நீங்கின் சுடுதே நினைவு

உனக்காய் நானும் எனக்காய் நீயும்
இருந்தால் போதும் இதயம் வாழும்
நீயும் சென்றாய் நினைவைச் சுமந்தேன்
நிகழும் தருணம் எனையே மறந்தேன்
எனக்காய்ப் பிறந்தாய் எழிலாய் மலர்ந்தாய்
இருந்தும் ஏனோ பிரிவைக் கொடுத்தாய்

ஆழிப்பேரலை வந்தாலென்ன
அகிலம் தீயில் வெந்தாலென்ன
நாழிகை கடந்து சென்றாலென்ன
நானிலம் என்னைக் கொன்றாலென்ன
ஊனிலும் உயிரிலும் ஒன்றாய்ப்போன
தேனினை மறவேனே; எந்தன்
தேவதை இவள்தானோ

இடைவெளியும் குறையுமென
இவள்விழியும் கரையுமென
எனைத் தேடியே அலையுமென
நிமிடங்களைக் கரைத்தேனே; இவள்
நினைவுகளால் தவித்தேனே

பகல் முழுதும் தனியாக
இவள் நினைவும் துணையாக
துகள் துகளாய் உடைந்தேனே
மன துயரங்களால் தொலைந்தேனே

இரவுகளும் சுமையாக
இரு விழியும் நதியாக
கனவுகளைச் சுமந்தேனே
அவள்வதனம் நினைந்தேனே

என்னில் தொலைந்த உன்னையும்
உன்னில் தொலைந்த என்னையும்
மீட்கும் நிலைதான் இனிவருமோ
மீண்டும் தொலைக்கத் துணிந்திடுமோ

நிழலாய்த் தொடர வரம் தந்தால்
நினைவைச் சுமக்க மனம் வந்தால்
அழகாய் வாழ்வைக் கடப்பேனே இல்லை
ஆயுள் முழுதும் தவிப்பேனே

எழுதியவர் : வேத்தகன் (11-Dec-18, 10:37 pm)
சேர்த்தது : வ.கார்த்திக்
பார்வை : 104

மேலே