ஒறுக்கும் மதுகை உரனுடையாளன் பொறுக்கும் பொறையே பொறை - நாலடியார் 65
இன்னிசை வெண்பா
இளையான் அடக்கம் அடக்கம் கிளைபொருள்
இல்லான் கொடையே கொடைப்பயன் - எல்லாம்
ஒறுக்கும் மதுகை உரனுடை யாளன்
பொறுக்கும் பொறையே பொறை. 65
- சினமின்மை, நாலடியார்
பொருளுரை:
இளமைப் பருவமுடையவனது புலனடக்கமே அடக்கமெனப்படும்;
கிளைக்கும் பொருள் இல்லாதவனது ஈகையே பயனெனப்படும் ஈகையாம்;
அவைபோல, எதனையும் அழிக்க வல்ல வலிமை யறிவினை யுடையோன் பொறுத்துச் சினம் ஆறும் பொறுமையே பொறுமை யெனப்படும்.
கருத்து:
தமது சினம் செல்லக்கூடிய இடங்களிற் பொறுத்துக் கொள்ளுதலே சிறந்த பொறுமையாகும்.
விளக்கம்:
கிளைக்கும் பொருளென்றது பலமுகமாக மேன்மேற் பெருகுஞ் செல்வத்தை.
பொருளால் ஆகும் பயன் கொடையாதலின், கொடைப் பயன் எனப்பட்டது.
எல்லாம் என்றது, எத்தகையதனையும் என்னும் பொருட்டு.
ஒறுத்தல் - இங்கு அழித்தல். ‘எல்லாம் ஒறுக்கும்' என்ற குறிப்பால்,
உரனுடையாளன் என்றது, தவமுடையானை.
வலிமை மிக்க அறிவு தவ அறிவேயாதலின், மதுகையுர மெனச் சிறப்பிக்கப்பட்டது.
அதிகாரம் நோக்கி, முன்னிரண்டு கருத்துக்களை ஏனையதற்கு உவமமாகக் கொள்க.
இங்கே காட்டிய அடக்கம் முதலியனவே உள்ளமாட்சிமைக் காவன வென உரைத்தபடி.