தகுதியும் வெகுமதியும்
சோதனைகளுக்கு ஏற்றவன்
சாதிக்கக் கூடியவன் தானே..!
தொலைவதற்கு ஏற்றவை
தடம் பதிக்கக் கூடியப் பாதங்கள் தானே..!
பாறையில் விழ ஏற்றவை
போராடி முளைத்துக் காட்டும் விதைகள் தானே..!
சுயம் தீயில் நின்று எரிய ஏற்றது
சுடர் ஒளி தரும் தீபம் தானே..!
அக்னிப் பரீட்சைக்கு ஏற்றவன்
அகிலத்துக்கு தன்னை உணர்த்தக் கூடியவன் தானே..!
அவமானங்களுக்கு ஏற்றவன்
அனைவரின் அண்ணார்ந்தப் பார்வையாகக் கூடியவன் தானே..!
போராட்டங்களுக்கு ஏற்றவன்
போராளி தானே..!
புரிந்து கொண்ட பிரபஞ்சம் நகைக்கிறது
பலரின் புலம்பல்கள் கேட்டு..!
“எனக்கு மட்டும் ஏன் இப்படி? ”
என்ற நம் பலரின் புலம்பல்கள் கேட்டு..!