புத்தகக் கண்காட்சி-----------------------புத்தகக் கண்காட்சிப் பரிந்துரை
ஜெ,
வணக்கம், இந்த ஆண்டு புத்தக காட்சியில் கண்டிப்பாக வாசிக்க வேண்டிய புத்தகங்கள் மற்றும் இந்த ஆண்டு வெளிவந்த முக்கியமான புத்தகங்களை பரிந்துரைத்தால் மிக உதவிகரமாக இருக்கும். தொடர்ந்து தமிழ் இலக்கியத்தில் தீவிர வாசகராக, விமர்சகராக, எழுத்தாளராக இயங்கிவரும் தங்களின் பரிந்துரை மிக முக்கியமானதாகப்படுகிறது.
இந்த ஆண்டு வெளிவந்த புத்தகங்களில் கவனம் பெற்றவை, வாசகன் கண்டிப்பாக வாசிக்க வேண்டிய புத்தகங்கள் எவை என தாங்கள் தெரியப்படுத்த வேண்டும். தொடர்ந்து எனக்கு வரலாறு, பண்பாடு, தத்துவம் மற்றும் கட்டிடக்கலையில் ஈடுபாடு உள்ளது. இது சார்ந்து கண்டிப்பாக வாசிக்க வேண்டிய நூல் பட்டியலை தெரியப்படுத்தினால் மிகவும் உதவிகரமாக இருக்கும்.
ரா.பாலசுந்தர்
----------------
அன்புள்ள பாலசுந்தர்
நான் புத்தகக் கண்காட்சிப் பரிந்துரைகளைப் பொதுவாகச் செய்வதில்லை. ஏனென்றால் என்னென்ன நூல்கள் வெளிவந்துள்ளன என ஒட்டுமொத்தமாக எனக்குத்தெரியாது. எல்லாவற்றையும் நான் கருத்தில்கொண்டு கருத்துசொல்லவும் இயலாது
ஆண்டு முழுக்க என் கவனத்திற்கு வந்த நல்ல நூல்களையும் ஆசிரியர்களையும் அறிமுகம் செய்துகொண்டேதான் இருக்கிறேன். அவற்றையே என் பரிந்துரைகளாகக் கருதலாம்
நினைவில் இல்லை என்பவர்கள், தேடமுடியாது என்பவர்கள் வாசிக்கவும் போவதில்லை
ஜெ
-----------------------------------------------------------------
கடந்த வாரம் ஒரு நண்பர், இலக்கிய ஆர்வம் கொண்டவர், பதினோராம் வகுப்பில் இருக்கும் அவரது மகன் [அவருக்கும் வாசிப்பில் விருப்பம் உண்டு] வாசிப்புக்குள் நுழையும் வகையில் சில நூல்களை பரிந்துரை செய்ய சொன்னார்.
இந்த நூல்களை பரிந்துரைத்தேன் அதற்கான காரணங்களையும் சொன்னேன்.
முதலில் பள்ளி கல்வி ஒரு மாணவனுக்கு அளிப்பது, இங்கே பிழைத்து இருக்க என்ன தேவையோ அதை. பள்ளி கல்விக்கு வெளியே உள்ள நூல்கள் வழங்குவது ஒரு நிறைவை. என்றும் துணை நிற்கும் ஒரு விவேக ஞானத்தை. ஒரு தந்தையின் வழிகாட்டல் மகனுக்கு எவ்வளவு ஊக்கமோ, அதற்கு பலமடங்கு கூடுதல் பள்ளிக்கு வெளியே கிடைக்கும் கல்வி. இங்கே நூறு நூறு அறிவார்ந்த ஆசிரியர்கள், ஒரு போதும் கைவிடாத ஆயிரமாயிரம் தந்தையர்கள் அளிக்கும் செல்வம் இருக்கிறது.
தமிழில் வெளியே எங்கே எதை வாசிக்கத் துவங்குவது என்பது சரியான கேள்வி. பிழையான தொடக்கம், இந்த பயணத்தை துவங்கும் முன்பே நிறுத்தி விட வாய்ப்புகள் அதிகம்.
இந்த பரிந்துரை ஒரு அறிமுக வாசகனின், அவன் செல்ல தேர்ந்தெடுக்கும் திசை வழிகளின் மீது காத்திரமான முதல் அடியை அவன் எடுத்து வைக்க சரியான நூல்களை உள்ளடக்கியது.
வரலாறு, பயணம், சூழலியல், மூளை நரம்பியல், தொன்மம், இலக்கியம், தத்துவம் என ஒரு இளம் மனம் செல்ல விரும்பும் திசைகளின் சரியான வழிகாட்டி இந்த நூல்கள்.
மேலை தத்துவத்தின் ஒரு சுருக்கமான செறிவான வரலாற்றினை, சோபியின் உலகம் நாவலில் வரும் தத்துவ பாட பகுதிகள் வழியே அறியலாம்.
அதை தொடர்ந்து இந்து ஞான மரபில் ஆறு தரிசனங்கள் வழியே இந்து ஞான மரபின் தத்துவ தேட்டத்தை அறியலாம்
அரவிந்தன் நீலகண்டன் வழியே, இந்திய தத்துவங்களும், அறிதல் முறைகளும், ”இன்று ”என்னவாக உலக சிந்தனை மரபு, மற்றும் அறிவியல் புலத்துடன் தொடர்பில் உள்ளது என்பதை அறியலாம்.
எனது இந்தியா நூல்கள் வழியே, இந்த இந்திய நிலத்தின் படப்பகுதிக்கு வெளியில் அமையும் வரலாற்றை அறியலாம்.
அதை தொடர்ந்து குகாவின் இந்தியா காந்திக்குப் பிறகு நூல் வழியே இன்று நாம் நிற்கும் இந்தியா குறித்த சித்திரத்தை அறியலாம்.
சூழலியலையும், மூளை நரம்பியல் சார்ந்தும் அறிந்துகொள்ள தியோடர் பாஸ்கரன், ராமச்சந்திரன் இருவருமே இணையற்ற ஆசிரியர்கள்.
நவீன தமிழ் இலக்கிய அறிமுகம் வழியே, இலக்கியம் எனும் கலையின் அனைத்து அலகுகளையும் ஒரே நூல் வழி அணுகி அறிந்து கொள்ள இயலும்.
பாடதிட்டத்தில் எதை செத்து நான்கு நாள் ஆன பிணமாக மாணவனுக்கு கிடைக்கிறதோ, அது எத்தனை உயிரோட்டம் கொண்ட மலராக இலக்கிய வாசகனுக்கு கிடைக்கிறது என்பதை அறிவதன் வழியே, ஒருவர் இலக்கிய உலகுக்குள் அடி எடுத்து வைப்பதை காட்டிலும் சிறந்த பாதை வேறில்லை.
அதிலிருந்து நிலம் பூத்து மலர்ந்த நாள் அளிப்பது வேறு ஒரு கனவு உலகை. நமது இலக்கிய வளர்ச்சி நமது வேர்களில் இருந்து துவங்கி நின்று வளர சரியான துவக்க நூல்.
வனவாசி நாவல் அதற்கு அடுத்த நிலையில் நின்று, ஒரு கனவு போல, ஒரு சூழல் பின்வாங்கும் சித்திரத்தை அளிக்கிறது.
கி ராஜநாராயணின் நாவல் ஒரு வாழ்வை தொகுத்துக்காட்டி அதனூடே ஒரு முழுமை நோக்கை தரிசனத்தை முன்வைக்கும் இலக்கியத்தின் அடிப்படை நோக்கை ஒரு இளம் வாசகன் அணுகி, உணர சரியான துவக்கமாக அமையும்.
சோபியின் உலகம் ஒரு புனைவாக இன்று உலக அளவில் நாவல் கலை, அதன் வடிவம், உள்ளடக்கம், கூறு முறை, என அவை சென்று தொட்ட தூரத்தை ஒரு வீச்சில் காட்டக்கூடிய நாவல்.
இந்த நூல்கள், ஒரு அறிமுக வாசகரை நோக்கி இறங்கி வருவன அல்ல, உங்களை அதை நோக்கி உயர்ந்து வர வேண்டும் எனும் சவாலை முன்வைப்பன.
அதே சமயம் சுவாரஸ்யமான [இந்த எல்லா நூலுமே] கூறு முறையில் தன்னை முன்வைப்பன.
அந்த இயலும், அந்த இயல் சார்ந்த வல்லுனரால், அவரது நூலைக் கொண்டு அறிமுகம் நிகழ்கிறது.
உரைநடை, தத்துவம், புனைவு, சங்கக் கவிதைகள். அனுபவத் தொகை. பயண நில விவரணை மொழிபெயர்ப்பு, என மொழி செயல்படும் அனைத்து பாதைகளும், சுவாரஸ்யம் குன்றாத சரியான நூல்கள் வழியே அறிமுகம் ஆகின்றன.
இங்கே துவங்கி, ஒரு இளம் வாசகர், அவரது வாசிப்பின் வழி தனது செல்திசையை தீர்மானிக்கலாம். தனது வாசிப்பில் குறுக்கே வரும் பிழையான நூல்களை, இங்கு பரிந்துரைத்த நூல்களை, மீண்டும் வாசித்து துய்ப்பதன் வழியே, தன்னுள் சீர் தூக்கி உரையாடி, மதிப்பிட்டு விலக்கலாம்.
அனைத்துக்கும் மேல் ஒரு வாசகன், தன்னைத்தானே கொண்டாடிக்கொள்ளும் ”ஞானச் செருக்கு ” அதை நல்க வல்ல பரிந்துரை இவை.
Books
வரலாறு.
விகடன் வெளியீடான, எஸ் ராமகிருஷ்ணன் எழுதிய எனது இந்தியா இரண்டு பாகங்கள்.
கிழக்கு பதிப்பகம் வெளியீடான, ராமச்சந்திர குகா எழுதிய இந்திய வரலாறு காந்திக்குப் பிறகு இரண்டு பாகங்கள்.
பயணம்.
கிழக்கு பதிப்பகம் வெளியிட்ட, ஜெயமோகன் எழுதிய இந்தியப் பயணம், அருகர்களின் பாதை, உள்ளிட்ட பிற பயண நூல்கள்.
சூரியன் பதிப்பகம் வெளியீடான, ஜெயமோகன் எழுதிய முகங்களின் தேசம்.
மூளை நரம்பியல்.
பாரதி புத்தகாலயம் வெளியீடான, விளையனூர் ராமச்சந்திரன் எழுதிய உருவாகிவரும் உள்ளம்.
சூழலியல்.
உயிர்மை வெளியீடான, தியோடர் பாஸ்கரன் எழுதிய சூழலியல் கட்டுரைகளின் முழு தொகுப்பு.
தொன்மம்.
நியு செஞ்சுரி புக் ஹவ்ஸ் வெளியீடான, செந்தீ நடராஜன் எழுதிய சிற்பமும் தொன்மமும்.
இலக்கியம்.
கிழக்கு பதிப்பகம் வெளியீடான, ஜெயமோகன் எழுதிய நவீன தமிழ் இலக்கிய அறிமுகம்.
நற்றிணை பதிப்பகம் வெளியீடான, ஜெயமோகன் எழுதிய சங்க சித்திரங்கள்.
பிறமொழி இலக்கியம்.
வம்சி பதிப்பகம் வெளியீடான, மனோஜ் கரூர் எழுதிய மலையாள நாவல் நிலம் பூத்து மலர்ந்த நாள்.
விடியல் பதிப்பகம் வெளியீடான, விபூதி பூஷன் பந்தோபாத்யாய் எழுதிய வங்க நாவலான வனவாசி.
தமிழ் இலக்கியம்.
அன்னம் பதிப்பகம் வெளியீடான, கி ராஜநாராயணன் எழுதிய, கோபல்ல கிராமம், துவங்கி அந்தமான் நாயக்கர், வரையிலான மூன்று நாவல் தொகுதி.
உலக இலக்கியம்.
காலச்சுவடு வெளியீடான, யோஸ்டைன் கார்டர் எழுதிய, சோபியின் உலகம்.
தத்துவம்.
கிழக்கு பதிப்பகம் வெளியீடான, ஜெயமோகன் எழுதிய இந்து ஞான மரபின் ஆறு தரிசனங்கள்.
கிழக்கு பதிப்பகம் வெளியீடான, அரவிந்தன் நீலகண்டன் எழுதிய இந்திய அறிதல் முறைகள்.
கடலூர் சீனு
----------------------------------------
புத்தக பரிந்துரை
கடந்த நான்கு நாட்களாக புத்தக கண்காட்சிக்கு சென்று வருகிறேன். புத்தகம் வாங்குவதில் இளைஞர்கள் காட்டும் ஆர்வம் மிக சந்தோஷமாக இருக்கிறது. வலைபக்கங்களில் எழுதும் நண்பர்கள் பலரையும் சந்தித்தது கூடுதல் மகிழ்ச்சி தருவதாக இருந்தது
என் பார்வையில் பட்ட சில மொழிபெயர்ப்பு புத்தகங்களை உங்களுக்கு சிபாரிசு செய்கிறேன். இவை முதன்முறையாக தமிழில் வெளியாகி உள்ளன. இலக்கியம் சார்ந்த அக்கறை கொண்ட ஒவ்வொருவரும் இந்த நூல்களை வாங்க வேண்டும் என்பதே எனது விருப்பம்
எண்ணும் மனிதன் – மல்பா தஹான் -அகல் வெளியீடு. விலை. ரூ.120.
போர்த்துகீசிய மொழியில் வெளியான இந்நூல் கணித புதிர்கள் வழியாக ஒரு கதையை விவரிக்கிறது. ஆயிரத்தோறு அற்புத இரவுகளின் கதை சொல்லல் போன்றது. இதனை தமிழாக்கம் செய்திருப்பவர் கயல்விழி.
என் பெயர் சிவப்பு -ஒரான் பாமுக் -நோபல் பரிசு பெற்ற எழுத்தாளரின் நாவல். காலச்சுவடு பதிப்பகம். விலை. ரூ.350.
கடந்த பத்தாண்டுகளில் வெளியான உலக நாவல்களில் மிக முக்கியமானது. நோபல் பரிசு மற்றும் டப்ளின் விருது பெற்றது. சிறப்பாக இதை தமிழாக்கம் செய்திருப்பவர் ஜி. குப்புசாமி.
இறுதி சுவாசம். சுயசரிதை – லூயி புனுவல் - வம்சி வெளியீடு.
உலகப்புகழ்பெற்ற திரைப்பட இயக்குனரான லூயி புனுவலின் வாழ்க்கை மற்றும் திரைப்பட அனுபவங்கள் பற்றியது. தமிழாக்கம் செய்திருப்பவர் சா.தேவதாஸ்
மனநல மருத்துவர். மச்சடோ டி ஆசீஸ். வெளியீடு. -சந்தியா பதிப்பகம். விலை.ரூ.70
பிரேசிலின் முக்கிய படைப்பாளி மச்சடோ டி ஆசீஸ். அவரது குறுநாவல் இது. தமிழாக்கம் செய்திருப்பவர் ராஜகோபால்.
சூன்ய புள்ளியில் பெண் – நவ்வல் எல் ஸதவி. எகிப்திய நூல். தமிழாக்கம் - லதா ராமகிருஷ்ணன். உன்னதம் வெளியீடு. விலை. ரூ.90.
சிறையில் அடைக்கப்பட்ட பெண்ணின் நெருக்கடிகளை விவரிக்கும் தீவிரமான எழுத்து.
யானைக்கூட்டம் - ஜே. ஹெச். வில்லியம்ஸ். -மொழிபெயர்ப்பு – சண்முக சுந்தரம். அகல் வெளியீடு. விலை. ரூ.80.
பர்மீய காடுகளில் யானையுடன் தான் பழகிவாழ்ந்த நாட்களை. யானைகளின் இயல்புலகம் பற்றிய அழகான சித்திரத்தை எழுத்தாக்கியிருக்கிறார் கர்னல் வில்லியம்ஸ்.
இந்திய வரலாறு காந்திக்கு பிறகு - ராமச்சந்திர குஹா. தமிழில். ஆர்.பி.சாரதி. கிழக்கு பதிப்பகம். விலை. ரூ.250.
காந்திக்கு பிறகான இந்தியாவின் வரலாற்றை விவரிக்கும் புகழ்பெற்ற நூலின் முதற்பாகம். சிறப்பான தமிழாக்கத்துடன் வெளியாகி உள்ளது.
யுவான்சுவாங் -தமிழில். சரவணன். சந்தியா பதிப்பகம்.
உலகப்புகழ்பெற்ற யுவான்சுவாங் பயணக்குறிப்புகள் தமிழில் வெளியாகி உள்ளது. பௌத்தகால இந்தியாவை பற்றிய சித்திரங்களை இதில் இருந்து துல்லியமாக அறிந்து கொள்ள முடிகிறது.
--------
புத்தகக் கண்காட்சியில் முதல்நாள்
புத்தகக் கண்காட்சியின் முதல் நாள் இரவு 7 மணிக்கு தான் அரங்கில் பார்வையாளர்கள் அனுமதிக்கபட்டார்கள். முதல்வர் வருகையை முன்னிட்டு காவல்துறையின் அதிக கெடுபிடி. பாதுகாப்பு சோதனைகள். ஏதோ சர்வதேச விமான நிலையத்திற்குள் போவது போலிருந்தது.
நண்பர் பா.ராகவனின் யதி நாவலை தினமணி பினாகிள் பதிப்பக அரங்கில் வெளியிட்டேன். நண்பர்கள் அகரமுதல்வன். லட்சுமி சரவணக்குமார் ஹரன் பிரசன்னா போன்றவர்களைச் சந்தித்து பேசிக் கொண்டிருந்தேன். தேசாந்திரி அரங்கில் இருந்து ஸ்ருதி டிவி சிறிய நேரலை ஒன்றை செய்தது. நன்றி கபிலன்.
தேசாந்திரி அரங்கு எண் 220, 221 இரண்டாவது வரிசையின் துவக்கத்தில் உள்ளது.
------------------------------
புத்தகக் கண்காட்சி இரண்டாம் நாள்
தேசாந்திரி அரங்கு எண் 220, 221ல் இன்று நிறைய வாசகர்களைச் சந்தித்து உரையாடினேன். அமெரிக்காவிலிருந்து வந்திருந்த நம்பி நாராயணன் அவர்களைச் சந்தித்தது மிகுந்த மகிழ்ச்சி தந்தது.
புத்தகக் கண்காட்சிக்குள் வாகனத்தில் போய் வருவது ராணுவ முகாம் ஒன்றுக்குள் போய் வருவது போல அத்தனை கஷ்டமாக உள்ளது. எத்தனை தடுப்புகள். எவ்வளவு கெடுபிடிகள். குழந்தைகள் பெரியவர்களை அலையவிடுகிறார்கள். இத்தனை மோசமான வாகன வழித்தடைகள் இதன் முன்பு கண்டதேயில்லை. அதிலும் பாதுகாப்பு பணியில் நியமிக்கபட்டுள்ளவர்கள் பார்வையாளர்களை நடத்துகிற விதம் அராஜகம். நெடிய பாதுகாப்புச் சுவர்களைத் தாண்டி புத்தகம் வாங்க உள்ளே நுழைவது மிகக் கஷ்டம். இந்த நெருக்கடிக்குள் தான் பார்வையாளர்கள் வந்து புத்தகம் வாங்கிப் போகிறார்கள்.
இலக்கியக் கூட்டம் நடக்கும் அரங்கு எங்குள்ளது என்பதைக் கண்டுபிடிப்பது பெரும் சவால். புதையல் தேடுவதில் நிபுணர்கள் மட்டுமே இந்த அரங்கைக் கண்டடைய முடியும்.
-----------
புத்தக் கண்காட்சி மூன்றாம் நாள்
இன்று புத்தகக் கண்காட்சியினுள் மிகப்பெரிய கூட்டம். விடுமுறை தினம் என்பதால் நிரம்பி வழிந்தது கண்காட்சி. இத்தனை வாசகர்களை காண்பது மிகுந்த சந்தோஷம் தரக்கூடியது. கடந்த இரண்டு நாட்களாக தொண்டைவலி. அதன் காரணமாகத் தொண்டைகட்டிக் கொண்டுவிட்டது. சரியாகப் பேசமுடியாத சிரமம். என் அம்மா உங்கள் வாசகர், எனது அக்கா உங்களது வாசகர் என்று சொல்லி புத்தகம் வாங்கிப்போகும் இளைஞர்களை கண்டேன். ஒரு வாசகர் தன் அம்மாவிற்காக எனது புத்தகங்களில் 25யை ஒரே நேரத்தில் வாங்கிக் கொண்டு வந்து கையெழுத்து கேட்டார். அத்தனையிலும் அந்த அம்மாவின் பெயர் எழுதிக் கையெழுத்துப் போட்டுக் கொடுத்தேன். இவர்களின் அன்பு தான் என்னை எழுதவைக்கிறது.
***
நண்பர் விமலாதித்த மாமல்லன் எழுதிய புத்தகங்கள் தேசாந்திரி அரங்கில் விற்பனைக்குக் கிடைக்கின்றன
தி இந்து நடுப்பக்க ஆசிரியர், எனது நண்பர் சமஸ் எழுதிய நூல்களும் தேசாந்திரி அரங்கில் விற்பனைக்குக் கிடைக்கின்றன
--------------
தேவியின் திருப்பணியாளர்கள்
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் திருப்பணியாளர்கள் குறித்த விரிவான ஆய்வினை மேற்கொண்டவர் கிரிஸ் புல்லர். இவர் லண்டன் பொருளாதாரப் பள்ளியில் மானுடவியல் பேராசிரியராகப் பணியாற்றுகிறார். மீனாட்சியம்மன் கோவிலைப் பல்வேறு காலகட்டங்களில் கள ஆய்வு செய்து விரிவாக எழுதியிருக்கிறார். இந்த ஆய்வேடு தமிழில் வெளியாகியுள்ளது. தேவியின் திருப்பணியாளர்கள் என்ற நூலை பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரியின் நாட்டார் வழக்காற்றியல் ஆய்வு மையம் வெளியிட்டிருக்கிறது. இந்நூலை தமிழாக்கம் செய்திருப்பவர் சி. நாகராஜபிள்ளை. மீனாட்சியம்மன் கோவிலைப் பற்றி இவ்வளவு விரிவாக ஒரு [...]
வாசிப்போம் வாருங்கள்
ருஷ்ய எழுத்தாளர்கள் மற்றும் கடந்த காலத்தின் புகழ்பெற்ற செவ்வியல் நாவல்கள் பற்றியே அதிகம் எழுதி வருகிறீர்களே, சமகால உலக இலக்கியத்தில் கவனம் கொள்ளவேண்டிய முக்கிய எழுத்தாளர்கள் யார். என்ன புத்தகம் என்று ஒரு சிறிய அறிமுகம் தர இயலுமா ? என இரண்டு நாட்களுக்கு முன்பு சத்யநாராயணா என்ற நண்பர் ஒரு மின்னஞ்சல் அனுப்பியிருந்தார், அவருக்கு எழுதப்பட்ட இந்த மின்னஞசலை விருப்பமான வேறு எவருக்காவது பயன்படக்கூடும் என்று நினைத்து அப்படியே வெளியிடுகிறேன் •• கடந்த ஐந்து ஆண்டுகளில் [...]
>>மேலும்
100 சிறந்த புத்தகங்கள்
விஜய் டிவி நிகழ்ச்சியில் நான் குறிப்பிட்ட சிறந்த 100 புத்தகங்களின் பட்டியல் பற்றி பலரும் மின்னஞ்சல் அனுப்பிக் கேட்டிருக்கிறார்கள், அவர்களின் விருப்பத்திற்காக மீண்டும் இதைப் பதிவிடுகிறேன் இந்தப்பட்டியல் முற்றிலும் எனது ரசனை சார்ந்தது, அதிலும் முதன்மையாகப் படைப்பிலக்கியம் சார்ந்தது. இவையின்றி பல முக்கியமான புத்தகங்கள் உள்ளன என்பதை நான் அறிவேன், இது தரவரிசையில்லை. புதிய வாசகன் கற்றுத் தேர வேண்டியது என நான் கருதும் ஒரு பட்டியலாக எடுத்துக் கொள்ளவும் இவை முழுமையாக எங்கே கிடைக்கும் என [...]
>>மேலும்
புத்தகப் பரிந்துரை
சென்னை புத்தகக் காட்சியில் இரண்டு நாட்களாக மாலை வேளைகளில் நிறைய புதிய வாசகர்களைச் சந்திக்க முடிந்தது, துயில் நாவலை நிறைய இளம் மருத்துவர்கள் வாங்கிப் படித்து ஆழமாக விவாதித்தது சந்தோஷம் தருவதாக இருந்தது சென்னை புத்தகக் காட்சியில் நான் பரிந்துரைக்கும் முக்கியப்புத்தகங்கள் இவை. 1) இதற்கு முன்பும் இதற்குப் பின்பும் மனுஷ்யபுத்திரனின் சமீபத்திய கவிதை தொகுப்பு. சமீபத்தில் நான் வாசித்த ஆகச்சிறந்த கவிதைகள் இதில் உள்ளன, நவீன தமிழ்கவிதையில் புதிய பாய்ச்சலை உருவாக்கியுள்ள இந்தக் கவிதை தொகுப்பு [...]
>>மேலும்
கணிதமேதையைப் பற்றிய பாடல்
கணிதமேதை ராமானுஜத்தின் வாழ்வை விவரிக்கும் இந்தப் பாடல் அற்புதமான இசையோடு அமைக்கப்பட்டுள்ளது, கேட்கையில் மிகுந்த உணர்ச்சிவசமாகிறது, இப்பாடலை டவுன்லோடு செய்து கேட்கலாம் ஆன்லைனில் கேட்க இணையப்பக்கத்தில் உள்ள ஆடியோ பிளேரை அழுத்தவும், பள்ளி. கல்லூரி மாணவர்களிடம் கொண்டு சேர்க்கப்பட வேண்டிய முக்கிய பாடல் இது.
>>மேலும்
கதை கேளுங்கள்
தமிழ் ஸ்டுடியோ இணைய தளத்தில் கதை சொல்லி என்ற புதிய பகுதி செயல்பட்டு வருகிறது, இதில் ஒவ்வொரு எழுத்தாளரும் தனக்குப் பிடித்தமான இரண்டு கதைகளை அவர்களது குரலில் பேசிப் பதிவு செய்து வருகிறார்கள், மிகுந்த பாராட்டிற்கு உரிய முயற்சியது இதில் எனது நண்பரும் தமிழின் முக்கிய கவிஞருமான மனுஷ்யபுத்திரன் தனக்குப் பிடித்த கதையாக எனது மிருகத்தனம் என்ற சிறுகதையைச் சொல்லியிருக்கிறார், மிக நன்றாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவருக்கும் தமிழ் ஸ்டுடியோ நண்பர்களுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் [...]
>>மேலும்
மரங்கள்
நேற்று மரங்கள் என்ற 16 பக்கமுள்ள சிறுவெளியீடு ஒன்றினை ஒசூர் நண்பர் பாலசுந்தரம் அனுப்பியிருந்தார். இரவில் வாசித்தேன். மரங்களை முதன்மை படுத்திய அழகான சிறுதொகுப்பு . மிக நேர்த்தியாக உருவாக்கபட்டிருக்கிறது. இது போன்ற வெளியீடுகளை நண்பர்கள் சுட்டிக்காட்டாமல் போயிருந்தால் தவறவிட்டிருப்பேன். நோபல் பரிசு பெற்ற ஹெர்மன் ஹெஸ்ஸேயின் மரங்கள் பற்றிய உரைநடைக் கவிதையை மொழியாக்கம் செய்து வெளியிட்டிருக்கிறார்கள். இதைச் சிறப்பாகத் தமிழாக்கம் செய்திருப்பவர் கதிரவன். இத்தொகுப்பு மரங்களைப் பற்றி கல்யாண்ஜி. தேவதச்சன் இருவரது ஒரு கவிதையும் உள்ளடக்கியதாக [...]
>>மேலும்
புத்தக பரிந்துரை
கடந்த நான்கு நாட்களாக புத்தக கண்காட்சிக்கு சென்று வருகிறேன். புத்தகம் வாங்குவதில் இளைஞர்கள் காட்டும் ஆர்வம் மிக சந்தோஷமாக இருக்கிறது. வலைபக்கங்களில் எழுதும் நண்பர்கள் பலரையும் சந்தித்தது கூடுதல் மகிழ்ச்சி தருவதாக இருந்தது என் பார்வையில் பட்ட சில மொழிபெயர்ப்பு புத்தகங்களை உங்களுக்கு சிபாரிசு செய்கிறேன். இவை முதன்முறையாக தமிழில் வெளியாகி உள்ளன. இலக்கியம் சார்ந்த அக்கறை கொண்ட ஒவ்வொருவரும் இந்த நூல்களை வாங்க வேண்டும் என்பதே எனது விருப்பம் எண்ணும் மனிதன் – மல்பா தஹான் -அகல் வெளியீடு. [...]
>>மேலும்
குளிர்காலப் புத்தகங்கள்
குளிர்காலம் புத்தகம்படிப்பதற்கு மிகவும் உகந்த காலம். வேறு எப்போதையும் விட கையிலிருந்த புத்தகம் குளிர்ந்த இரவுகளில் நம்மோடு மிக நெருக்கமாகவிடுகிறது.வார்த்தைகள் தரும் வெம்மை அலாதியானது. சொற்கள் மிக நெருக்கமாக தோளில் கைபோட்டுக் கொண்டு பேசும் நட்புடன் நம்மோடு பேசுகின்றன. மூடிய ஜன்னலின் வெளியே குளிர்காற்று அலைந்து கொண்டிருக்கிறது. புத்தகங்கள் குளிர்காலத்தில் துளிர்க்க துவங்குகின்றன. அதன் பசுமையும் அலைவும் மிக வசீகரமாகயிருக்கிறது. படுக்கையில் கிடந்தபடியே வாசிப்பதற்கு போதுமான வெளிச்சத்தில் படிப்பது அலாதியான அனுபவம். எப்போதும் சில புத்தகங்கள் வாசிக்கபடுவதற்கான [..
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
எஸ் .ராமகிருஷ்ணன்
--------------------------------
என்னைப் பற்றி
------------------
விருதுநகர் மாவட்டத்தின் மல்லாங்கிணர் சொந்த ஊர். அப்பா சண்முகம் கால்நடை மருத்துவர். அம்மா மங்கையர்கரசி. புத்தகங்கள் படிப்பதில் தீவிர விருப்பம் கொண்டவர். அண்ணன் டாக்டர் வெங்கடாசலம், அடுத்தது நான், அதன் பின்னே தங்கைகள் கமலா, கோதை, உஷா, கடைசி தம்பி பாலு.
தாத்தா வீட்டின் பெயர் பெரியார் இல்லம். சாத்துரில் உள்ளது. திராவிட இயக்கத்தில் ஆழமான நம்பிக்கை கொண்ட குடும்பம். அடிப்படையில் விவசாயக் குடும்பம் என்பதால் வயலும் கரிசல்காடும், கிணற்றடி நிலங்களும் எங்களுக்கு இருந்தன. சூலக்கரை, சத்திரப்பட்டி, மல்லாங்கிணர் என்று பழைய ராமநாதபுர மாவட்டத்தின் சின்னஞ்சிறு கிராமங்களில் கழிந்தது என் இளமைப்பருவம்.
இன்னொரு பக்கம் அம்மா வழித் தாத்தா தீவிரமான சைவ சமயப் பற்றாளர். தமிழ் அறிஞர். அவரது நூலகத்தில் ஷேக்ஸ்பியர், மில்டன் துவங்கி திருவாசகம் வரை தமிழிலும் ஆங்கிலத்திலும் நுற்றுக்கணக்கான புத்தகங்கள் இருந்தன. அவரது ஊர் கோவில்பட்டி. பூர்வீகம் திருநெல்வேலி. தினமும் அதிகாலையில் பச்சைத் தண்ணீரில் குளித்து திருநீறு அணிந்து தேவாரம் பாடி அவரது காலைப்பொழுது துவங்கும். அதனால் கடவுள் இருக்கிறாரா, இல்லையா என்ற குழப்பம் என் வீட்டின் அன்றாடப் பிரச்சனையாக இருந்தது.
இரண்டு எதிர்முனைகளுக்கு இடையில் கழிந்தது எனது பால்யம். ஆனால் இரண்டு வீட்டிலும் தமிழ் இலக்கியங்கள், மற்றும் சமூகச் சிந்தனைகள் குறித்த தீவிர ஈடுபாடும் அக்கறையும் இருந்ததால் படிப்பதற்கும், அதைப்பற்றி விவாதிப்பதற்கும் அதிக முக்கியத்துவம் தந்தார்கள்.
கல்லுரி நாட்களில் எழுதத் துவங்கினேன். எழுதிய முதல்கதை கபாடபுரம். அது கையெழுத்து பிரதியாக நண்பர்களால் வாசிக்கபட்டு தொலைந்து போனது. வெளியான முதல்கதை பழைய தண்டவாளம் கணையாழியில் வெளியானது.
ஆங்கில இலக்கியம் கற்று அதில் டாக்டர் பட்ட ஆய்வு மேற்கொண்டேன். ஆனால் ஊர்சுற்றும் மனது படிப்பைத் தூக்கி எறிய வைத்தது. மனம் போன போக்கில் சுற்றித் திரியும் பழக்கம் பதினெட்டு வயதில் துவங்கியது. இந்தியா முழுவதும் பலமுறை சுற்றிவந்திருக்கிறேன். இந்தியாவின் அத்தனை முக்கிய நுலகங்களுக்கும் சென்று படித்திருக்கிறேன்.
நெருக்கமான நண்பரான கோணங்கியோடு சேர்ந்து இலக்கியவாதிகளை தேடித்தேடி சந்திப்பதும், ஊர்சுற்றுவதுமாக பதினைந்து வருடங்கள் அலைந்து திரிந்தேன். என்னை எழுத்தாளனாக உருவாக்கியதில் கோணங்கியின் வீட்டிற்கு முக்கியப் பங்கிருக்கிறது.
சென்னையில் அறையில்லாமலும் கையில் காசில்லாமலும் பத்தாண்டுகளுக்கு மேலாக திரிந்த அவமானங்களும் வலியும் இன்று எழுத்தின் அடிநாதமாக ஒடிக் கொண்டிருக்கிறது. தஸ்தாயெவ்ஸ்கியும், வைக்கம் முகமது பஷீரும், போர்ஹேயும் மார்க்வெஸ்சும் பிடித்த எழுத்தாளர்கள். தமிழில் ஆண்டாள், பாரதியார். புதுமைபித்தன் கு.அழகிரிசாமி மற்றும் வண்ணநிலவன்.
காதலித்து திருமணம் செய்து கொண்டிருக்கிறேன். மனைவி சந்திர பிரபா. தேர்ந்த வாசகி. வீட்டின் சுமை என் மீது விழாமல் தாங்கிக் கொண்டிருப்பவர். குழந்தைகள் ஹரி பிரசாத் , ஆகாஷ்
ஆனந்த விகடனில் நான் எழுதிய துணையெழுத்து தொடர் பரவலான வாசக கவனத்திற்கு உள்ளானது. அதைத் தொடர்ந்து கதாவிலாசம், தேசாந்திரி கேள்விக்குறி என்று வெளியான பத்திகள் தமிழில் பரந்த வாசக தளத்தினை உருவாக்கியிருக்கிறது.
மகாபாரதம் மீது கொண்ட அதீத விருப்பத்தின் காரணமாக நான்கு ஆண்டுகள் மகாபாரதத்தில் இடம் பெற்றுள்ள அஸ்தினாபுரம், துவாரகை. குருஷேத்திரம் உள்ளிட்ட பலமுக்கிய நகரங்கள், இடங்கள் ஒவ்வொன்றாக தேடித்திரிந்து பார்த்திருக்கிறேன். பல்வேறுபட்ட மகாபாரத பிரதிகளை வாசித்து ஆய்வு செய்திருக்கிறேன் அத்தோடு மகாபாரதத்தின் உபகதாபாத்திரங்களை மையமாகக் கொண்டு நான் எழுதிய உபபாண்டவம் நாவல் தீவிர இலக்கியவாசிப்பிற்கு உள்ளானதோடு மலையாளம், வங்காளம் ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டு வருகின்றது.
எனது சிறுகதைகள் ஆங்கிலம் ஜெர்மன், பிரெஞ்சு, கன்னடம், வங்காளம், ஹிந்தி, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. என்னுடைய படைப்புலகம் பற்றி ஆய்வு செய்து மூன்று தமிழ் ஆய்வாளர்கள் டாக்டர் பட்டம் பெற்றிருக்கிறார்கள். பதிமூன்று பேர் எம்.பில் பட்டம் பெற்றிருக்கிறார்கள். ஒன்பது கல்லூரிகளிலும் இரண்டு பல்கலைகழங்களிலும் என்னுடைய படைப்புகள் பாடமாக வைக்கபட்டிருக்கின்றன.
செல்லும் இடமெல்லாம் எனக்கு நண்பர்களுண்டு, பேச்சும் எழுத்தும் ஊர்சுற்றலுமே என்னை இயக்கி கொண்டிருக்கின்றன. கடந்த சில வருடங்களாக தமிழ் சினிமாவில் திரைக்கதை வசனம் எழுதி வருகிறேன். அட்சரம் என்ற இலக்கிய காலாண்டு இதழின் ஆசிரியராக இருந்து எட்டு இதழ்கள் வெளிவந்திருக்கின்றன.
இலக்கியம், சினிமா, பத்திரிக்கை, இணையம், நாடகம், ஆய்வு, பயணம், என்று பல்வேறு தளங்களில் தொடர்ந்து இயங்கி வருகிறேன்.
S. R
.