உள்ளமுருகி உதவி புரியார் அருகி இழிவர் அளறு - பெற்றாரைப் பேணல், தருமதீபிகை 48

நேரிசை வெண்பா

பிள்ளையெனப் பெற்றுப் பெருமைசெய்து விட்டவரை
உள்ளநாள் எல்லாம் உரிமையாய் - உள்ளம்
உருகி வணங்கி உதவி புரியார்
அருகி இழிவர் அளறு. 48

- பெற்றாரைப் பேணல், தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்

பொருளுரை:

உள்ள நாள் என்றது வாழ்நாள் முழுவதும் என்றவாறு. உரிமையுடன் பெற்றுப் பெருமை மிகச் செய்து பேணியருளிய தாய் தந்தையரை என்றும் உருகி வணங்கி உபசரித்து வரும் பிள்ளைகள் உயர்நிலை யடைவர்; அல்லாதார் பழி பாவங்களை யுடையராய் அழிவார் என்பதாம்.

தனக்கு இனிய பலன்கள் தரும் என்று கருதி ஓர் உழவன் நல்ல கனிமரங்களை வைத்துப் பக்குவமாகப் பாதுகாத்து வளர்த்து வந்தான்; அவை வளர்ந்து கவையும் கொம்புகளுமாய்ப் பெருகி நின்றனவேயன்றி ஒரு பலனும் தரவில்லை;

இனிய கனிகள் அருளும் என நாளும் எதிர்பார்த்து நின்ற அவன் உள்ளம் கடுத்து அவற்றை எப்படி எள்ளி விடுவானோ, அப்படியே ஈன்றவர்க்கு உதவாப் பிள்ளைகள் எள்ளப்பட்டு இழிவாய் ஒழிவார் எனப்படுகிறது. பெற்றோரைப் பேணாமை பேரிழவாகும்.

அறுசீர் விருத்தம்
(விளம் மா தேமா அரையடிக்கு)
(விளம் வருமிடத்தில் மாங்காய்ச்சீர் வரலாம்)

வைத்தவர் உளமு வப்ப
..மலர்நிழல் கனியீ யாத
அத்தருத் தன்னை வெட்டி
..அழலிடு மாபோல் ஈன்று
கைத்தலத் தேந்திக் காத்த
..காதற்றாய் பிதாவை யோம்பாப்
பித்தரை அத்தன் கொன்று
..பெருநர கழற்சேர்ப் பானே. 4 - தாய் தந்தையரை வணங்கல்
மாயூரம் வேதநாயகம் பிள்ளை பாடல்

அன்னை தந்தையரை ஆதரியாதவரை முன்னவனும் வெறுப்பன்; அன்னவரும் இன்னலுழந்து இழிவர் என்பது இதனால் அறியலாகும். தேவகோபமும் பாபமும் படியாதபடி படிந்து ஒழுகுக என்பதாம்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (7-Feb-19, 8:27 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 44

மேலே