குறுந்தொகைப் பாடல்

`யாயும் ஞாயும் யாராகியரோ
எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்
யானும் நீயும் எவ்வழி அறிதும்
செம்புலப் பெயல்நீர் போல
அன்புடை நெஞ்சம் தாங்கலந் தனவே!’
----------
`உன் தாயும் என் தாயும் யார்யாரோ! உன் தந்தையும் என் தந்தையும் உறவினர்கள் அல்லர்! நானும் நீயும் எப்படி அறிந்துகொண்டோம்! ஆனால், நம் அன்பு மனங்கள் செம்மண்ணில் பெய்த மழைநீர்போல் கலந்தனவே! இது எப்படி?’ என வியக்கிறான் காதலன். இந்த அகப்பாடலை எழுதியவர் பெயர் தெரியவில்லை. அதனால் இதில் வரும் அற்புதமான உவமையையே பெயராக்கி அவரைக் குறிப்பிடுகிறது நம் சங்கத் தொகைநூல். செம்புலப் பெயல் நீரார் என அவருக்குப் பட்டமளித்துச் சிறப்பிக்கிறது சங்கப் புதையல். தங்கப் புதையல் களவுபோகும். காலத்தால் கரைந்து போகும். ஆனால், நம் சங்கப் புதையலோ களவைப் பற்றியும் கற்பைப் பற்றியும் பேசும். ஆனால், களவு போகாது. காலத்தால் கரையாது.

எழுதியவர் : (5-Feb-19, 9:04 pm)
பார்வை : 37

மேலே