நெகிழிப் பூக்கள்
அன்று ...
சாலையோரம்
மரங்களை நட்டோம் ;
செடிகளை வளர்த்தோம் ;
இயற்கை அன்னையின் மடியில்
இயற்கையாய் மலர்ந்தன மலர்கள் !
மலர்களைக் கண்டே
மனங்கள் மகிழ்ந்தன !
முகங்களும் மலர்ந்தன !
இன்று ...
அகிலம் முழுதும்
அழகுச் செடிகளில்
நெகிழிப் பூக்கள் !
பளபளவென்று
கண்ணைப் பறிக்கும் !
பக்கம் சென்றால்
மண்ணில் புதைக்கும் !
எடையில்லா நெகிழி
என்பையும் நெகிழ்க்கும்!
நம்மை உயிர்ப்பித்த
இயற்கைத் தாயின்
உயிர்ப்பில்
நச்சுக் கண்ணீர் !
அனலில் வாட்டிய நெகிழியாய்
மனிதர்கள் !
ஆம்.
மக்காத நெகிழி
மக்களை நெகிழ்த்தியதால்
பொன் விளையும் பூமி
இன்று
வறுமைக்கோட்டின் கீழ் !!!