மலரட்டும் மனிதநேயம்
எங்கோ ஒரு தேசத்தில்
மனிதனே மனிதனை
மாண்பிழந்து வதை செய்ய.
இங்கே மனமுருகி வேண்டிடும் நேசம் !
ஏதோ ஒரு வெள்ளத்தில்
உடையிழந்து உறைவிடமிழந்து
உறவும் இழந்து உண்ணத்தவிக்கும் உயிர்களுக்கு
இதோ என்றளித்து உருகிப்பெருகும் பாசம் !
எப்படியோ ஒரு சாலையில்
படைத்த வாகனமே நொறுக்கி
படுக்கையாக்கி குற்றுயிராக்கி செல்கையில்
அப்படியே அணைத்துதவும் ஈரம் !
இவ்வாறெல்லாம்
இன்னும் எத்தனையோ தருணங்களில்
நெஞ்சத்தில் பிறப்பெடுக்கும்
அன்பின் மாற்றுருக்கள்
மலரட்டும் மனிதநேயமாய்
மனிதனுக்குள் ஆயிரமாயிரமாய் ...