காலம் நேர்காணல் முதல் பகுதி

காலம் இதழின் வாசகர்களுக்கு உங்களை அறிமுகம் செய்யவேண்டியதில்லை இருந்தபோதிலும் காலம் படிக்கப்படும் -விவாதிக்கப்படும் தமிழ்ச்சிந்தனை வெளிக்கு உங்களை எப்படிக் காட்டிக்கொள்ள விரும்புகிறீர்கள்.

முன்பெல்லாம் என்னையொரு எழுத்தாளன் என்று சொல்லிக்கொள்வதில் ஆர்வத்தோடு இருந்தேன். அதற்காக வாதாடியிருக்கிறேன். இப்போது அப்படி நினைக்கவில்லை. என்னையொரு கல்வியாளனாக - பொறுப்பான பேராசிரியராக முன்னிறுத்துக்கொள்வதிலேயே கவனம் செலுத்துகிறேன். பொறுப்புள்ள பேராசிரியராக இருப்பதில் எழுத்தாளராக இருப்பதும் அடங்கும் என்றும் நம்புகிறேன். இருந்தபோதிலும் கலை இலக்கியவெளிக்குள் எனது நகர்வுகளைக் குறித்துச் சொல்வது தற்புகழ்ச்சியாகாது என்பதால் இதைச் சொல்லவிரும்புகிறேன்.எப்போதும் நான் இரண்டு குதிரைகள் மீது சவாரி செய்பவனாக இருந்து வந்துள்ளேன். ஒரு தன்னிலையை அல்லது அடையாளத்தை உருவாக்கியபின் அதை நானே அழித்தும் இருக்கிறேன். தன்னுணர்வோடு விலகுவதாகக் கருதித் திரும்பவும் அதற்குள் பயணித்திருக்கிறேன். எப்போதும் உள்ளேயும் வெளியேயுமான பயணங்கள் சாத்தியமாகிக் கொண்டே இருந்தன. தொடர்ந்து ஏனிப்படி நடக்கிறது என்றுகூடப்பல நேரங்களில் நினைத்துக் கொள்வதுண்டு. அதனால் தான் என்னை அ.ராமசாமி என்ற பெயர்கொண்ட ஒரு பேராசிரியராகவும், கல்விப்புலத்திற்கு வெளியே கலை, இலக்கியங்கள் பற்றிய விவாதங்களை முன்னெடுக்கும் விமரிசகனாகவும் நினைத்துக்கொள்கிறேன். இந்த நினைப்பின் பின்னணியில் இருப்பது எனது வாசிப்பும், எனது துறைக்குச் செய்யும் கடமையைத் திருப்தியுடன் செய்யவேண்டுமென்ற நினைப்பும் மட்டும் தான். எழுதுவதற்கும் சிந்திப்பதற்கும் தனியாக வரம்பெற்றவன் என எப்போதும் நான் நினைப்பதில்லை.

படிக்கிற காலத்தில் ஒரு எழுத்தாளனாக -குறிப்பாகக் கதாசிரியனாக ஆகவேண்டும் என்றே நினைத்தேன். குடும்பச் சூழல் காரணமாக வாசிக்கக் கிடைத்த பாரத, ராமாயண வாசிப்புகளும், பெரியெழுத்துக்கதைகளும், பாடத்திட்டத்திற்கு வெளியே தேடித்தேடி வாசிக்கிறவனாக மாற்றியது. அப்படி வாசித்த நாவல்களும் சிறுகதைகளும் ஒரு கதாசிரியனாக ஆகும்படி தூண்டின. நேரடிக்கதைகளையும் மொழிபெயர்ப்புக்கதைகளையும் வாசித்த காலங்கள் காதல் தொலைத்த காலம். நாளொன்றுக்கு ஒரு நாவல் என்றெல்லாம் வாசித்திருக்கிறேன். ஜெயகாந்தனின் பாரிசுக்குப் போவை முதல் நாள் நூலகம் மூடும்போது எடுத்துக்கொண்டுவந்தவன், அடுத்தநாள் மூடும்போது திருப்பிக்கொடுத்தேன். நூலகப் பணியாளர் நிறுத்திவைத்துக் கேள்விகள் கேட்டார். ஜெயகாந்தன் வாசகரான அவரால் பாரிசுக்குப்போவை ஒரேநாளில் வாசிக்கமுடியும் என்பதை நம்பமுடியவில்லை. அப்போது வந்த தீபம், கணையாழி, மன ஓசை போன்ற இதழ்களுக்குக் கதைகளெல்லாம்கூட எழுதி அனுப்பியிருக்கிறேன். மன ஓசையிலும் கணையாழியிலும் கவிதைகள் அச்சாகின; கணையாழியில் கதையும் அச்சானது.

வன்மத்தையும் சாதியிறுக்கத்தையும் உலகுக்குச் சொன்ன உத்தப்புரம் தான் எனது பஞ்சாயத்தின் தாய்க்கிராமம். அங்குதான் 5 ஆம்வகுப்புவரை படித்தேன். அப்போதெல்லாம் வகுப்பறைகளில் பிளவுகள் கிடையாது. சாதிவேறுபாடுகளின் குரூரமுகம் உணரப்படாமல் இருந்தது. நாம் வாழும் வெளியை அங்கேயே இருக்கும்வரை உணர்வதில்லை; அங்கிருந்து பிரிந்து வாழநேரும்போது உணர்கிறோம்; புரிந்துகொள்கிறோம்; விமரிசனம் வைக்கப்பழகுகிறோம் என்பது எனது புரிதல். 1970-களின் தொடக்க ஆண்டுகளில் உயர்நிலைப்பள்ளிப் படிப்புக்காகத் திண்டுக்கல்லுக்கும் எனது கிராமத்திற்கும் வந்துபோய்க் கொண்டிருந்தபோது உசிலம்பட்டி வட்டாரத்தில் சாதி இறுக்கம் பரவியதைக் கண்கூடாகப் பார்த்தேன். சொந்த ஊரில் மட்டுமே வாழும் வாழ்க்கை உருவாக்கும் கிணற்றுத்தவளை மனோபாவம் மாறவேண்டியது என்பதை உணர்வதற்காகவேணும் ஒவ்வொருவரும் பதின்பருவத்தில் சொந்த ஊரைவிட்டுப் பிரிந்துவாழும் வாழ்க்கையைப் பரிசாகப் பெறவேண்டும். விடுதிவாழ்க்கையே ஆனாலும் பலவிதமான மாணவர்களின் பின்னணிகளை அறியும் வாழ்க்கை அது.

என்னமாதிரியான கதைகளை எழுதவேண்டுமெனத் திட்டமிட்டெல்லாம் வைத்ததுண்டு. வட்டார எழுத்துக்கள் -குறிப்பாகக் கரிசல் எழுத்துகள் தந்த உற்சாகத்தில் மதுரைமாவட்டத்தில் எழுத்துப்பரப்பில் பதிவுபெறாமல் இருந்த உசிலம்பட்டி வட்டாரத்தை எழுதும் ஆசையில் தயாரிக்கப்பட்ட குறிப்புகளெல்லாம் இன்னும் இருக்கின்றன. வீரன்கரடு என்ற பெயரெல்லாம் வைத்து தொடங்கப்பட்ட நாவல் எழுதிமுடிக்கப்படும் வாய்ப்பு குறைவுதான். குற்றப்பரம்பரைச் சட்டத்தின் அனுபவங்களோடு திருமங்கலம் கச்சேரிகளில் பதிவான வழக்குகளும் தரவுகளாக இருக்கக்கூடியன என நினைத்திருந்தேன். மதுரைமாவட்டத்தின் முதல் காவல்நிலையமாகக் கருதப்பெற்ற சிந்துபட்டி பெருமாள் கோயில் படுதாக்களில் பதிக்கப்பெற்ற கைரேகைகள் அழிக்கப்பட்டிருக்கலாம். ரத்தவாடை இன்னும் இருக்கும் கிராமங்கள் இன்னும் இருக்கின்றன.

முனைவர் பட்ட ஆய்வாளராக ஆனபோது புனைவுமொழி விலகிப்போய்விட்டது. தர்க்கத்தை முதன்மைப்படுத்தும் கட்டுரை மொழி புகுந்துகொண்டது. அதே நேரத்தில் நாடகக்காரன் என்ற இன்னொரு அடையாளத்தையும் விடாப்பிடியாக உருவாக்கிக் கொண்டிருந்தேன். முனைவர் பட்ட ஆய்வுக் காலத்தில்தான் நிஜநாடக இயக்கத்தில் இணைந்து செயல்பட்டேன். நெறியாளரிடம் அதற்காகத் திட்டுகள் வாங்கியதுமுண்டு. நிஜநாடக இயக்கத்தின் செயல்பாடுகளில் 8 ஆண்டுகள் செயல்பட்டதே என்னைப் பாண்டிச்சேரிப் பல்கலைக்கழக நிகழ்கலைத்துறையில் ஆசிரியனாக ஆக்கியது. ஐந்தாண்டு காலம் நான் ஆய்வுசெய்து பெற்ற முனைவர் பட்டம் துணைக்கருவியாகத்தான் இருந்தது. அங்கிருந்த 8 ஆண்டுகாலக் கற்பித்தல் பணிக்கும் ஆய்வேட்டிற்கும் எந்தத் தொடர்பும் இருந்ததில்லை. பாண்டிச்சேரி தொடர்பு உண்டாக்கிய மாற்றங்கல் பலவிதமானவை. அந்தக் காலத்தில் நான் படித்தவை பலவிதமானவை. ரவிக்குமாரின் நட்பு, நிறப்பிரிகை, ஊடகம், அதன் ஆசிரியர் குழுவில் சேர்ந்துகொண்ட நண்பர்கள் ப்ரதிபா ஜெயச்சந்திரன், அருணன், கூட்டுக்குரல் நாடகக்குழு கூட்டுவிவாதம், புதுச்சேரி பிரெஞ்சிந்திய நிறுவனம், அங்கிருந்த நண்பர் கண்ணன். எம்., எனக் கல்விப்புலத்திற்கு வெளியேயான பயணம் களச்செயல்பாடாகவும் நூல்களினூடான பயணமாகவும் அமைந்தவை.. பாண்டிச்சேரி பல்கலைக்கழக நிகழ்கலைத் துறையில் தொடங்கிய விரிவுரையாளர் பதவி எனது முதல் பணி. அங்கே நாடகத்துறை சார்ந்த செய்முறைக்கல்வியைக் கற்பித்த்தோடு, கலை இலக்கியங்களைக் கற்றலில் இருக்கும் அடிப்படைகளைக் கற்பிக்கும் விரிவுரைப் பணிகளையும் செய்தேன். அந்தக் காலகட்டத்தில் அரங்கியல் சார்ந்த பல்வேறு தளங்களில் பங்கெடுத்திருக்கிறேன். சங்கரதாஸ் சுவாமிகள் நிகழ்கலைப்பள்ளியின் பெரும் தயாரிப்புகளில் முக்கியப் பங்காற்றியிருக்கிறேன். மாணவர்களின் தேவைக்காகச் சிறியதும் பெரியதுமான நாடகங்கள் பலவற்றைத் தழுவியும் எழுதியும் புனைகதைகளிலிருந்து மாற்றியும் தந்தேன். மாநில, தேசிய அளவுக் கருத்தரங்குகளில், நாடக விழாக்களில் நடக்கும் விவாதங்களில் பங்கேற்றேன். நான் பாண்டிச்சேரியில் இருந்த காலம் தலித் எழுச்சி நிகழ்ந்த காலம். அதற்கான கருத்தியல் தளத்தை உருவாக்கியதில் ரவிக்குமார் மையமாக இருந்தார்.அவரருகில் நான் இருந்தேன். பாண்டிச்சேரியில் பெற்றதையும் அடைந்ததையும் நெல்லைக்கு வந்தபின் எழுதுவதற்கான ஆதாரங்களாக ஆக்கிக்கொண்டேன். நெல்லையில் என வகுப்பறைப்பணி தமிழ்மொழி, தமிழ் இலக்கியம் கற்பிக்கும் ஆசிரியப்பணி என்றாலும், நாடகத் துறையிலிருந்தபோது கற்ற கலைக்கோட்பாடுகளே சினிமாவையும் வெகுமக்கள் பண்பாட்டையும் பகுப்பாய்வு செய்வதற்கு உதவின. இப்போதும் உதவுகின்றன.

இடையில் இரண்டு ஆண்டுகள் போலந்து நாட்டின் வார்சா பல்கலைக்கழகத்திற்குச் சென்று திரும்பிய பிறகு மொழியின் இருப்பையும் அதன் இயங்குநிலையையும் பேசும் ஆசிரியனாக மாறியிருக்கிறேன். அதன் வழியாகச் செவ்வியல் இலக்கியங்களையும் தொல்காப்பியமென்னும் இலக்கியக்கோட்பாட்டு நூலையும் விரும்பிப் படிப்பவனாகவும் தமிழுக்கான கோட்பாட்டு நூலாகச் சொல்ல வேண்டுமென்று விரும்புகிறவனாகவும் மாறியிருக்கிறேன். வார்சாவிற்குப் போவதற்கு முன்னால் இத்தகைய ஆர்வம் இருந்ததில்லை. ஐரோப்பியப் பல்கலைக்கழகங்கள் இலக்கியக் கோட்பாடுகளுக்கும் அரிஸ்டாடில் போன்ற முன்னவர்களுக்குத் தரும் இடமும் என்னைத் தொல்காப்பியத்தின் பக்கம் திருப்பியிருக்கிறது என்றே உணர்கிறேன்.

இந்தப் பின்னணியில்தான் தொடர்ந்து தொல்காப்பியத்தைத் தமிழ்க் கவிதை வாசிப்புக்கான கோட்பாடாக முன்மொழிகிறீர்களா? கவிதை ஆக்கம் - வாசிப்பு - விமரிசனம் என்கிற முறைமையில் தங்களுக்கு மிகவும் நெருக்கமானது எது? இம்முறைமைகளில் கவிதையின் இன்றைய போக்கு நம்பிக்கை தரக் கூடியதாக இருக்கிறதா ?

தமிழில் எழுதப்பட்ட - எழுதப்படும் கவிதைகளை மட்டுமல்ல; எல்லாவகையான இலக்கிய வடிவங்களையும் வாசிப்பதற்கும் விவாதிப்பதற்கும் தமிழில் ஒரு வாசிப்புக்கோட்பாடும் விவாதமுறைமையும் இருப்பதாக நான் நம்புகிறேன். அதனைத் தந்த தொல்காப்பியத்தை ஒரு இலக்கணமாகச் சுருக்கியதைத் தமிழுக்கு நேர்ந்த துயரமாக நினைக்கவேண்டும். அதிலிருந்து உருவாகக்கூடிய கோட்பாட்டுக்கான சிறிய வரைவாகப் பின்வரும் கட்டுரையை வாசித்துப்பாருங்கள்:

தொல்காப்பியரின் கவிதையியலும் சொல்முறை விளக்கமும் :

தொல்காப்பியம் உருவாக்கித் தந்துள்ள பாவியல் அல்லது கவிதையியல் அடிப்படையில் நிலத்தையும் பொழுதையும் முதல்பொருளாகக் கொண்ட திணைக்கோட்பாடை அடிப்படையாகக் கொண்டது. தமிழின் செவ்வியல் கவிதைகளின் வரையறைகளை உருவாக்கித்தந்த தொல்காப்பியம் இலக்கிய உருவாக்கத்தைப் பேசுகிறது. இலக்கிய உருவாக்கத்தின் முதன்மையான மூன்று பொருள்களில் முதலாவதாகக் கருதப்படுவது நிலமும் பொழுதும். அவ்விரண்டும் தான் முதல் பொருள் எனச் சுட்டப்படுகிறது. இதனைக் கூடுதலாக விளங்கிக்கொள்ளத் தொல்காப்பியத்திற்குள் நுழையலாம்.

தமிழின் தொல்லிலக்கணமான தொல்காப்பியம் மூன்று அதிகாரங்களில் ஐவகை இலக்கணங்களைக் கூறுகிறது. எழுத்ததிகாரத்தில் எழுத்துக்களின் ஒலி மற்றும் வரிவடிவங்களின் தோற்றம், வகை, நிரல்நிரை, அளவு, சொல்லாக மாறுதல், சொற்கள் புணர்தல் போன்றவை விளக்கப்படுகின்றன. சொல்லதிகாரத்தில் சொற்களின் வகை, உறுப்புக்கள், சொற்கள் இணைந்து தொடராக மாறுதல் போன்றன விளக்கப்படுகின்றன. இவை பெரும்பாலும் நேர்பொருளை தரக்கூடிய பேச்சு மொழிக்கும் எழுத்து மொழிக்கும் உரியவைகள் மட்டுமே. இதிலிருந்து முற்றிலும் மாறுபட்ட இலக்கியமொழிபு குறித்தோ, அம்மொழிபின்பொருள் குறித்து சொல்லதிகாரத்தில் கூறப்படவில்லை.

மூன்றாவது




டாக்டர் அ. ராமசாமி

எழுதியவர் : (7-Jan-19, 6:53 pm)
பார்வை : 46

மேலே