“ தவம்செய்த பயனாக “

மலர்கூட இதழ்மூடி துயில் கொள்ளும் நேரம் - இனி
பிறைகூட நமக்காகத் தேய்ந்தோடக்கூடும்
விரல்கோர்த்து இரவோடு நாவடத் தோன்றும் - அதில்
விளைகின்ற சுகமேது நீ கூற வேண்டும்

குளிர்காற்று உனைவந்து மெதுவாக மோதும் - அதில்
சிலிர்ப்பொன்று உருவாகி உடல்நடுங்க நேரும்
தளிர்மேனி எனைச்சேர தயக்கங்கள் வாரும் – உனைத்
தழுவாமல் தவிக்கின்ற தருணங்கள் போதும்

துளிர்கின்ற எண்ணங்கள் துவளாது போலும் - இதழ்
அளிக்கின்ற மௌனங்கள் பெரிதாக நீளும்
ஒலிக்கின்ற இடியோசை பெருமழையைத் தாரும் – நீ
ஒளிகின்ற இடமாக என்தேகம் மாறும்

மழைத்துளிகள் தூதாக மார்போடு சேரும் - என்
மனம்கொண்ட அவளோடு கவியஞ்சல் கூறும்
தழைக்கின்ற அன்போடு பிறக்கின்ற யாவும் – நாம்
தவம்செய்த பயனாக எந்நாளும் வேண்டும்

எதைக்கொண்டு அழகென்று உவமைகள் கண்டேன் – செந்தமிழ்
அதைக்கொண்டு கவிபாட வேரென உண்டேன்
கவிதைக்கு கருவாக அவள்வந்த போது – தீந்தமிழ்
எனைதைக்க சிலையாக நானிங்கு நின்றேன்

எழுதியவர் : வேத்தகன் (11-Dec-18, 11:33 am)
சேர்த்தது : வ.கார்த்திக்
பார்வை : 231

மேலே