மதங்கள் எதற்கு?
பந்தங்களைத் துறந்த
முனிவன் போல்
மானுடத்தை மறந்து
மௌனித்து நிற்கின்றன
மதங்கள்.
மானுடம் நெறிபட
மதங்கள் தோன்றி
ஆண்டுகள் நாலாயிரம்
கடந்து முடிந்த பின்னும்
பசி பட்டினி
சண்டை சச்சரவென
மலிந்த பூமியாய்
மாறிப் போனதேன்?
சபிக்கப்பட்ட மக்கள்
சாவைத் தள்ளிபோட
கையேந்தும் போதும்
உன்னை மறப்பதில்லை.
இருந்தும் ம்ண்ணில்
இரக்கம்,கனிவு
மனித நேயம்
காணாமல் போனதேன்?
தண்டல் எடுத்தவனெல்லாம்
சுரண்டி பதுக்குகிறான்
ஊழலைக் கையிலெடுத்து
பிறர் உழைப்பில்
உயிர் வாழும் மனிதர்களின்
நேர்மையும்
கண்ணியமும்
தொலைய விட்டதேன்?
சொந்த மதமென்றாலும்
எந்த மதம் உயர்ந்த மதம்
சொல்லுமா தெய்வங்கள்?
ஏனிந்தமுரண்பாடு
இந்த மண்ணில்.
மதங்கள் வழிகாட்டவில்லையா?..இல்லை
மானுடம் கற்றுக்கொள்ளவில்லையா?
பின் மதங்கள் எதற்கு?
மானுடம் திருந்தாதபோது.