ஆவிக்கு இனிய ஆலயமாய் மேவியிருக்குமிம் மெய்ந்நிலை - உடல் நிலை, தருமதீபிகை 11
நேரிசை வெண்பா
ஆவிக்(கு) இனிய அழகிய ஆலயமாய்
மேவி யிருக்குமிம் மெய்ந்நிலையில் - நாவினால்
சொல்லற்(கு) அரிய தொழிலுயர் நுட்பங்கள்
எல்லை யிலகாண் இசைந்து. 11
- உடல் நிலை, தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்
பொருளுரை:
உயிர்க்கு அழகிய இனிய கோயிலாய் அமைந்திருக்கின்ற இந்த விழுமிய உடலில் அளவிடலரிய அற்புத நிலைகள் அடங்கியுள்ளன; உண்மையை உணர்ந்து உரிய பயன் பெறுக என்கிறார் கவிராஜ பண்டிதர்.
கடவுட் கூறாகிய ஆன்மாவுக்கு நிலையமாய் நிற்றலின் உடல் ஆலயம் என வந்தது. அரிதாக அமைந்துள்ள இதன் அருமை தெரிய மேவி இருக்கும் என்றது. மெய்யான உயிர்க்கு மெய்யாயிருத்தலின் தேகம் மெய் என நின்றது. மெய் - உடல், உண்மை.
நாவில் நீர் ஊறல், உதிரம் உலாவல், நாடி துடித்தல் முதலிய வினை நலங்களைத் தொழில் நுட்பங்கள் என்றது. உணவையும், நீரையும் உள்ளே கொண்டு போய்த் தக்க இடங்களில் பிரித்துச் சேர்த்துப் பக்குவப் படுத்திப் பதனுறுத்துந் திறன் அதிசய எந்திரங்கள் எதனிலும் மிஞ்சி விதி நியமங்களாய் உள்ளது.
கண்ணுள் மிளிரும் சிறிய கருவிழியின் ஒளி எண்ணரிய தொலைவிலுள்ள பெரிய விண்ணொளியையும் கவர்ந்து வெளி செய்து விளங்கும் வித்தக நிலை எத்துணை வியப்புடையது? எவ்வளவு அதிசயங்கள்! உய்த்துணர வேண்டும்.
உயிர் நிலையமான இந்த உடலில் அமைந்துள்ள கருவித்திரள்களின் அருமைப்பாடுகளை உரைகளால் உரைக்க இயலா; தெய்வ சிருட்டியின் அற்புத நிலையில் இது தலை சிறந்துள்ளது.
அண்ட நிலையை அறிந்தள விடினும்
பிண்டநிலை யறிதல் பெரிதும் அரிதாம்.”
என்றதனால் இவ்வுடம்பின் அமைதியும் அருமையும் உணரலாகும். உயிரின் நிலையமாய் உடல் ஒளி புரிந்துள்ளது.
இத்தகைய அற்புத உருவைப் பொற்புடன் போற்றி இதன் பயனை விரைந்து பெற வேண்டும் என்கிறார் கவிராஜ பண்டிதர்.