பெற்றாரைப் போற்றும் உறுமகனே வற்றாத ஆழி எழுந்த அமிர்து - மக்கட் பேறு, தருமதீபிகை 69

நேரிசை வெண்பா

பெற்றாரைப் போற்றிப் பிறந்த குடிபேணி
உற்றாரை ஓம்பி உறுமகனே - வற்றாத
ஆழி எழுந்த அமிர்தாவான் அல்லாதான்
பாழில் எழுந்த பழி. 69

- மக்கட் பேறு, தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்

பொருளுரை:

தன்னைப் பெற்ற மாதா பிதாக்களை வணங்கிப் போற்றி, உற்ற குடியை உயரச்செய்து, சுற்றத்தாரை ஆதரித்தருள்பவன் அமிர்தம் போல் இனியனாவான்; அல்லாதவன் வீணே இழிந்து ஒழிவான் என்பதாம்.

பாற்கடலை ஆழி என்றது. குடிக்கு ஆழியும், மகனுக்கு அமிர்தமும் உவமைகளாகித் தகைமைகளை விளக்கின.

குணநலமுடைய குலமகன் எல்லார்க்கும் இனியனாய் இன்பம் மிகச் செய்வானாதலால் அவன் அமிர்தம் என நின்றான்.

பெற்றாரைப் போற்றாமல், பிறந்த குடியைப் பேணாமல், உற்றாரை ஓம்பாமல் ஊனம் உற்றுள்ள ஈன மகனை அல்லாதான் என்றது. பாழ் - வீண். அவன் பிறப்பு பயன் அற்றது என்பதாம்.

சிறந்த பிறவியை அடைந்தும் உரிய கடமைகளைச் செய்யாமையால் அவனுடைய தோற்றம் இங்ஙனம் தூற்றப் பட்டது.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (22-Feb-19, 10:45 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 43

சிறந்த கட்டுரைகள்

மேலே