குலம்விளக்கி மகப்பயந்து தந்துன் அடிபணிந்து பேணும் மனைவி - மனை மாட்சி, தருமதீபிகை 58

நேரிசை வெண்பா

குடியை விளக்கிக் குலம்விளக்கி இன்பம்
படிய மகப்பயந்து தந்துன் - அடிபணிந்து
பேணும் மனைவியைநீ பேணா(து) அயர்ந்தாயேல்
காணும் கதியென்ன காண். 58

- மனை மாட்சி, தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்

பொருளுரை: நீ பிறந்த குடியை விளக்கி, உன் குலத்தைத் துலக்கி, இனிய மக்களை ஈன்று இன்புறத் தந்து, நாளும் உனது பாதம் பணிந்து பேணுகின்ற காதலியை ஆதரவோடு நீ பாதுகாவாது ஒழியின், அடையும் கதி யாதோ? என்கிறார் கவிராஜ பண்டிதர். இப்பாடல் மனையாள் அருளும் பாக்கியங்களைப் பகர்ந்த படியிது.

ஆண் மகனாய்த் தோன்றிய ஒருவன் தான் பிறந்த குடி முதலியவற்றை உயர்த்தி ஒளிசெய்து நிற்றற்கு உயிர்த்துணையாய் இருப்பது மனைவியேயாதலின் அவளுடைய உதவிநிலைகளை இங்ஙனம் உணர்த்த நேர்ந்தது.

மனைவியால் மனைவாழ்க்கை இனிமை அடைகின்றது; மக்கட்பேறு உண்டாகின்றது; அதனால் வழி வழியே குடி வளர்ந்து குலம் விளங்குகின்றது; அதனால், உலகம் அதனை வியந்து புகழ்கின்றது; இங்ஙனம் எல்லா நலங்களுக்கும் மூலமுதலாயுள்ளவளை முதன்மையாக உணர்ந்து கொள்ளவும் சொல்கிறார்.

மனைவி இல்லையானால் உன் குடி விளங்காது; பிள்ளைகள் கிடையாது; பிழைப்பும் இல்லை; இவ்வெல்லாவற்றையும் எண்ணி யுணர்ந்து அந்நல்லாளைப் போற்றுக என்பது குறிப்பு.

அடி பணிந்து என்றது அன்பு கனிந்த பணிவுடைமையைப் புலப்படுத்தி நின்றது. இங்ஙனம் பல வகையிலும் நலம் மிகச்செய்து, உன்னையும் பணிந்து பாதுகாத்துவரும் குலமனைவியை நன்றி யறிவோடு பேணி வருக; பேணாது ஒழியின் கீ கதி காணாது அழிவாய்; அங்ஙனம் அழிவுறாது அளிபுரிக என்கிறார்,

அயர்ந்தால் காணும் கதி என்ன? காண்! என்று கண் எதிரே எடுத்துக் காட்டியது கதி கண்டு உய்ய என்கிறார் கவிராஜ பண்டிதர்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (7-Feb-19, 8:30 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 39

சிறந்த கட்டுரைகள்

மேலே