நின் நினைவுகளும் அதுபோலவே எனக்கு எப்போதும்

இப்போதெல்லாம்
உன் நினைவுகள்
அப்போது போல
எப்போதும் வருகிறது
என்று பொய்
சொல்லப் போவதில்லை

ஆனால் சத்தியமாக
உன் நினைவுகள்
எனக்கு இப்போதும்
அவ்வப்போது வராமலில்லை

சில்லிடும் அந்த குளிர்காற்றிலோ
சிலிர்த்து திரும்பிடும் ஒரு குரலிலோ
சின்னதாய் இளையராஜாவின் இசையிலோ
சந்திக்கும் அறியா முகங்களிலோ

மண்வாசனையை எழுப்பி விழும் மழைத்துளிகள்
முதல் காணும் அதிகாலை பனித்துளி
தெருவில் வாலாட்டி போகும் நாய்க்குட்டி
டிங் டிங் மணியடித்து செல்லும் ஐஸ்கிரீம் வண்டி
கண்ணை உருட்டும் பக்கத்துக்குவீட்டு பாப்பா
அது சிந்த சிந்த கடித்து தின்னும் சாக்லேட்

இப்படி எப்படியெல்லாமோ
நீ எனக்குள் பயணிக்கிறாய்

எப்படியோ எனக்குள்
எப்போதும் இருந்துகொண்டு தான்
இருப்பாய் இறப்பு வரை
ஒரு தென்றலைப் போல

இதயம் துடிக்கும் வரை மட்டும் அல்ல
இனி ஒரு நாள்
இந்த இளமை துறந்து
நான் ஒரு நாள் இறந்து
என் இதய துடிப்பு நின்று போனாலும்
பறந்து போகும் என் ஜீவன்
உன் நினைவுகளை சேர்த்துக்கொண்டு தான்
நிச்சயமாக போகும்


சில நினைவுகள் சுகம்
சுகம் மட்டுமே
அம்மா மடி சூடு தரும் சுகம்
அம்மா கை சாப்பாடு மணம்
நிலா சோறு நிசப்த சுவை
நின் நினைவுகளும் அதுபோலவே
எனக்கு எப்போதும்

எழுதியவர் : யாழினி வளன் (1-Feb-19, 7:48 pm)
பார்வை : 265

மேலே