பணிப்பெண்கள் உடைமாற்றும் அறையில் ரகசிய கேமரா வீடியோ எடுத்து மிரட்டியதாக தனியார் மருத்துவமனை ஊழியர் கைது
சென்னை சைதாப்பேட்டையில் சிறுநீரக கல் அகற்றும் தனியார் மருத்துவமனையில் பெண் ஊழியர்கள் உடைமாற்றும் அறையில் ரகசிய கேமராவை பொருத்தி வீடியோ எடுத்து மிரட்டிய ஊழியர் கைது செய்யப்பட்டார்.
`சென்னை சைதாப்பேட்டையில் சிறுநீரக கல்லை நீக்கும் தனியார் மருத்துவமனை iங்கு பணியாற்றும் பெண்கள் உடைமாற்றும் தனி அறை உள்ளது. இந்த மருத்துவமனையில் துப்புரவு பராமரிப்பு ஊழியராக எர்ணாவூர் சுனாமி குடியிருப்பை சேர்ந்த பிரகாஷ் (23) என்கிற இளைஞர் வேலை செய்கிறார்.
இவர் அங்குள்ள அறையில் ரகசிய கேமராவைப்பொருத்தியுள்ளார். இதில் எடுக்கப்பட்ட வீடியோக்களை தன்னுடன் பணியாற்றும் சக ஊழியரிடம் பகிர்ந்துள்ளார். இதை அறிந்த அங்குள்ள பெண் மேலாளர் இதுகுறித்து அழைத்து விசாரணை நடத்தியுள்ளார்.
விசாரணையில் ஊழியர் பிரகாஷ் பெண்கள் உடைமாற்றுவதை வீடியோவாக எடுத்து அதைக்காட்டி மிரட்டி வந்துள்ளதாக மற்ற பெண்கள் புகார் அளித்துள்ளனர். இதையடுத்து சைதாப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
புகாரின் பேரில் சம்பந்தப்பட்ட மருத்துவமனைக்கு போலீஸார் சென்றனர். விசாரணை நடத்தி அங்கிருந்த ரகசிய கேமராவை கைப்பற்றினர். விசாரணையில் கேமராவை ரகசியமாக பொருத்திய மருத்துவமனை ஊழியர் பிரகாஷ் கைது செய்யப்பட்டார்.
ஏற்கெனவே ஆதம்பாக்கத்தில் உள்ள பெண்கள் தங்கும் விடுதியில் ரகசிய கேமரா வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் ஒரு மருத்துவமனையில் பெண்கள் உடைமாற்றும் அறையிலும் ஊழியரால் ரகசிய கேமரா வைக்கப்பட்டது பெண்களின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கி உள்ளது.