இரவும் பகலும்------------ஆய்வு, ஆளுமை, புனைவிலக்கியம், விமர்சனம்
அவரை விதைபோல இரண்டு பகுதிகளால் ஆனது பழைய நெல்லை அல்லது பண்பாட்டு நெல்லை. இப்போது பல மாவட்டங்களாக ஆனாலும்கூட “நமக்கு திருநவேலிப் பக்கம் சார்” என்றுதான் பழைய நெல்லைக்காரர்கள் சொல்வார்கள். ஆனால் நெல்லையை அறிந்த எவரும், தங்களை நெல்லைப் பகுதியைச் சேர்ந்தவர் என ஒருவர் சொல்லிக்கேட்டால், “எந்தப் பக்கமா?” என்று கேட்பார்கள். ஏனென்றால், ‘நெல்லை’யில் இரண்டு உண்டு. தாமிரவருணி நனைத்துச் செல்லும் ஒரு நெல்லை, வானம்பார்த்த இன்னொரு நெல்லை.
ஈரமான, பசுமையான நெல்லை, நாம் நெல்லைக்குரியதென இன்று சொல்லும் அத்தனை தொல்பண்பாடுகளுக்கும் விளைநிலம். தாமிரவருணியின் இருமருங்கிலும் சைவப் பேராலயங்களும் வைணவப் பேராலயங்களும் நிரைவகுத்திருக்கின்றன. பசுமை அலையடிக்கும் வயல்வெளிகள். கோட்டை வீடுகள், நிரைந்த பெரிய தெருக்கள் கொண்ட வீடுகள். இன்றும் சாலைகளின் ஓரங்களில் கான்கிரீட் தூண்கள்போல் எழுந்து நிற்கும் நீர்மருத மரங்களின் திமிர்ப்பு அந்நெல்லையின் அடையாளம்.
சாதாரண பேருந்துப் பயணத்திலேயே கொஞ்சம் கண்ணசந்து விழித்தால், பசுமையான நெல்லையிலிருந்து வறண்டநெல்லைக்குள் நுழைந்துவிட்டிருப்போம். உடைமுட்களில்கூடப் பச்சை இல்லாத புகைந்த மண். தொலைவில் வான்கோடு வில்போல் வளைந்து எல்லையிட்டிருக்கும் விரிநிலம். தேவதச்சனின் சொல்லில் ‘அத்துவான வெளி’. கைவிடப்பட்ட கமலைக் கிணறுகள். வேளாண்மை நின்றுவிட்ட வெறித்த வயல்கள். பச்சையே இல்லாத மண்ணில் எதை அப்படி அவசரமாக மேய்கின்றன என வியக்கச்செய்யும் ஆட்டு மந்தைகள். அப்பால், வளைகம்புடன் காலமற்ற நிழலில் கண்மயங்கும் இடையன்.
தாமிரவருணியின் இலக்கியத்திற்கும் இவ்விரு நிலங்களின் இயல்புகள் உண்டு. நெல்லை எழுத்தாளர்கள் என நாம் சொல்பவர்கள் புதுமைப்பித்தன், வல்லிக்கண்ணன், வண்ணநிலவன், வண்ணதாசன், விக்ரமாதித்யன், கலாப்ரியா, சுகா, மாரி செல்வராஜ் போன்ற அனைவருமே இந்த நிலத்தைச் சார்ந்தவர்கள்தான். இவர்கள் அனைவரின் எழுத்துகளிலும் அந்த ஈரம் உண்டு. அதைக் கனிவு என்றும் அழகுணர்வு என்றும் நாம் அடையாளப்படுத்திக் கொள்கிறோம். மொழியில் உணர்ச்சிகர நெகிழ்வு, மானுட உறவுகளின் நல்லியல்புகளை நோக்கிய நாட்டம். மிகச் சிறிய விஷயங்களில் அழகைக் காணும் பார்வை. மென்மையான நகைச்சுவை என இவ்வெழுத்துகளின் இயல்பை வரையறை செய்யலாம்.
வறண்ட நெல்லையின் அழகியல் வேறு. கி.ராஜநாராயணன் அந்நிலத்தின் முதன்மைப் படைப்பாளி என்றாலும் அவர் தன் நாட்டார் அழகியலால், தனிப்பட்ட நகைச்சுவை உணர்ச்சியால் அப்பால் நின்றிருக்கிறார். அவருக்கு நவீன இலக்கியத்தில் முன்னோடிகளோ வாரிசுகளோ இல்லை. அவரை நவீன இலக்கியத்திற்குள் நீண்டுவந்த நாட்டார் கதைசொல்லி என்று வகுக்க வேண்டும்.
வறண்ட நெல்லை நிலத்திற்குரிய அழகியலை உருவாக்கிய முன்னோடி என்று கு.அழகிரிசாமியைத்தான் சொல்ல வேண்டும். பொதுவான தமிழ் வாசகர்களுக்காகத் தெளிவான நில அடையாளமும் தனித்தன்மையும் இல்லாத கதைகள் பலவற்றை அழகிரிசாமி எழுதியிருந்தாலும், அவருடைய நல்ல கதைகள் அனைத்தும் அந்த வறண்ட மண்ணின் வாழ்விலிருந்து எழுந்தவை.
முழுக்க முழுக்க அந்த மண்ணுக்குரிய அழகியலை உருவாக்கிய முன்னோடி என்று பூமணியைத்தான் சொல்ல வேண்டும். குறிப்பாக, அவருடைய தொடக்கக் கால நாவலான ‘பிறகு’. அது கோவில்பட்டிக்காரர்களிடம் செலுத்தியிருக்கும் ஆழமான செல்வாக்கைச் சற்று அணுகிப் பார்த்தால்தான் புரிந்துகொள்ளமுடியும். இன்றுகூட அந்நிலத்திற்கு வெளியிலிருப்பவர்களுக்கு அந்நாவலின் வீச்சு சற்றுக் குறைவாகவே இருக்கும்.
மேலாண்மை பொன்னுச்சாமி, சுயம்புலிங்கம், ச.தமிழ்ச்செல்வன், கோணங்கி, கௌரிசங்கர், உதயசங்கர், சோ.தர்மன், லட்சுமணப்பெருமாள் எனப் படைப்பாளிகளின் ஒரு நிரை, அந்த அழகியலைப் பல வகையில் முன்னெடுத்துச் சென்றது. அந்நிலத்தின் கரிய மண்ணைக் கருத்தில்கொண்டு ஒரு பொதுவான பார்வையில் இதை ‘கரிசல் இலக்கியம்’ என்பதுண்டு.
முதன்மையாக இயல்புவாதத் தன்மைகொண்டது இவ்வெழுத்து. அல்லது கறாரான யதார்த்தவாதம். அதாவது, புறவயத்தன்மையே அதன் உளநிலைகளை, வடிவத்தைத் தீர்மானிக்கிறது. அதன் நெகிழ்வுகள், உச்சகட்ட உணர்ச்சிகள், நெருக்கடிகள் அனைத்துமே அந்தப் புறவயமான சித்திரிப்பினூடாகவே வெளிப்படுகின்றன. புலன்களுக்கு அகப்படும் உலகை உணர்ச்சிகளின் ஏற்றம் இல்லாமல் சித்திரிப்பது. கனவுகளுக்கும் மிகையுணர்ச்சிகளுக்கும் இடமில்லாத நேர்பார்வை ஆகியவை இவற்றின் இயல்புகள்.
இந்த இருமையைப் புரிந்துகொண்டால், எஸ்.ராமகிருஷ்ணனை இலக்கியரீதியாக அடையாளம் காண்பது எளிது. எஸ்.ராமகிருஷ்ணன், அடிப்படையில் கோவில்பட்டியை மையமாகக்கொண்ட வறண்ட நெல்லையின் கதையாசிரியர். கறாரான யதார்த்தவாதக் கதைகளை எழுதியபடி இலக்கியத்திற்குள் நுழைந்தவர். அவருடைய முதல் சிறுகதைத் தொகுதியான ‘வெளியிலிருந்து வந்தவன்’, பூமணியின் அழகியலை முன்னெடுத்துச் செல்லும் ஓர் இலக்கியவாதியையே அடையாளம் காட்டியது. அங்கிருந்து அழகியல் ரீதியாக ஈரமான நெல்லையை நோக்கிச் சென்றவர். அவ்விரு அழகியல்களின் கலவை என அவரைச் சொல்லமுடியும். இன்று அவருடைய அழகியல் முன்னோடிகளாகப் பூமணியையும் வண்ணநிலவன், வண்ணதாசன் மூவரையும் சுட்டிக்காட்டலாம்.
எஸ்.ராமகிருஷ்ணனின் இலக்கியப் பயணத்தை 30 ஆண்டுகளுக்கும் மேலாகக் கூர்ந்து பார்த்துவருகிறேன். அதில், பல படிநிலைகளும் திசைமாற்றங்களும் உள்ளன. அவற்றை ஒட்டுமொத்தமாகத் தொகுத்துக்கொள்வதற்கான தருணம் இது என நினைக்கிறேன். முதல்கட்டத்தில், எஸ்.ராமகிருஷ்ணன் அவர் பிறந்து வளர்ந்த வடநெல்லையின் பொட்டல் நிலத்து வாழ்க்கையின் கதையாசிரியராக இருந்தார். அந்நிலத்தின் திசைதொட விரிந்த வெற்று நிலமும் அங்கே பொழிந்து நிறைந்து நின்றிருக்கும் வெயிலும் அவருடைய புனைவுலகில் அடிப்படைப் படிமங்களாக வந்துகொண்டே இருக்கின்றன. அந்நிலத்தின் தெய்வமே வெயிலுகந்த அம்மன்தான். வெயிலுகந்தவர்கள் என்றே அவரையும் அவரைப்போன்ற மற்ற படைப்பாளிகளையும் சொல்ல முடியும்.
அங்கிருக்கும் வாழ்க்கையின் கதைக்கருக்கள் ‘அழிந்துகொண்டே இருத்தல்’, ‘தாக்குப்பிடித்தல்’, ‘விட்டுச்செல்லுதல்’ எனும் மூன்று வரிகளில் சொல்லிவிடத் தக்கவை. அதைத்தான் அவரைப்போன்ற பிற படைப்பாளிகளும் தொடர்ந்து எழுதினார்கள். அவர்களுடைய கதைகளின் தலைப்புகளைக்கொண்டே அச்சித்திரத்தை அடையமுடியும்.
கருவேலம்பூக்கள் [பூமணி], அசோகவனங்கள் [சதமிழ்ச்செல்வன்], ‘பொம்மைகள் உடைபடும் நகரம்’ [கோணங்கி], தொலைந்துபோதல் [எஸ்.ராமகிருஷ்ணன்], அந்த வெந்நிலத்தில், உண்மையில் பெருமளவுக்கு மக்கள் வாழ்க்கை இருந்ததில்லை. அலைந்து திரியும் இடையர்களின் மண் அது. 16-ம் நூற்றாண்டு வாக்கில் மதுரைக்குத் தெற்கே நாயக்கர்களின் ஆட்சி வலுவாக வேரூன்றியபோதுதான் பெரிய அளவில் மக்கள் குடியேற்றம் நிகழ்ந்தது; ஊர்கள் உருவாயின; ஏரிகள் வெட்டப்பட்டன. வானம்பார்த்த பூமிக்குரிய பருத்திபோன்ற பயிர்கள் அந்நிலப் பகுதியின் பொருளியலைக் கட்டமைக்கத் தொடங்கின.
ஆனால், இரு நூறாண்டுகளுக்குள் அந்த வேளாண் வாழ்க்கை நீடிக்கமுடியாததாக ஆகத்தொடங்கியது. புஞ்சை வேளாண்மை அங்கே வளர்ந்து வந்த மக்கள்பெருக்கை தாங்கிநிற்க முடியவில்லை. அவ்வப்போது மழைபொய்த்து உருவாகும் வறட்சி, வேளாண் பொருள்களுக்காக விலைவீழ்ச்சி என நிலங்களைக் கைவிட்டாக வேண்டிய நிலை.
எஸ்.ராமகிருஷ்ணன் உட்பட அந்நிலத்தின் படைப்பாளிகள் அனைவருமே கைவிடப்பட்ட ஊர்களைப் பற்றி எழுதியிருக்கிறார்கள்.
வேளாண்மையின் வீழ்ச்சியை ஓரளவு ஈடுகட்டியது தீப்பெட்டித் தொழில், பட்டாசுத் தொழில் போன்ற குடிசைத்தொழில்கள். அவை, விவசாயத்தை நம்பி மண்ணில் வாழ்ந்த மக்களை ரசாயனங்களுக்குள் சிறைப்படுத்தின. மக்கள் மந்தைகளாக மாறினார்கள். அது அவர்களின் பண்பாட்டிலேயே மிகப்பெரிய மாறுதலை உருவாக்கியது. பூமணி முதல் அனைவருமே அந்த மாற்றத்தை வெவ்வேறு கோணத்தில் இலக்கியமாக்கியிருக்கிறார்கள்.
எஸ்.ராமகிருஷ்ணனின் இத்தகைய கதைகளுக்கு உதாரணமாக ‘புலிக்கட்டம்’ என்னும் கதையைச் சொல்லலாம். 90-களின் தொடக்கத்தில் ‘இந்தியா டுடே’ சிறப்பிதழ் ஒன்றில் வெளிவந்த கதை இது. கரிசல் நிலத்தில் திருட்டுத் தொழில் செய்யும் ஒருவன் அகப்பட்டுக்கொண்டு கட்டிப்போடப்பட்டிருக்க, அவனுடைய அந்தப் பொழுதின் தனிமையை, பொருளின்மையைச் சொல்லும் கதை இது. அவன்மேல் ஊர்ந்து அலையும் எறும்புகள் நினைவுகளாகவும் காலமாகவும் உருமாறிக்கொண்டே இருக்கின்றன.
பாலைநிலத்தில் மேயும் விலங்குகளை நான் பல நாடுகளில் பார்த்திருக்கிறேன். அவை அந்நிலத்தின் வறுமையின் வடிவாக இருக்கும், காய்ந்த உடலுக்குள் எலும்புகள் புடைத்து. சலிப்புடன் பழுத்த விழிகளுடன். அரிதாகப் பாலைநிலத்தில் வாழும் வேட்டை விலங்கைப் பார்க்கையில் ஒரு துணுக்குறல் ஏற்படும். அவை அந்த மேயும் விலங்குகளைவிடப் பரிதாபமானவை. பிறந்த கணம் முதல், கொடும் பசியிலேயே வாழ விதிக்கப்பட்டவை. மறுகணமே செத்துவிடக்கூடும் எனும் நிலையிலிருக்கும் அவற்றின் உடல்.
‘புலிக்கட்ட’த்தின் திருடன் அத்தகையவன். அவனுக்கு வேறு வழியில்லை. வழிவழியாகத் திருட்டே தொழில். வீடும் மனைவியும் இருக்கிறார்கள். எதையாவது கொண்டுசென்றாக வேண்டும். அந்த மக்களுக்கும் வேறு வழியில்லை. அவனை அவர்கள் பிடித்தால் அநேகமாகக் கொன்றேயாக வேண்டும். முன்பு அங்கே ஒரு மரத்தில் ஒருவனைக் கட்டி வைத்திருந்தார்கள். குளிரில், மறுநாள் கால்மடங்கிச் செத்துக்கிடந்தான் அவன். அந்தக் குற்றவுணர்ச்சியில் அவனுக்கு அவர்கள் பலி கொடுத்தார்கள். கொல்லப் பட்ட திருடர்கள் தெய்வங்களாவதும் உண்டு.
வேட்டை விலங்கும் வேட்டையாடப்படும் விலங்கும் விளையாடும் அந்தப் புலிக்கட்டத்தின் இரக்கமற்ற விதியைச் சொல்லி நின்றுவிடுகிறார் எஸ்.ராமகிருஷ்ணன். இந்தக் கதையுடன் ஒப்பிடத்தக்க வண்ணநிலவனின் கதை ஒன்று உண்டு. அதிலும், இதேபோலத் திருட வந்தவன் கூரைஓடு உடைந்து, கிணற்றில் விழுந்து மாட்டிக்கொள்கிறான். அவனைக் கட்டிவைத்திருக்கிறார்கள். ஆனால், அந்த வீட்டிலிருக்கும் கர்ப்பிணிப் பெண் ஒருத்தி, அவனை அவிழ்த்துவிட்டு ‘ஓடிவிடு’ என்கிறாள், அவன் தப்புகிறான். அந்தச் செயற்கையான ‘கருணை’ எஸ்.ராமகிருஷ்ணனின் இந்தக் கதையில் இல்லை. இது பாம்புக்கும் தவளைக்குமான உறவிலிருக்கும் தவிர்க்க முடியாமையை மட்டுமே பேசுகிறது.
உண்மையில் வண்ணநிலவன் கதையில் இருக்கும் அந்தக் ‘கருணை’, வாழ்க்கையின் நம்மை மீறிய போக்குக்கு எதிராக நாம் உருவாக்கிக்கொள்ளும் பகற்கனவு. ‘புலிக்கட்டம்’, அந்தக் களத்தில் மனிதர்கள் எந்த முடிவையும் எடுக்க முடியாது, அந்தக் களம் தொன்றுதொட்டே உருவாகி வந்து தன்னியல்பில் நிகழ்வது எனக் காட்டுகிறது. தமிழில் எழுதப்பட்ட மிகச்சிறந்த சிறுகதைகளில் ஒன்றாக அது ஆவது, அதிலுள்ள தவிர்க்க முடியாமையை நாம் பேசிப்பேசி, எண்ணி எண்ணிக் கூர்மழுங்க வைத்துவிட முடியாது என்பதனாலேயே.
இந்தத் தளத்தைச் சேர்ந்த கதைகளில் குறிப்பிடத்தக்க ஒன்று, ‘பெயரில்லாத ஊரின் பகல்வேளை’. தமிழகத்தில் வடக்கு நெல்லைப் பகுதிகளில் மட்டுமே உள்ள ஒரு யதார்த்தம் இது. கைவிடப்பட்ட ஊர். கடந்த கால வாழ்க்கை மரங்களாக, சாவடிகளாக, மண்பொழிந்துகொண்டிருக்கும் குட்டிச்சுவர்கள் கொண்ட வீடுகளாக எஞ்சியிருக்க, மனிதர்கள் அற்றுப்போய்க் கொண்டிருக்கும் ஊர்கள். சிலகாலம் முன்பு ஒரே ஒரு முதியவர் மட்டுமே வாழும் கிராமம் ஒன்றைப் பற்றிய செய்தி வெளிவந்தது. [தூத்துக்குடி மாவட்டம் கருங்குளம் ஊராட்சிக்குட்பட்ட கிராமம்தான் மீனாட்சிபுரம். முதியவர் பெயர் கந்தசாமி] ராமகிருஷ்ணன் கதைகளில் வெயிலே பொட்டலின் உரிமையாளன். கிராமம் என்பது அதற்கு எதிராக மானுடர் உருவாக்கிக்கொண்டது. அவர்கள் அகன்றுசெல்லும்போது, மெள்ள வந்து ஊரைத்தான் எடுத்துக்கொள்கிறது வெயில்.
90-களில் கோவில்பட்டி எழுத்தாளர்களிடம் ஓர் அயல்நிலத்து அழகியலின் ஊடுருவல் நிகழ்ந்தது. அதைப் பொதுவாக லத்தீன் அமெரிக்க இலக்கியத்தின் அழகியல் எனலாம். ஐரோப்பிய எழுத்துகளும் சில உண்டு. காப்ரியேல் கார்சியா மார்க்யூஸ், ஜோர்ஜ் லூயி போர்ஹெஸ் ஆகிய இருவரையும் குறிப்பாகச் சொல்லவேண்டும். அந்த ஊடுருவல் ஏன் நிகழ்ந்தது, அதற்கான அழகியல் தேவை, உளவியல் தேவை என்ன என்பது ஒரு தனி ஆய்வுக்கான கேள்வி. என் பார்வையில், அவர்கள் தங்கள் நிலம் அளித்த எல்லைகளைக் கற்பனை யால் கடக்க முயன்றார்கள் என்று தோன்றுகிறது. வறண்ட நிலத்தின் கைவிடப்பட்ட தனிமையிலிருந்து, அடுக்கடுக்காக மாயம் பெருகும் ஒரு புனைவுநிலத்தை நோக்கிச்செல்ல அவர்கள் முயன்றனர். அந்நிலம் லத்தீனம் அமெரிக்க எழுத்தாளர்களிடமிருந்து அவர்களுக்குக் கிடைத்தது.
‘புலிக்கட்டம்’ கதையிலேயே அந்த எல்லைமீறலுக்கான மெல்லிய தடயம் இருப்பதைக் காணலாம். அந்நிலமும் மக்களும் யதார்த்தத்தில் நிலைகொள்கையில், எறும்புகள் வேறு ஒரு மாயவெளியிலும் சென்றுவிடக்கூடியவையாக உள்ளன. அந்தப் புனைவுக்கூறு வளர்ந்து உருவான ஓர் அழகியல்வெளி, கோணங்கி, எஸ்.ராமகிருஷ்ணன் ஆகிய இருவருடைய புனைவுகளிலும் உருவாகியது. கோணங்கி, ‘மதினிமார்கள் கதை’ உருவாக்கும் யதார்த்தக் களத்திலிருந்து ‘கருப்பன் போன பாதை’ போன்ற மாயம் கலந்த நிலவெளி நோக்கிச் சென்றார். எஸ்.ராமகிருஷ்ணனின் இந்தப் பாதைமாற்றத்தை அறிவித்த தொகுதி ‘தாவரங்களின் உரையாடல்’.
‘தாவரங்களின் உரையாடல்’, இங்கிலாந்து ஆய்வாளரான ராபர்ட்சன் தாவரங்கள் தங்களுக்குள் உரையாடிக்கொள்வதை, அவற்றுக்கிடையேயான ரகசிய உறவை ஆராய்வதற்காகக் காடுகளில் அலைவதன் சித்திரம். அந்தக் காடு, சொல்லில் உருவாகி எழுவது. எஸ்.ராமகிருஷ்ணனின் அடிப்படையான கதைநிலத்திற்குச் சம்பந்தமில்லாத ஒரு கனவு என நிலைகொள்வது. இத்தகைய ஒரு பசுமைக்காடு அவருடைய புனைவுலகில் எழுந்தபோது, அதற்கேற்ப மனிதர்களும் கருத்துகளும் கனவுத்தன்மைகொள்கின்றன. முந்தைய கதையுலகில் இருந்த ‘அழிந்துகொண்டே இருத்தல்’, ‘தாக்குப்பிடித்தல்’, ‘விட்டுச் செல்லுதல்’ எனும் மூன்று வாழ்க்கைக் கூறுகளுக்குப் பதிலாக, இயற்கையின் காலவெளியின் அறியமுடியாத புதிர்களைப் பற்றிய மீபொருண்மைக் கருத்துகளை நோக்கி அவருடைய கதையுலகம் நகர்ந்தது.
எஸ்.ராமகிருஷ்ணனின் இந்தக் காலகட்டத்தின் முன்னுதாரணமான கதையாக ‘பதினெட்டாம் நூற்றாண்டின் மழை’யைச் சொல்லலாம். கேரளக் காடுகளில் வசித்த முதுவர் இன மக்களை கிறிஸ்தவ மதத்திற்கு மாற்றுவதற்கு, 18-ம் நூற்றாண்டில் வலேசா அங்கே பெய்துகொண்டே இருக்கும் மழையால்தான் தோற்கடிக்கப்படுகிறான். அந்த மழையில் முளைத்தவர்கள்போலிருக்கும் அந்த மக்களிடம் சொல்ல அவனிடம் ஏதும் எஞ்சியிருக்கவில்லை. மழைக்காடுகளைப் பற்றிய மாயத்தன்மைகொண்ட சொற்றொடர்கள் வழியாக அந்தக் கதையை உருவாக்குகிறார் எஸ்.ராமகிருஷ்ணன்.
இக்கதையில் சொல்லினூடாக முற்றிலும் கற்பனையான ஒரு நிலவெளியை உருவாக்கிக்கொள்ளும் முயற்சியையே முதன்மையாகக் காணமுடிகிறது. வெயில் வெறித்துக்கிடக்கும் கோவில்பட்டிப் பொட்டலில் நின்றிருக்கும் ஆடு கனவு காணும் பசும்வெளி அது என எனக்குப் பட்டிருக்கிறது. வரலாறு பல மடிப்புகளாகச் செறிந்த, தொடுந்தோறும் கதைகள் விரிந்து எழும் ஒரு நிலம். அங்கே மழை பெய்துகொண்டேயிருக்கிறது என்பதே மிகமுக்கியமான குறியீடு எனத் தோன்றுகிறது.
எஸ்.ராமகிருஷ்ணன் கதைகளின் மூன்றாவது காலகட்டம் என்பது, அவர் மாயம் கலந்த நிலவெளியிலிருந்து மெள்ள விலகி வண்ணநிலவன், வண்ணதாசன் கதைகளின் ஈரம் மிகுந்த உளநிலம் நோக்கிச் செல்வது. வறண்ட நெல்லையின் அத்தனை எழுத்தாளர்களுக்கும் ஈரமான நெல்லையை நோக்கிய ஓர் ஏக்கப்பார்வை உண்டு. அவர்களின் புனைவுலகில் அவர்கள் அந்த நிலத்திற்குச் சென்றுவந்த தடையமாக அமையும் கதைகளைக் காணலாம். உதாரணமாக, நான்கு கதைகளை ஒரேவகையானவை என நான் மதிப்பிடுகிறேன். வண்ணதாசனின் ‘போய்க்கொண்டிருப் பவள்’, ச.தமிழ்ச்செல்வனின் ‘வெயிலோடு போய்’, கோணங்கியின் ‘கம்மங்கருது’ மற்றும் எஸ்.ராமகிருஷ்ணனின் ‘போய்க்கொண்டிருப்பவர்கள்’ நான்குமே இழந்த காதலின் துயரத்தைச் சொல்பவை. ஒரே உளநிலையின் நான்கு கோணங்கள்.
எஸ்.ராமகிருஷ்ணனின் கதையின் தலைப்பே வண்ணதாசனின் கதைக்கு மிக நெருக்கமாக இருப்பதைக் காணலாம். அந்தக் கதையின் கட்டமைப்பும் மானுடரும்கூட வண்ணதாசனுக்கு அணுக்கமானவர்கள். இன்னொருவனுடன் மணமாகி அவனுடன் ஊர்விட்டுச் செல்லும் நாளில், தன் பிரியத்திற்குரியவனை வந்து பார்க்கிறாள் கதைநாயகி. “நான் என்ன செய்ய?” என்று கேட்டு உள்ளம் உடைய அழுகிறாள். அழுகையினூடாக வாழ்க்கையின் அந்த மாற்றமுடியாமையை எப்படியோ கடந்துசென்றுவிடுகிறாள். ஏறத்தாழ இந்தவகையான கதைகளை வண்ணநிலவனின் புனைவுலகில் மீண்டும் மீண்டும் வாசிக்கிறோம்.
இந்த மூன்றாவது வகைக் கதைகளையே அவர் அடுத்த காலகட்டத்தில் மிகுதியாக எழுதியிருக்கிறார். வலுவான உணர்ச்சிக்களம்கொண்ட படைப்புக்கள். வண்ணநிலவன், வண்ணதாசன் இருவருடைய கதைசொல்லும் மொழிகளும் ஆசிரியரின் குரல் நேரடியாக ஒலிப்பவை. வண்ணநிலவன் நேரடியான நெகிழ்ச்சியையும் வண்ணதாசன் ஓவியருக்குரிய காட்சிநுட்பத்தையும் கொண்டிருக்கிறார்கள். எஸ்.ராமகிருஷ்ணனின் மொழி, பூமணியிடமிருந்து அதிகம் விலகிவிடாத புறவயமான யதார்த்த நடைகொண்டது. நேரடியான அறிக்கையிடும் பாவனை அதிலுண்டு. அது தீவிரமான துயரங்களைக்கூட ஒட்டாதபடிச் சொல்லி நிறுவுகையில் மட்டும் வெற்றிகரமாகச் செயல்படுகிறது.
எஸ்.ராமகிருஷ்ணன் பின்னாளில் எழுதிக்கொண்டிருக்கும் கணிசமான கதைகள், வண்ணநிலவன் – வண்ணதாசனின் உலகத்திற்கு அணுக்கமானவையாக உள்ளன. கனிவையும் ஈரத்தையும் வெவ்வேறு கதைக்களங்கள் வழியாகத் தேடிக் கண்டடையும் படைப்புக்கள் அவை. அவற்றினூடாகவே அவர் பெருவாரியான வாசகர்களைச் சென்றுசேர்ந்திருக்கிறார்.
எஸ்.ராமகிருஷ்ணனின் இன்றைய சிறுகதைகளை, பொதுவாக மேலே சொன்ன மூன்று பரிணாமக் காலகட்டங்களில் ஏதேனும் ஒன்றைச் சேர்ந்தவை என்றோ மூன்று கூறுகளின் வெவ்வேறு கலவையால் உருவானவை என்றோ வகுத்துக்கொள்ளலாம். அவருடைய புனைவு உலகினூடாக அவர் உருவாகி வந்த பாதையைப் புரிந்துகொள்ள இந்தப் பகுப்பு மிக உதவிகரமானது. அவருடைய எந்த ஒரு படைப்பையும் இம்மூன்று வண்ணங்களில் எவை ஓங்கி, எவை அழுந்தி, எவ்வண்ணம் உருவாகியிருக்கின்றன என்று வரையறை செய்துகொள்ள முடியும். எந்த ஒரு படைப்பாளியையும் இவ்வண்ணம் அறுதியாக வரையறை செய்துவிடமுடியாதுதான். வரையறை என்பது ஒரு தொடக்கம் மட்டுமே. திறனாய்வு அணுகுமுறையின் முதல் தேவை அது. அதை உருவாக்கியதுமே நுட்பமாகக் கலைத்துக் கலைத்து மேலே சென்றுதான் மேலும் அவ்வாசிரியரை அந்தரங்கமாகக் கண்டடைய முடியும்.
எஸ்.ராமகிருஷ்ணனின் ஆக்கங்களை மேலே சொன்ன அழகியல் வகைமைக்குள் நிறுத்திப் பார்க்கையில் உருவாகும் தெளிவுகள் சில உண்டு. அவருடைய முதன்மையான நாவலான ‘நெடுங்குருதி’ அவர் நன்கறிந்த, அவர் எப்போதும் எழுதிய வெயில்வெளியின் மக்களைப் பற்றியது. அவர்களின் வாழ்க்கைப் போராட்டம் ஒருபக்கம், ஒட்டுமொத்தமாக ஒரு வரலாறாக அதைப் பார்க்கையில் உருவாகும் தத்துவார்த்தமான வெறுமை இன்னொரு பக்கம் என அந்நாவல் விரிகிறது. ஆனால், கறாரான ஒரு யதார்த்தவாத நாவலாக உருவாகியிருக்க வேண்டிய அப்படைப்பின் ஒரு நுனி மாயங்களுக்குள் சென்று, பிறிதொரு அழகியலை அடைகிறது. நிலமும் மனிதர்களும் யதார்த்தமாக இருக்க, நிகழ்வுகள் கனவுச்சாயலைப் பூசிக்கொண்டிருக்கின்றன.
‘நெடுங்குருதி’யை மையத்தில் நிறுத்தினால், அதற்கு வலப்பக்கமாக ‘உறுபசி’, ‘சஞ்சாரம்’ போன்ற நாவல்களை நிறுத்தலாம். அவை கறாரான யதார்த்தச் சித்திரிப்புகள். அவற்றில், பூமணியிலிருந்து உருவாகிவந்த ஒரு ‘கோவில்பட்டித்தனம்’ உண்டு. பூமணியின் ‘கசிவு’ எனும் சிறுகதையில், வயல்வெளியில் வேலைசெய்துகொண்டிருந்த பெண்ணின் மூன்று வயதுப்பையனின் கழுத்தைச் சீவி எறிந்து, தாயைக் கற்பழித்து, கொன்று அவள் நகையுடன் அங்கிருந்து சென்ற ஒருவர் அந்நிகழ்வை மிகக் குறைவான சொற்களில் இயல்பாகச் சொல்லிச் செல்லும் ஒரு சித்திரம் உண்டு. அந்த அம்சம் இக்கதைகளில் உண்டு. தீவிரமான வாழ்க்கை நிகழ்வுகள் எளிய அறிக்கைபோலச் சொல்லப்படுகின்றன. மனிதர்களைக் கைவிட்டுவிட்ட மனிதர்களாலும் கைவிடப்பட்ட நிலத்தின் வெறுமை.
‘நெடுங்குருதி’க்கு இடப்பக்கமாக நிறுத்தப்படவேண்டிய நாவல்கள் என ‘யாமம்’, ‘உப பாண்டவம்’ இரண்டையும் குறிப்பிடலாம். அவை கற்பனை நிலங்களில் நிகழ்பவை. ‘உப பாண்டவ’த்தில் அந்நிலத்திற்கு செவிவழிக் கதைகளின் வழியாகவே சென்றுசேர்கிறோம். ‘யாமம்’, அந்நிலத்தை நறுமணத்தைத் தொடர்ந்துசென்று எழுதப்பட்ட வரலாற்றினூடாகக் கட்டமைத்துக்கொள்கிறது. அங்கே நிகழ்வன அனைத்துமே ஆசிரியரின் தன்னுணர்வால் கட்டமைக்கப்பட்டவை. ஆகவே, யதார்த்தத்தின் இயல்பான பொருளின்மைகொண்டவை அல்ல. தத்துவார்த்தமான குறியீட்டு நிகழ்வுகள் அவை.
இம்மூன்று தளங்களிலும் எஸ்.ராமகிருஷ்ணனை வகுத்துக் கொள்கையில், அவற்றில் வெளிப்படும் அவருடைய பார்வையையும் அடையாளம் காணமுடிகிறது. வலப்பக்கம் இருக்கும் படைப்புகளை உருவாக்கிய எஸ்.ராமகிருஷ்ணன், தமிழகத்தின் முற்போக்கு இலக்கியத்தின் மரபில் வருபவர். இடதுசாரிக் கருத்துகள் அவருடைய கதைகளில் நேரடியாக வருவதில்லை என்றாலும், அவற்றின் பார்வைக்கோணம் என்பது இங்கே இடதுசாரிச் சிந்தனைகளால் உருவாக்கப்பட்டதுதான். நிலத்தை நம்பி வாழ்ந்து, நிலத்தால் கைவிடப்படும் மக்களைப் பொருளியல் அமைப்பின், சமூக அமைப்பின் அகதிகளாகப் பார்க்கும் பார்வை என அதைச் சொல்லலாம். முற்போக்கு எழுத்தின் சீற்றம் எஸ்.ராமகிருஷ்ணனின் புனைவுலகில் இல்லை. அது, கடுமையான துயரத்தை அறிக்கையெனச் சொல்லிச் செல்வதில், நேரடியான நெகிழ்வில் தன் சார்பை வெளிப்படுத்துகிறது.
இடப்பக்கம் இருக்கும் படைப்புகளின் ஆசிரியரான எஸ்.ராமகிருஷ்ணன், தத்துவத் தேடலும் அதை வெளிப்படுத்து வதற்குரிய ஒரு மீபொருண்மை சார்ந்த குறியீட்டுத்தளமும் கொண்டவர். அந்த மீபொருண்மை, பெரும்பாலும் அவருடைய விரிவான வாசிப்புகளிலிருந்தே அவருக்குக் கிடைக்கிறது. இந்திய மரபிலிருந்து உருவான மீபொருண்மை உருவகங்கள், ‘உப பாண்டவம்’ நாவலுக்கு வெளியே குறைவாகவே உள்ளன. ‘யாமம்’ பெரும்பாலும் ஐரோப்பிய வரலாறுகளிலிருந்து பெறப்பட்ட கவியுருவகம் கொண்டது. ‘பெரிய பாதக்காரன்’ போன்ற உருவகங்கள் நேரடியாகவே லத்தீன் அமெரிக்கச் சாயல்கொண்டவை.
‘உப பாண்டவ’த்தில் வாயில் அர்ஜுனனின் அம்புகள் செறிந்து பாய, நாவை இழந்து ஓசையில்லா மலாகிவிட்ட ஏகலைவனின் நாய், மரபிலிருந்து எஸ்.ராமகிருஷ்ணன் எடுத்த முக்கியமான மீபொருண்மை உருவகம். ‘உப பாண்டவ’மே பௌராணிக மரபைவிட, கரிசலின் வாய்மொழியில் நிகழும் மகாபாரதக் கதைகள், கூத்தில் திகழும் கதைகளிலிருந்து எடுக்கப்பட்ட நாட்டார் மரபைச் சேர்ந்ததுதான். அதுகொள்ளும் மீறல்கள் அனைத்துக்கும் நாட்டார் மரபிலேயே வழிகள் உள்ளன.
நாயக்கர் ஆட்சிக் காலத்தில் தெலுங்கர்கள் குடியேறிய அனைத்து ஊர்களிலும், மகாபாரத மண்டபங்கள் உருவாக்கப்பட்டு மகாபாரதக் கதைசொல்லலும் கூத்தும் நிகழ ஒழுங்கு செய்யப்பட்டது. கரிசல் நிலத்திற்கு என்றே ஒரு நாட்டார் மகாபாரத மரபு உருவாக அது வழிவகுத்தது. உதாரணமாக, தொடைதுள்ளி தொடைதுள்ளி துரியோதனனும் கெட்டான், முடிசுழிச்சி முடிசுழிச்சி பாஞ்சாலியும் கெட்டா’ என்ற சொலவடையை நான் கோவில்பட்டி அருகே ஓர் இடையர் முதுமகள் சொல்லிக் கேட்டேன். அதற்கு என்ன பொருள் என்று கேட்டேன், ‘தன் தொடையை ஆட்டிக்கொண்டே இருப்பது துரியோதனனின் வழக்கமாம். தலைமுடியை கையால் சுருட்டிக்கொண்டே இருப்பது திரௌபதியின் வழக்கமாம். இரண்டும் அவலட்சணங்கள்’ என்றார். அவ்விருசெயல்களும் குறியீடுகள். பெரும்பாலும் கூத்திலிருந்து வந்தவை. ஆனால், இப்படி ஒரு கதையை நான் வேறெங்கும் கேட்டதில்லை. அந்த நாட்டார் புராண மகாபாரத மரபின் இலக்கியப் பதிவாக இன்றிருப்பது ‘உப பாண்டவம்’ மட்டும்தான்.
எஸ்.ராமகிருஷ்ணனின் முற்போக்குச் சமூகநோக்குக்கும் அவருடைய மீபொருண்மை நோக்குக்கும் இடையேயான முரண்பாடுதான் அவருடைய புனைவுலகில் வாசகனைக் குழப்பக்கூடியது. உண்மையில், அவ்விரு சரடுகளுக்கு இடையே
யான முரணியக்கம் வழியாகவே அவர் உருவாகி வந்திருக்கிறார். அவருடைய யதார்த்தக் கதைகளில் வெளிப்படும் முற்போக்கு நோக்கில், மனிதனின் உள்ளார்ந்த நல்லியல்பு மேல் நம்பிக்கைகொண்டவராகவும், மனிதன் அனைத்து எதிர்விசைகளைக் கடந்து எழுந்து நிற்க இயல்பவன் என்று எண்ணுபவராகவும் அவர் தெரிகிறார். மீபொருண்மை நோக்கு ஓங்கிய மிகைபுனைவுக் கதைகளில், இயற்கையின் காலத்தின் பிரமாண்டத்தின் முன்பு எந்தப் பொருளும் இல்லாத ஒன்றாக மானுட வாழ்க்கையும் ஒட்டுமொத்த வரலாறும் மாறுவதை முன்வைக்கிறார்.
‘தாவரங்களின் உரையாடல்’ ஓர் உதாரணம். அகாலத்தில் நின்றிருக்கும் மரங்கள், மனிதன் அறியமுடியாத அர்த்தங்கள்கொண்டவை. மனிதன் அவற்றிலிருந்து எளிமையான ஓர் அர்த்தத்தை மட்டுமே எடுத்துக்கொள்கிறான். அறிதலின் எல்லை மட்டுமல்ல, மானுட இருப்பின் எல்லையும் அவ்வளவுதான். ‘பதினெட்டாம் நூற்றாண்டின் மழை’யும் அதே தரிசனம் நோக்கியே செல்கிறது. பழங்குடிகள் மரங்களைப்போல அகாலத்தில் இயற்கையின் மறைபொருளின் ஒரு பகுதியாக வாழ்கிறார்கள். ‘நாகரிகம்’ அந்த அர்த்தத்தை அறியமுடியாமல் தன் அர்த்தத்தை அதன்மேல் சுமத்துகிறது.
‘யாமம்’ எஸ்.ராமகிருஷ்ணனின் மீபொருண்மை நோக்கின் சிறந்த வெளிப்பாடு. ‘யாமம் - எஸ்.ராமகிருஷ்ணின் நவீன மீபொருண்மை உலகு’ என்ற தலைப்பில் அதை நான் விரிவாக எழுதியிருக்கிறேன். மனித அகம், வாழ்க்கையின் அலைகளுக்கு அப்பால், ஓர் ஆழத்தில் வாழ்க்கையின் அர்த்தம் நோக்கித் தவிக்கிறது. அதைத்தான் நாவல், மனித அகத்தின் இரவு என்கிறது. “யாவரின் சுகதுக்கங்களும் அறிந்த இரவு, ஒரு ரகசிய நதியைப்போல முடிவற்று எல்லாப் பக்கங்களிலும் ஓடிக்கொண்டே இருந்தது. அதன் சுகந்தம் எப்போதும்போல உலகமெங்கும் நிரம்பியிருந்தது” என முடிகிறது ‘யாமம்’. அதைப் பற்றிய என் கட்டுரையில் ‘மனிதர்களை அலைக்கழிக்கும், ஆட்கொள்ளும், வழிநடத்தும், வெறுக்கவும் விரும்பவும்வைக்கும் அறிய முடியாமையைப் பற்றிய நாவல் ‘யாமம்’ என்று வரையறுத்திருந்தேன்.
‑இவ்விரு பார்வைகளும் முயங்கியும் மறுத்தும் உருவாகும் ஓர் உலகமே எஸ்.ராமகிருஷ்ணனின் படைப்புலகம். ஒன்று அவருடைய பகல், இன்னொன்று இரவு. ‘புலிக்கட்டம்’ பகல் என்றால், ‘பதினெட்டாம் நூற்றாண்டின் மழை’ இரவு. ‘சஞ்சாரம்’ பகல் என்றால், ‘யாமம்’ இரவு.
-------------------------------------------------
- ஜெயமோகன்,
‘‘சஞ்சாரம்’ நாவலுக்காக 2018-ம் ஆண்டின் ‘சாகித்ய அகாடமி விருது’ பெறும் எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களுக்கு விகடன் தடம் இதழின் வாழ்த்துகள்.
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
