“ தமிழே என் காதலி “
![](https://eluthu.com/images/loading.gif)
திங்களோடு பிறந்தவளோ...! திருமேனி சிலையழகோ...!
செங்கமலம் இதழெனவே செம்மையுற என்னழகோ...!
பொங்கிவரும் கடலினிடை முத்தாகப் பிறந்தவளோ...!
பொதிகைமலைச் சாரலிடை பூவாக மலர்ந்தவளோ...!
சங்கநகை மிடறுடையாள்; சங்கீத மொழியுடையாள்;
பங்கயனின் படைப்பினிலே பாவையிவள் முழுவுருவாள்;
சிந்தும்நகை அத்தனையும் சிந்தையினுள் கவியாகும்
முந்திவரும் மொழியாவும் சந்தமாகி இசையாகும்
அந்திவரும் மேகமென, இவள்குழலும் விளையாடும்
அழகியலின் அத்தனையும் அவளோடு உருவாகும்
சந்திக்கும் நொடியாவும் சஞ்சீவினி மருந்தாகும்
சிந்திக்கும் நாழிகைகள் சிறைசெய்து மறைந்தோடும்
சிமிட்டும்விழிப் பார்வையிலே சிலையாக நமைசெய்வாள்
செவ்விதழின் மோதலிலே தவறாது உயிர்கொய்வாள்
தொடுவிரலால் புதுஉணர்வைத் தூயவளும் தந்திடுவாள்
தொட்டணைக்க வந்தாலோ, நாணத்தினால் சென்றிடுவாள்
மதுமொழியால் எனைவென்ற மங்கையிவள் யாரென்றால்
உலகமொழி அத்தனைக்கும் தலைமகளாம்...! தமிழிவளாம்...!