மென்மையானவள்

" எப்படி இருக்க பாட்டி? ",என்றவாறு வந்தான் மகேஷ்.

" வாடா பேரான்டி. நான் நல்லா இருக்கேன். அப்பா அம்மா எல்லாரும் சௌக்கியமா? ", என்றார் பாப்பம்மா பாட்டி.

" எல்லாரும் சௌக்கியம் பாட்டி. ", என்றான் மகேஷ்.

" என்னடா கோயில் கொடை திருவிழாவிற்கு கூட வராத நீ இப்போ வந்திருக்க? ஊர்ல எதாவது பிரச்சனையா? ", என்று பாப்பம்மா பாட்டி கேட்க, " அது ஒன்னும் இல்ல பாட்டி. இங்க கொஞ்சநாள் நிம்மதியாக வாழலாம் என்று வந்தேன். ",என்றான் மகேஷ்.

பேரனை அமர வைத்து உணவு பரிமாறிக் கொண்டிருந்தார் பாப்பம்மா பாட்டி.
அவருடைய கைபேசி அலறியது.
கைபேசி கையிலெடுத்து பார்த்தார்.

மருமகள் காயத்ரி தான் அழைப்பது. காயத்ரி மகேஷின் தாய்.
பேரனை விட்டு சிறிது தூரம் வந்து அழைப்பை ஏற்று பேச தொடங்கினார்.

" ஹலோ! "

" அத்த நான் காயத்ரி பேசுறேன். "

" ம்ம். சொல்லுமா. "

" உங்க பேரன் அங்க வந்திருக்கானா? "

" ஆமா. வந்திருக்கான். "

" கல்யாண பேச்சு எடுத்தாலே எரிந்து விழுகிறான். இப்போ சண்டை போட்டு அங்க வந்திருக்கான். "

" அப்படியா விஷயம்! சரி நான் பார்த்துக்கிறேன் மா. "

அழைப்பை துண்டித்துவிட்டு பேரன் அருகே வந்தார்.

" என்ன பாட்டி? போன்ல யாரு? ", என்றான் மகேஷ்.

" உங்க அம்மா தான் டா பேசுனாங்க. ",என்று பாப்பம்மா பாட்டி கூற, " இங்கெயாவது நிம்மதியா இருக்கலாம்னு வந்தேன். அதையும் கெடுத்துட்டாங்களா? ",என்று கோபப்பட்டான் மகேஷ்.

" மகேஷ் உன் இஷ்டம் போல நீ இங்க இருக்கலாம். உன் இஷ்டத்திற்கு மாறாக எதுவும் நடக்காது. ",என்றார் பாப்பம்மா பாட்டி.

மகேஷ் தூங்க சென்றான்.

மறுநாள் காலை விடிந்தது.

மகேஷ் படுக்கையில் இருந்து எழுந்து காலைக்கடன் முடித்து குளித்து சிற்றுண்டி அருந்திவிட்டு வந்து அமர்ந்தான்.

தென்றல் இதமாகத் தீண்டியது.
ஜல் ஜல் கொலுசின் ஓசை இனிமையாய் காதில் ஒலிக்க, யாரோ தன்னை பார்ப்பது போல் தோன்ற திரும்பி பார்த்தான் மகேஷ்.

ஜன்னல் மூடிக்கொண்டது.
யாரோ ஓடுவது போல் கொலுசு சத்தம் கேட்டது.

" யாரது ஓடுறது? "

பதில் இல்லை.

வாசல் வரை சென்று பார்த்தான் மகேஷ்.
யாரையும் காணவில்லை.
பாட்டியைத் தேடினான்.
அவங்க கொல்லைப்புறத்தில் தேங்காயை எண்ணிக் கொண்டு இருந்தாங்க.

" என்ன பண்றீங்க பாட்டி? ", என்றான் மகேஷ்.

" இந்த தேங்காய் எல்லாம் எண்ணிட்டு இருக்கேன்டா. இன்னைக்கு தேங்காய் லோடு ஏற்ற லாரி வருதுடா. ", என்றாங்க பாப்பம்மா பாட்டி.

" அவ்வளவு தான நான் பார்த்துக்கிறேன் பாட்டி. நீங்க போய் ரெஸ்ட் எடுங்க. ",என்று கூறி மகேஷ் வேலையில் இறங்கிறான்.

கொல்லைப்புறத்தை ஒட்டிய தென்னந்தோப்பு வழியாக லாரி வந்தது.
தேங்காய் லோடு ஏற்றி முடிய நேரம் மத்தியானத்தை கடந்து இருந்தது.

முகம், கால் கழுவி விட்டு வீட்டினுள்ளே சென்றான் மகேஷ்.
சாப்பாடு தயாராக இருந்தது.

மகேஷிற்கும் பசியாக இருந்ததால் சாப்பிட அமர்ந்தான்.
உணவு பரிமாறப்பட்டது.
மகேஷ் சாப்பிடத் தொடங்கினான்.

சற்று வேகமாக சாப்பிட்டான் பசி மிகுதியால்.
அவன் பசியறிந்து உணவு பரிமாறினாற் போல் இருந்தது.
மகேஷிற்கு வேகமாக சாப்பிட்ட காரணத்தால் சிரசிற்கேறியது உணவு.

அப்போது அருகில் இருந்த குவளை நீரெடுத்து பருகினான்.
அவன் கண்கள் மூடி இருந்தன.
ஒரு கை தலையில் தட்டியது.
குவளை நீரை கீழே வைத்துவிட்டு அந்தக் கையை பற்றினான்.

அந்த கை மிகவும் மென்மையாக இருந்தது.

" என்ன பாட்டி உங்க கை மிக மென்மையாக இருக்கிறதே! ",என்றான் மகேஷ்.

" டேய்! அது என் கை இல்லடா. கண்களைத் திறந்து நல்லா பருடா. என் பேத்தி கை. ",என்றாங்க பாப்பம்மா பாட்டி.

கண்களைத் திறந்து பார்த்தான் மகேஷ்.
ஒரு அழகான பெண்ணின் கையைத் தான் பற்றி இருப்பதை உணர்ந்தான்.

கண்கள் கலந்தன.
அங்கு காதல் பிறந்தது அவர்களை அறியாமலே.

" டேய் பேரான்டி! பார்த்தது போதும், சாப்பிடுடா. ",என்றாங்க பாப்பம்மா பாட்டி.

சுயநினைவு வந்த கண்கள் பார்வையை விலக்கிக் கொள்ள, சாப்பிட்டு முடித்து கைகளைக் கழுவச் சென்றான் மகேஷ்.

" பாட்டி நான் கிளம்புறேன். ",என்றபடி சென்றாள் அந்த பெண்.

கைகளை கழுவி விட்டு வந்த மகேஷ், தன் பாட்டியிடம் அந்த பெண் குறித்து விசாரித்தான்.

" ஆமா பாட்டி! இப்படி ஒரு பேத்தி இருப்பதாக நீ சொல்லவே இல்லையே! ",என்றான் மகேஷ்.

" சொல்லி இருந்தால் கட்டிக்கிடுவியாக்கும்!.
கல்யாணம் பிடிக்காம இங்க வந்தவன் தானே நீ. ",என்றாங்க பாப்பம்மா பாட்டி.

" இப்படியொரு பெண் கிடைத்தால் யார் தான் கட்டிக்க மாட்டாங்க. ", என்று மனதில் நினைத்த மகேஷ் அவள் பெயரைக் கேட்டான்.

" அவள் பெயரு முத்து.
உங்கப்பன் அதான்டா என் மகனோட பள்ளிக்கூட நண்பன் பலவேசத்தோட பொண்ணு.
தினமும் கொஞ்ச நேரமாவது இந்த பாட்டியை பார்க்க வந்திடுவா. ",என்று சொல்லிட்டு பாட்டி வீட்டினுள் போனாங்க.

அன்றைய பொழுது ஒரு வழியாக கடந்தது.

மறுநாள் காலை தன் வேலைகளை முடித்துவிட்டு முத்து வருகைக்காக காத்திருந்தான் மகேஷ்.
அவள் வருவதாகத் தெரியவில்லை.

அப்படியே இரண்டு தினங்கள் கழிந்தன.

மீண்டும் அவளைக் காண மகேஷின் விழிகள் ஏங்கின.

அந்த கிராமத்தின் தெருக்களை வலம் வரத் தொடங்கினான் மகேஷ்.

ஒரு தெருவில் செல்லும் போது, ஒருவர் வந்து, " தம்பி, நில்லுங்க. நீங்க வெங்கட்ராமனோட மகன் தான? ",என்று விசாரித்தார்.

" ஆமா, நீங்க? ", என்றான் மகேஷ்.

" நான் உங்க அப்பாவோட பள்ளி நண்பன் பலவேசம். அப்பா நல்லா இருக்கிறாரா? அவரை பார்த்து ரொம்ப நாட்களாச்சு.
நீங்க ஏன் இங்க வரவே இல்லை தம்பி!. ",என்றார் பலவேசம்.

" அப்பா நல்லா இருங்காங்க அங்கிள்.
நான் படிச்சுட்டு இருந்ததால் இந்தப் பக்கம் வர முடியல. ",என்றான் மகேஷ்.

" சரி வாங்க தம்பி. இதான் என் வீடு. ",என்று அழைத்துக் கொண்டு வீட்டினுள் நுழைந்தவர், " முத்து! ரெண்டு காப்பி கொண்டு வாம்மா. அப்படியே சாப்பாடு தயார் பண்ணிடு. நம்ம வீட்டுக்கு முக்கிய விருந்தாளி வந்திருக்காங்க. ",என்றார்.

சோபாவில் அமர்ந்த பேசிக் கொண்டிருந்தார்கள்.

முத்து காப்பி கொண்டு வந்து கொடுத்துவிட்டுப் போனாள்.

(தொடரும்...)

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (9-Feb-19, 8:13 pm)
பார்வை : 428

மேலே