காதலை மறந்தாய்

காதலை மறந்தாய் :

இதயம் எடுத்தாய்
உன்னுள் புதைத்தாய்
விழிகளின் வழியே
என்னுள் நுழைந்தாய்

கனவுகள் தந்தாய்
நினைவுகள் தந்தாய்
விலகிடு என்றாய்
உயிருடன் கொன்றாய்

பூத்திட வைத்தாய்
வாசனை தந்தாய்
சுவாசிக்கும் முன்னே
வேருடன் அறுத்தாய்

உடனிரு என்பாய்
மறுநொடி கொள்வாய்
நிதமும் நினைவாய்
மறவேன் என்பாய்

உயிராய் உணர்வாய்
எல்லாம் உனதாய்
உறவாய் நிறைவாய்
என்றே மொழிந்தாய்

சிறகாய் விரிந்தாய்
வானம் அளந்தாய்
எனையும் மறந்தே
தூரம் பறந்தாய்

கண்ணீர் தந்தாய்
காயமும் தந்தாய்
ஆருயிர் நீயும்
காதலை மறந்தாய்

மாறனே என்னை
மறந்திடேன் என்றாய்
மறவாது இருந்தேன்
மறந்திடு என்றாய்

காலமும் போனது
காவியம் ஆனது
காதலைத் தேடி
கால்கள் தேய்ந்தது

ஓய்ந்தது அலைகள்
சாய்ந்தது நிழல்கள்
பாய்ந்தது அருவி
தோய்ந்தது விழிகள்

வார்த்தைகள் மறந்தாய்
வாக்கினை மறந்தாய்
பார்வைகள் மறந்தாய்
பாதைகள் மறந்தாய்
ஆருயிர் நீயும் காதலை மறந்தாய்
நம் காதலை மறந்தாய்...

எழுதியவர் : தமிழ் ப்ரியா (28-Dec-18, 4:59 pm)
சேர்த்தது : தமிழ் ப்ரியா
பார்வை : 126

மேலே