~கணவனின் மனைவி~

அன்று அவளுக்கு...
விழிப்பு வர காலதாமாகிவிட்டது
அரக்க பரக்க எழுந்து
குளியல் முடித்து
பருத்தி புடவை உடுத்தி
கூந்தலை அள்ளி முடித்து
சமைக்க நேரமில்லாமல்
நொருக்குத் தீனி கொரித்து
இலக்கு நோக்கி புறப்பட்டாள்
பள்ளி நுழைந்து
பதிவேட்டில் கையொப்பம் இட்டு
ஆறாம் வகுப்பு சென்று
அறிவியல் பாடம் நடத்தினாள்
சிறிது நேரத்திற்கு பின்
வகுப்பு மணி ஒலித்தது
கூடவே
எழுப்பு மணி ஓசையும்..

கனவிலிருந்து விழித்தாள்
அமைதியாக எழுந்து
அடுக்களை புகுந்து
திட்டமிட்ட சமையல் முடித்து
குடும்பத்தினரை எழுப்பி
குழந்தைக்கு குளியல் கொடுத்து
ஆடை அணிவித்து
உணவு புகட்டி - அவரவர்
இலக்கு நோக்கி அனுப்பினாள்

பின்
தன் நினைவு கொண்டாள்
இங்கு இவள் கனவு
மறுக்கப்பட்டதா? அல்லது
மறக்கடிக்கப்பட்டதா?
இரண்டும் இல்லை

தன் கனவை சுமந்து
செல்பவர்களை விட - தனக்கானவர்களின் கனவை
சுமக்க ஓர்
மனோதிடம் வேண்டும்
புத்தி தெளிவு வேண்டும்
உடல் வலு வேண்டும்
இவை யாவுமாகி நிற்பவள்...

இது இவளின்
இயலாமை அல்ல - இவளது
மற்றொரு பக்கத்தின்
இன்றியமையாமை...

இவள்
கணவனின் மனைவி மட்டுமல்ல
ஓர் இல்லத்தின் அரசி
ஆம்... இவளே
இல்லத்தரசி!!

எழுதியவர் : காதம்பரி (19-Dec-18, 12:48 pm)
சேர்த்தது : காதம்பரி
பார்வை : 189

மேலே