வலிகளின் மொழி

நிலைக்காமல் போவாயோ
என் வாழ்வில்...
நினைவில்லாமல் போவேனோ
உன் மனதில்...
கண்கள் கண்ட கனவெல்லாம்
கானல் நீராய் கரையுதடி...
காரணமின்றி வரும் கண்ணீரோ
கனலை விடவும் கொதிக்குதடி...

நினைவிருக்கிறதா என்று - நீ
சொல்லிய தேதிகள் ஒவ்வொன்றும்
என் வாழ்வின்
கருப்பு தினமானது...
உன் கண்களை நோக்கிய
என் கண்களின் ஒளியை
இருள் கொண்டு மறைப்பேனோ...
உன் விரல் இடுக்குகளை
நிரப்பிய என் விரல்களை
தழல் கொண்டு எரிப்பேனோ...

நீ சாய்ந்துவிட்டுச் சென்ற
என் தோள்கள்
தாயில்லா பிள்ளைபோல் கதறுதடி...
உன்னை உறங்கவைத்த
என் மடி - இப்போது
உறக்கமில்லாமல் தவிக்குதடி...

உன் மென்மையான
அரவணைப்பு - இப்போது
எனக்கு வெறுமையின்
உச்சத்தை காட்டுதடி...

உன் இதழ் கொண்டு
நான் சுவைத்த தேன்
இப்போது தொண்டைக்குழியில்
விஷம்போல் தேங்குதடி...
நான் உன்னை மறப்பேனென்று
நீ நினைத்த விநாடி
என் காதல்
மரணித்த நேரம்தானடி...

எழுதியவர் : கீர்த்தி (21-Feb-19, 3:24 pm)
சேர்த்தது : Keerthana Velayutham
பார்வை : 186

மேலே