ஆய்ந்தமைந்த கேள்வி அறிவுடையார் காய்ந்தமைந்த சொல்லார் கறுத்து - நாலடியார் 63

நேரிசை வெண்பா

காவா தொருவன்தன் வாய்திறந்து சொல்லுஞ்சொல்
ஓவாது தன்னைச் சுடுதலால் - ஓவாதே
ஆய்ந்தமைந்த கேள்வி அறிவுடையார் எஞ்ஞான்றும்
காய்ந்தமைந்த சொல்லார் கறுத்து. 63

- சினமின்மை, நாலடியார்

பொருளுரை:

நாவை அடக்காமல் சினத்தினால் ஒருவன் தன் வாய்விட்டுச் சொல்லிய சினச்சொல் இடைவிடாமல் தன்னை வருத்துதலால், ஆராய்ந்து பண்பட்ட கேள்வி ஞானத்தை உடையவர்கள் எண்ணிப் பாராமல் மனம் வெதும்புதலால் அமைந்த சுடுமொழிகளை வெறுப்புடன் எப்பொழுதும் சினந்து சொல்லமாட்டார்கள்.

கருத்து:

சினப்பது தன்னையே சுடுமாதலால், பண்பட்ட உள்ளமுடையோர் சினங்கொள்ளார்.

விளக்கம்:

உள்ளடங்காது வெளிவருதல் தோன்ற ‘வாய் திறந்து ' எனப்பட்டது. வருத்துதலின் மிகுதி தோன்றச் ‘சுடும்' என்றார். ‘ஆய்ந்தமைந்த' என்பது கேள்விக்கு அடைமொழி.

ஆய்தல் - நூலான் வந்த அறிவைத் தம் பழக்கத்தால் உணர்ந்து முடிவு செய்தல்.

அமைதல் - அம் முடிவின் வழிப் பண்படுதல்.

‘காய்ந்தமைந்த' என்னுமிடத்துக் ‘காய்ந்து' காரணப்பொருட்டும், ‘அமைந்த' அமைந்த சொற்கள் என்னும் பொருட்டு.

‘கறுத்தல்': உரிச் சொல் அடியாகப் பிறந்த சொல்.1 சினமில்லாமல் இருத்ததற்குப் பண்பட்ட கேள்வி ஞானம் இன்றியமையாததென்னும் உண்மையும் இச்செய்யுட்கண் அறிவுறுத்தப்பட்டமை கண்டு கொள்க.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (3-Jan-19, 5:15 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 72

சிறந்த கட்டுரைகள்

மேலே