வேர்த்து வெகுளார் விழுமியோர் – நாலடியார் 64

நேரிசை வெண்பா

நேர்த்து நிகரல்லார் நீரல்ல சொல்லியக்கால்
வேர்த்து வெகுளார் விழுமியோர் - ஓர்த்ததனை
உள்ளத்தான் உள்ளி உரைத்துராய் ஊர்கேட்பத்
துள்ளித்தூண் முட்டுமாம் கீழ். 64

- சினமின்மை, நாலடியார்

பொருளுரை:

சமானமில்லாதவர்கள் தம்மைச் சமானமாகக் கருதிக்கொண்டு தகைமையல்லாத சொற்களைச் சொன்னால் சிறந்தவர்கள் மனம் புழுங்கிச் சினந்து கொள்ளமாட்டார்கள்;

ஆனால், கீழ்மக்கள் ஆராய்ந்து அத் தகைமையற்ற சொல்லை மனத்தாற் பலகாலும் நினைத்து ஊரிலுள்ளவர்கள் கேட்கும்படி அங்கங்கும் சொல்லித் திரிந்து அதனால் மேன்மேலும் பெருகுங் கோபத்தினால் உடம்பு துடித்து அருகிலிருக்குந் தூணில் மோதிக் கொள்வார்கள்.

கருத்து:

தகுதியல்லாதவர்கள் சொல்லும் சொற்களுக்குச் சான்றோர் சினந்து கொள்ளமாட்டார்கள்.

விளக்கம்:

‘நிகரல்லார் சொல்லியக்கால் வெகுளாரெனவே, நிகருள்ளோரும் மிக்கோரும் தக்கவை சொல்லின் அவற்றின் வழி விரும்பித் திருந்துவர் என்பது அருத்தாபத்தியாற் பெறப்படும்.

வேர்த்து வெகுளார் என்றதனோடு அச்சொல்லை அறிவான் ஓரார்; உள்ளத்தான் உள்ளார்; பிறர்பாற் சென்று கூறார்; இழிதகைமையாகத் துள்ளி முட்டிக் கொள்ளார் என்பனவும் ஏனையோர் செயலாகக் கூறியவற்றினின்று எதிர்முகமாகக் கூட்டிக்கொள்க.

ஓர்த்தல் - அறிவினால் அதன் தகைமையின்மையை ஆராய்ந்து பகைமை கொள்ளுதல்;

பின்பு உள்ளல் என்றது, அப்பகைமையை மேலுமேலும், நினைந்து நெடுங்காலம் உள்ளத்து நிகழச் செய்தல்.

"இகலொடு செற்றம்"1 என்பதன் உரை இங்கு நினைவுகூரற்பாலது. உராய் - உலாவி, திரிந்தென்னும் பொருட்டு.

சினத்தை அடக்கமாட்டாத எளிமை மிகவுந் தோன்றத் ‘துள்ளித் தூண் முட்டுமாங் கீழ்,' என்றார்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (3-Jan-19, 7:26 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 47

மேலே