது யோக நிலை. ஆன்மா பரமான்மாவோடு கூடியிருக்கும் கூட்டத்தை இது குறித்துள்ளது. அமைதியும் சித்த சாந்தியும் யோகியின் இயல்புகளாய் இனிதமைந்துள்ளன. ஆன்மாவையே நோக்கி வருபவர் மேன்மையான ஆனந்த நிலையை அடைந்து வருகின்றார்

போகி - போகங்களை வளமாக உடையவன். இந்திரனுக்கு இப்படி ஒரு பெயர். நிறைந்த செல்வங்களும் சிறந்த சுகபோகங்களும் போகிக்கு உரிமைகளாய் உவகை புரிகின்றன.
தேகி - சீவன். தேகத்துள் இருப்பவன்: தேகத்தையுடையவன் என்பதாம். தனக்கு நிலையமாயுள்ள தேகத்தின் நிலைமைகளை உணர்ந்து மறுபடியும் பிறவித் துயரங்கள் நேராதபடி செய்து கொள்பவனே உயிர்க்கு நன்மையைச் செய்து கொள்கின்றான்.

உண்மையை உறுதியாகத் தெளிந்தவர்க்கு அழகு எது? புன்மையான உடம்பை எடுத்து மேலும் மேலும் பிறவித் துன்பங்களில் உழலாமல் பேரின்ப முத்தியைப் பெறுவதேயாம்.

பிறத்தல் இறத்தல் பெருந்துயரம்; இத்தை
மறத்தல் மதிகேடே யாகும்; - துறத்தலெனும்
தெய்வத் திருவுடையார் எய்துவர் மெய்யான
உய்வைத் தருவீடு வந்து.

மதிகேடர் யார்? பேரின்ப வீட்டை அடைய வுரியவர் எவர்? என்பதை இதில் அறிந்து கொள்கிறோம். துன்பம் யாதும் தோயாமல் என்றும் இன்பம் தோய்ந்துவர ஆய்ந்து செயல் புரிந்து உய்ய வேண்டும்.

பிறப்பு எந்த வகையிலும் எங்கும் துன்பமே. பிறவாமை ஒன்றே என்றும் குன்றாத பேரின்பமாம்.

எடுத்து வந்துள்ள இந்த அரிய மனிதப் பிறவிக்கு உரிய பெரிய பயன் யாதெனின், அடுத்த எந்தப் பிறவியும் அடையாமல் செய்து கொள்வதேயாம். செயல் ஒழுக்கமாய் உள்ள அளவே அஃது எய்துகிறது.

பெறலரிய பெரும் பேறாய் பெற்று வந்திருக்கின்ற இப்பிறப்பில் உயிர் துயருறாத வழியை நாடித் தப்பவில்லையானால் வேறு எவ்வழியும் வெவ்விய துயரங்களே விளைந்து விடும்.

யாதொரு நிலையுமின்றி விரைந்து அழிந்து ஒழிகின்ற உலகப் பொருள்களில் பற்று முற்றும் அற்றவரே பரம்பொருளைப் பற்றி உய்ய நேர்கின்றார்.

ஆசை அற்ற யோகிகளே ஈசனைத் தோய்ந்து இன்பம் உறுகின்றனர். அதனால் பிறவி தீர்ந்து பேரின்ப நிலையைப் பெறுகின்றனர்.

சிந்தையது என்னச் சிவனென்ன வேறில்லை
சிந்தையின் உள்ளே சிவனும் வெளிப்படும்
சிந்தை தெளியத் தெளியவல் லார்கட்குச்
சிந்தையின் உள்ளே சிவன்இருந் தானே. (1)

தானும் அழிந்து தனமும் அழிந்துநீ
டூனும் அழிந்து உயிரும் அழிந்துடன்
வானும் அழிந்து மனமும் அழிந்துபின்
நானும் அழிந்தமை நான்அறி. யேனே. (2)

ஒழிந்தேன் பிறவி உறவென்னும் பாசம்
கழிந்தேன் கடவுளும் நானுமொன் றானேன்;
அழிந்தாங் கினிவரும் ஆக்கமும் வேண்டேன்
செழுஞ்சார் புடைய சிவனைக்கண் டேனே. (3} – திருமந்திரம்

யோக சமாதியில் திருமூலர் அனுபவித்துள்ள சிவானந்தப் பேற்றை இவற்றால் அறிந்து கொள்கிறோம். சிவனைக் கண்டேன்; சிந்தையின் உள்ளே சிவன் இருந்தான்; பிறவி ஒழிந்தேன் என மொழிந்துள்ள மொழிகள் உண்மை நிலைகளை உணர்த்தி உறுதி நலன்களைத் துலக்கி யுள்ளன.

புலைப் பாசங்கள் ஒழிந்து மனத்தூய்மையுடன் தன்னை உண்மையாய்க் காண்பவன் பரமான்வையே காண்கின்றான். கண்ணுள் ஒளியாய் உயிருள் உயிராய் ஒளி செய்திருக்கின்ற பரஞ்சோதியைப் பரம யோகிகள் பார்த்துக் களித்துப் பரமானந்தமாய் உள்ளனர்.

அறுசீர் விருத்தம்
(மா மா காய் அரையடிக்கு)
(காய் வருமிடத்தில் விளம் வரலாம்)

யானும் தானாய் ஒழிந்தானை
யாதும் யவர்க்கும் முன்னோனைத்
தானும் சிவனும் பிரமனும்
ஆகிப் பணைத்த தனிமுதலை
தேனும் பாலும் கன்னலும்
அமுதும் ஆகித் தித்தித்தென்
ஊனில் உயிரில் உணர்வினில்
நின்ற ஒன்றை உணர்ந்தேனே, - திருவாய்மொழி: 8: 8

நம்மாழ்வார் பரமனைக் கண்டு மகிழ்ந்து களித்துத் திளைத்துள்ள உண்மையை இதில் உணர்த்தியிருக்கிறார். கவியில் கனிந்துள்ள சுவைகளை உணர்ந்து நுகர்பவர், உயர்ந்த தத்துவங்களைத் தெளிந்து வியந்து மகிழ்ந்து கொள்வர்.

அறுசீர் விருத்தம்
(மா மா காய் அரையடிக்கு)
(காய் வருமிடத்தில் விளம் வரலாம்)

தன்னைப் பேதம் ஆய்க்காண்கை
சகத்தில் காணப் பட்டதாம்;
தன்னைப் பேதம் அறச்சிவமென்(று)
அறிவோன் ஞானி தான்ஒருவன்
என்னக் கருதி மறைஅதுநீ
யானாய் என்ன அத்துவிதம்
தன்னைப் புகலும்; கண்டதனைச்
சாற்றல் மறையின் கருத்தன்றே (1)

தூய்தா கியநெஞ் சுடையார்க்குத்
தாமே சிவமாத் தோன்றுமால்
தீதா கியநெஞ் சுடையார்க்குத்
தெளிய அபேதம் இகலின்றி
வேதா கமங்கள் விளம்பிடினும்
விளங்கா(து) என்றும் வேறென்னும்
வாதால் அழிவர் அவர்மாயை
மயக்க மயங்கு மதியினார். (2)

நெஞ்சம் சோகம் பாவனையில்
நிற்க நிறுத்தி விடயங்கள்
அஞ்சும் துறவாத் துறந்தசிவ
யோகி ஒருவன் அடியிணையில்
துஞ்சும் திருமால் முதலமரர்
உள்ளம்; அவனேத் துதித்திறைஞ்சா(து)
எஞ்சும் தவமா முனிவரிலை
எனநான் மறையும் இயம்புமால். (3). (பிரபுலிங்க லீலை 24)

உயிரையும் உயிர்க்கு உயிராயுள்ள பரமனையும் அவனைக் கண்டுகளித்து வருகிற தத்துவஞானிகளையும் உத்தம யோகிகளையும் இவை வித்தக விசித்திரமாய் விளக்கியுள்ளன. பாசுரங்களைப் பலமுறையும் ஓதி யுணர்ந்து உண்மை நிலைகளை நுண்மையாய் ஓர்ந்து தேர்ந்து கொள்ள வேண்டும்.

மெய்யுணர்வு மனிதனிடம் தெளிவாக விளங்கிய பொழுது அவன் தெய்வ ஒளியாய்த் திகழ்கிறான். உய்தி பெற்று உயர்கிறான்.

தன்னை உணர்ந்து தன் உயிர் தான்அறப் பெற்றவன் தனி முதல் தலைவன் ஆகின்றான். ஆகவே மன்னுயிரெல்லாம் அவனை உவந்து தொழுது வருகிறது. உரிய இன்பப் பேறு தெரிய வந்தது.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (4-Dec-18, 8:28 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 57

மேலே