ஞானஒளி தோய்ந்து கருணை சுரந்து தனதுயிரை ஆய்ந்து வருதல் அழகு - அழகு, தருமதீபிகை 79

நேரிசை வெண்பா

மேனி மினுக்காய் வெளிப்பகட்டாய் மேவிவரல்
ஆனவழ(கு) எல்லாம் அழகல்ல; - ஞானஒளி
தோய்ந்து கருணை சுரந்து தனதுயிரை
ஆய்ந்து வருதல் அழகு. 79

- அழகு, தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்

பொருளுரை:

உடல்களை மினுக்கி ஆரவாரமாய் அலங்கரித்து வெளி வருவன அழகுகள் ஆகாது; உணர்வு சுரந்து அருள் நலம் கனிந்து தனது ஆன்ம நிலையை ஆராய்ந்து வருவதே மனிதனுக்கு இனிய அழகு என்கிறார் கவிராஜ பண்டிதர். இப்பாடலில், உண்மையான அழகின் தன்மை சொல்லப்பட்டிருக்கிறது.

பட்டு உடை வனைதல், மணியணி புனைதல், திலகம் தீட்டல், சவ்வாது தோய்தல், சந்தனம் பூசல், வாசனைத் தைலம் தடவிச் சீப்பிட்டுத் தலை வாரிச் சிங்காரித்தல் முதலிய அலங்காரங்களை மேனி மினுக்கல் என்றது.

தலை எடுப்பாக நிமிர்ந்து நடந்தும், வாகன முதலியன ஊர்ந்தும் எதிரே கண்டவரெவரும் வியந்து கொண்டாடும்படி கோப்பும் கோலமும் காட்டி வருவது வெளிப்பகட்டு என்றது.

கண் மயக்கான இந்த ஆடம்பரங்களெல்லாம் செயற்கை அழகுகள் எனப்படும். செயல் வகையால் நேர்ந்தன செயற்கை ஆகும்.

அவயவ அமைதியும் சமுதாய சோபையும் இயல்பாக வாய்ந்த இனிய உருவப் பொலிவு இயற்கை அழகாம். முன்னதிலும் பின்னது சிறந்தது. இந்த இரண்டும் புறத்தே உடல் அளவில் ஒளிர்வன. வெளியே உருவப் பொலிவான இவ்விரு வகை அழகினும் பெரிதும் உயர்ந்ததாய் உள்ளே உயிரின் கனிவான பேரழகு ஒன்று உள்ளது. அதனை யுடையவரே என்றும் அழியாத விழுமிய அழகாய் ஒளிமிகுந்து விளங்குவர். அதன் நீர்மையும் சீர்மையும் நேரே ஓர்ந்து நிலை தெளிந்து கொள்ள வேண்டும்.

தனது உயிரை ஆய்தல் ஆவது தான் யார் என்று தோய்ந்து உசாவி ஆய்ந்து விசாரித்தல். கண் எதிரே காணுகின்ற கை கால் முதலிய உறுப்புக்களையும் உடம்பையும் என்னுடையன என்று வழங்கி வருதலால் உடையவன் ஒருவன் உள்ளே தனியே உளன் என்பது புலனாம். ஆகவே, தேகமும் தேக சம்பந்தமான போகப் பொருள்களினும் வேறான ஒன்று யாரானும் நேரே அறியாவகை நிலவி நிற்கின்றது. அந்நிலைமையை ஊன்றி உணர்ந்தால் பேனந்த மயமாயுள்ள தனது தலைமை தெளிவாம்.

இந்த ஆன்ம தரிசனம் பொய்யுணர்வு நீங்கி மெய்யுணர்வு ஓங்கிய பொழுதுதான் உதயம் ஆகும். ஞான ஒளி தோய்ந்து, கருணை சுரந்து என்றது இருள் நீங்கி இன்பம் பெருகி நிற்கும் இயல்பு உணர வந்தது.

தனது இனிய உயிர் நிலை தெரியவே எல்லா உயிர்களும் யாவும் தானாயுள்ள உண்மை நிலை புலனாம்: ஆகவே பல்லூழி காலம் பயனிழந்து கிடந்க பழிவழியையும் பரமான்ம நிலையையும் எண்ணியிரங்கி உள்ளம் உருகிக் கண்ணீரும் கம்பலையுமாய் யாண்டும் தண்ணளி புரிந்து ஆன்ம ஒளி தழைத்து விளங்குமாதலால் அருள்நலம் ஞானத்தின் மணமாய் ஈண்டு நவில வந்தது.

ஞான விளக்கு ஏற்றிக் கருணைக் கண்கொண்டு உன் உண்மை நிலையை நீ ஊன்றிப் பார்க்க வேண்டும் என வேண்டிய படியிது.

என்றும் அழியாத இன்ப நலனும், யாண்டும் மாறாத பேரழகும் அதனால் பெறுதல் கருதி ’தனது உயிரை ஆய்ந்து வருதல் அழகு’ என்றது.

புறத்தே உடலழகைப் பார்த்து ஒழிந்து போகாதே! அகத்தே உன் உயிரழகை நோக்கி உயர்ந்து கொள்க என்கிறார் கவிராஜ பண்டிதர்.

நேரிசை வெண்பா

என்னையெண்ணிப் பாராமல் இந்த உடலழகைக்
கொன்னே நினைந்து குடியழிந்தேன் - பின்னேநான்
கண்டேன் எனதுயிரைக் காணாத பேரின்பம்
கொண்டேன் உவந்தேன் குளிர்ந்து.

தன்னை அறிந்தபொழுது மனிதன் பரமானந்த நிலையனாய்ச் சிறந்து திகழ்வான் என்பது இதனால் அறிந்து கொள்ளலாம்.

அழியா அழகனாய் ஒழிவில் இன்பனாய் நீ உறைந்துள்ளாய்: அதனை உணர்ந்து உய்க என்கிறார் கவிராஜ பண்டிதர். நிலையான அழகின் நிலை இதனால் கூறப்பட்டது.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (22-Feb-19, 10:49 am)
பார்வை : 30

சிறந்த கட்டுரைகள்

மேலே