புனித தீயாடல்

அமைதியான பனி மலையல்ல,
எப்போதும் கொந்தளிக்கும் எரிமலை.
நீரோடையில் நீர் தேங்கி ஓடுவதைப் போல தீக்குழம்பு தகிதிமிடதாவென்று ஓட சங்கீதம் உணர்கிறேன் மௌனமாக.

கங்கை நதி புனிதமோ இல்லையோ தெரியாது,
இந்த தீக்குழம்பு பரவி பாய்ந்தோடும் நதி நிச்சயம் புனிதமானது தான்.
தன்னில் அகப்பட்ட அனைத்தையும் தானாகவே மாற்றவல்லது இந்தத் தீக்குழம்பு.

விறகுகளைப் பொறுக்கி அடுக்கி, தீயிட்டுக் கொளுத்தி தகனம் செய்து படுக்கை விரிப்பாய் விரித்து சாம்பல் படர அதன்மேலே நாமும் நடக்கலாம்,
ஓம் சக்தி அம்மா தாயே மாரியம்மாவென்று தீ மிதிக்கலாம் பூப் போல.
திரண்டு வரும் தீக்குழம்பில் குதித்து நீந்திக் கடக்க முடியுமா?

பக்திப் பரவசநிலையில் ஆடிப்பாடும் பக்தர்களின் புவியை விட தகிதகிக்கும் நெருப்பு பிழம்புலகில் புகுந்தே வாழலாம்.
நெருப்பின் குணம் சுட்டெரித்து சாம்பலாக்குவதொன்று தான்.
இந்த மனிதர்களின் குணங்களைப் பார்.
எது உண்மையென்று அறிவது கடினம்!
அனைவருமே நடிகர் திலகம்!
என்று சுட்டினால் நம்மை நோக்கியே கூர் அம்புகளாய் வார்த்தைகளைப் பிரயோகிக்கும்.
ஆக திருந்த வேண்டியது நாம் தான்.

தீக்குழம்பில் குளித்து சாப விமோசனம் பெற்ற ஆன்மாவாய் நம் மனதை நாமே சுத்தம் செய்து அங்கு சுற்றம் விதைக்கும் கோபம், பொறாமை, ஆசையை தீயிலிட்டு கொளுத்தி
சம்பலாக்கி அந்த சாம்பல் கூட நம் மனதில் தங்காதவாறு விழிப்புநிலை பெறுதல் வேண்டும் நெருப்புப் பந்தாய்.

நெருப்பை உமிழும் சூரியனின் அன்பையும்,
தன் ஆதங்கத்தை அடைகாக்கும் எரிமலையின் பொறுமையும் நிச்சயமாக போற்றப்பட வேண்டிய நிலையில்,
கருகிய பூக்களெல்லாம் உயிர்த்தெழும் என்பது போல் தீக்குழம்பில் மூழ்கிய ஆன்மாவும் தன் நிலை நோக்கிப் பாயும்.

பாயும் ஆன்மாவைக் கட்டி வைக்க நெருப்பில் எரியாத, கருகாத, உருக்குலையாத உடலிருந்தால் கொண்டு வாருங்கள்,
கட்டி வைக்கத் தீயில் எரியாத பிணைக்கயிறோடு.

மாடுகளை கட்டி வைத்து கன்றுகளை பிரித்து வைத்து அனைத்துப் பாலையும் தனக்கென்றுக் களவாடும் மனிதர்களிடம் கருணை உண்டென்று விளம்பரம் செய்தல், உணவில் இடவேண்டிய உப்பிற்குப் பதில் வைரங்களை பொடியாக்கித் தூவி விட்டு உண்ணச் செய்தல் போல மிகவும் கொடூரமானது.

சார்ந்து வாழும் சமுதாயம் என்று கூட்டம் கூட்டி தலைவனென்று பலரை தேர்ந்தெடுத்து,
உங்களுக்காகப் பாடுபடுவேன் என்றிடும் போலி முழக்கங்கள் செய்திடும் அரசியல் நுழையாத அந்த காலமே வசந்த காலம்.

தலைவனென்றும் தானே பெரியவனென்றும் பலரை அடக்கியாள சிலர் துடிக்கும் ஆணவம் என்னும் குணத்தின் வாசமே அறியாத அந்த காலமே அருள் நிறைந்த காலம்.

வாழும் வழியை அடைத்துவிட்டு, பலர் வாழ வழியின்றி இறக்கிறார்கள், சாகிறார்கள் என்று அரசியல் பேசிடும் பாசிச, நாசிச கூடாரங்கள் இல்லாத அந்த காலமே இனிமையான காலம்.

அறிந்து செய்கிறீர்களா?
அறியாது செய்கிறீர்களா?
நீங்கள் இன்னும் அறியவில்லை என்றால் அறிந்து கொள்ளுங்கள்.
அறிந்து விட்டீர்கள் என்றால் உங்களுக்கான நற்குணத்தோடு வாழத் தொடங்குங்கள் அத்தீக்குழம்பைப் போல.

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (18-Dec-18, 10:05 pm)
பார்வை : 678

மேலே