மனநிலை எரிமலை ஆகிவிடும்

இருளைக் கிழித்து செல்கிறது
இரவிலும் உறங்காத விழிகள்
ஆளில்லா அரவமற்ற பாதையில்
அகதியாய் நடந்திடும் சூழலில்
அமைதியின் ஆழம் தெரியுது
ஒலிகளின் மரணம் புரியுது !

முடுக்கி விடப்பட்ட இயந்திரமாய்
சுழன்றடிக்கும் சூறைக் காற்றாய்
முடிந்த நிகழ்வுகள் முட்டிமோதுது
இதயத்தின் எல்லைச் சுவர்களில்
முற்றுப்பெறாக் காரியங்கள் சில
முடிச்சுகளாய் நெஞ்சில் நிற்கிறது !

ஒதுங்கிய கரையோரம் துடித்திடும்
கடல்சேர வழியறியா மீன்களாய்
படபடப்புடன் பதைக்கும் நெஞ்சம்
வேற்றிடம் தேடுகின்ற நோக்கோடு
காற்றினில் கலந்து அலைகிறது
களிப்புமிகு வசிப்பிடத்தைக் காண !

சமயங்கள் முளைக்காத மண்ணில்
சாதிகள் சடலங்களான பூமியில்
அரசியல் தோன்றாத அண்டத்தில்
ஒற்றை மனிதனாக அல்லாமல்
ஒற்றுமை ஓங்கிய ஓரினமாய்
ஒருநாளாவது வாழ்ந்திட ஆசை !

சுயநலம் எங்கும் சுற்றித்திரியுது
பொதுநலம் மறைந்தே போனது
பேராசை தொற்று நோயானது
இதயங்களில் ஈரம் வற்றிவிட்டது
இந்நிலை நீடித்தால் எவருக்கும்
மனநிலை எரிமலை ஆகிவிடும் !

பழனி குமார்
30.01.2019

எழுதியவர் : பழனி குமார் (30-Jan-19, 2:40 pm)
பார்வை : 504

மேலே