நிலத்தை உழுது செய்வதல்ல விவசாயம்
மண்ணோடு தினம் பேசி
நீர் செல்லும் வாய்க்காலில் காலை வீசி
நெடும் வயலில் பாத்திக் கட்டி
மணம் வீசும் எருவின் சாணம் பூசி
சேற்றோடு புரண்டாடி மற்றும் சதுராடி
அகலமான நிலத்தினிலே அழகாக நாற்று பாவி
அருமையாக வளரும் போது
அளவான நீரைக் கட்டி
நீண்ட நாட்கள் காத்திருந்து
நெல் வரப்பில் தூங்கி எழுந்து
மதிப்பான விளைச்சல் வேண்டி
மாரியம்மனுக்கு பொங்கலிட்டு
மந்தக்கரையில் களமிட்டு
மடங்கல் நெல்லை அறுத்து வந்து
மலைபோல் குவித்த நெல்லை - விற்க
மண்டிக்கு எடுத்துச் சென்றால் - எங்களை
மரியாதை குறைவாக ஏசிக் கொண்டு
ஈன விலைக்கு நெல்லைக் கேட்கும்
பணம் படைத்த வீனர் என்று வீழ்வாரோ !
நிலத்தை உழுது செய்வதல்ல விவசாயம்
கதிரும் மழையும் காற்றும் பனியும்
சிதைக்கும் நாளை கணித்து செய்யும்
மகத்துவ அறிவியலே அருமையான விவசாயம்.
––– நன்னாடன்