உறவுகளே கேளுங்கள்

எம் எளிமை கண்டு எட்டி நிற்கும்
உறவுகளே கேளுங்கள்!
எமக்கென்றும் உகந்ததல்ல
பகட்டுக் குப்பைக் கூளங்கள்!

வெறுத்து எமை ஒதுக்குவதால்
எமக்கில்லை இழப்புகள்!
எவரின் பொருட்டும் மாறாது
எமக்கான இயல்புகள்!

உறவு என்ற சொல்லின் பொருளை
முதலில் உணர்ந்துகொள்ளுங்கள்!
உதாசீனப்படுத்துவதால்
கிடைப்பதென்ன சொல்லுங்கள்!

உறவுகளை வாழ்த்தும்போதும்
உள்ளத்தினுள் பேதங்கள்!
சிலரை வாழ்த்தி சிலரைத் தவிர்க்கும்
வேற்றுமை விநோதங்கள்!

வாழ்த்துவோர்க்கு நன்றி கூட
சொல்ல மறுக்கும் மடமைகள் !
காழ்ப்புணர்ச்சி கர்வமெல்லாம்
இவர்களது உடமைகள்!

உயர்வு தாழ்வு பேதத்தோடு
உறவை அணுகும் சிறுமைகள்!
உள்ளமதில் கள்ளம் கொண்டு
உதட்டில் சிரிக்கும் கயமைகள்!

வசதி பார்த்து வருவதில்லை
மனதில் பாச நேசங்கள்!
பணத்தைப் பார்த்து பாசம் வந்தால்
அவையனைத்தும் வேஷங்கள்!

இரத்த சொந்தம் என்பதெல்லாம்
வெற்று வார்த்தை ஜாலங்கள்!
சுத்தமான அன்பு ஒன்றே
உறவின் இரத்த நாளங்கள்!

தரமற்ற சொந்தமெல்லாம்
தள்ளி கொஞ்சம் நில்லுங்கள்! - உங்கள்
தயவு எமக்குத் தேவையில்லை
வழியைப் பார்த்துச் செல்லுங்கள்!

- நிலவை பார்த்திபன்

எழுதியவர் : நிலவை.பார்த்திபன் (21-Jan-19, 11:42 pm)
சேர்த்தது : பார்த்திபன்
பார்வை : 79

மேலே