அன்பை மிஞ்சிய கடவுளெங்கே
வெள்ளி விடியும்,
விடிவெள்ளி தலைசாயும்,
சொல்லி மாளாது ஞானிலத்திலே மனிதர்கள் செய்யும் கொடுமைகளை.
சிறு சிறு சேர்த்த பணமும் வட்டியில் கரைய வாங்கிய கடனுக்கு இருப்பை எல்லாம் வழித்தெடுத்து
உடலில் உயிர் மட்டுமே மிச்சமிருக்க கண்டு இரக்கம் கொண்டு அந்தோ பரிதாபம் என்றிடும்.
நேர்மைத் திறத்தில் நெஞ்சம் நிமிர்ந்திருந்தால் எப்படி காலில் விழச்செய்யலாம் என்று யோசிப்பாரே தவிர தன் நெஞ்சம் நிமிர யோசித்து செயல்படுவதில்லை.
மண்வெட்டியின்றி வெட்டியானாய் குழிபறிக்கும் குணங்கள் பெருகிய தன்னில் குறைகள் குறைய ஏதேனும் வாய்ப்புள்ளதோ?
நிறைகளை ஏற்காத நெஞ்சங்களுக்கு புரியவே புரியாது.
அன்பைப் போலொரு கடினமில்லை.
அன்பைப் போலொரு மேன்மையில்லை.
அன்பைப் போலொரு சக்தியில்லை.
அன்பைப் போலொரு புத்தியில்லை.
அன்பை மிஞ்சிய கடவுளில்லை.
காரணம் ஏனென்று கேளாய் நெஞ்சே.
சரணமென்று சரணடைந்தாரன்றி அதிகாரத்தோடே ஆலயம் புகுந்தார் பெருகி சிலைகளும் பெரும் விலைக்குப் போக ஆலயமிருந்த சிலையில் வீற்றிருந்த கடவுளெங்கே?!
விற்கப்பட்டானா?
வாங்கியவன் சிறை வைத்தானா?
அறிவில் உயர்ந்த விஞ்ஞானியே! நீயும் கண்டறிந்து சொல்வாய்!
அன்பை மிஞ்சிய கடவுளெங்கே?